சமீப காலமாக பேட்டி என்ற பெயரில் எக்கச்சக்கமாக உளற ஆரம்பித்துள்ளார் மணிரத்னம். இதனால் அவர் ரொம்ப மினி ரத்னமாக மாறி, திரையுலகினரின் வெறுப்பைச் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.
எழுபதுகளின் இறுதியில் தான் பார்த்த மோசமான படங்கள் காரணமாக, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்தேன் என்று முன்பு கூறியிருந்தார்.
இப்போது 28 ஆண்டுகளுக்கு முன், மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரித்து, இளையராஜா இசையில் வெளியான படம் இதயக் கோயில் படத்தை மட்டமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த மணிரத்னம் பேட்டியில், ‘‘நான் டைரக்டு செய்த படங்களில் மிகவும் மோசமான படம், இதயக்கோவில். என்னை அறியாமல் அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன்'' என்று கூறியிருந்தார்.
இதைப் படித்ததும் கொதித்துப் போயுள்ளார் படத்தைத் தயாரித்த கோவைத்தம்பி.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்' என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.
கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்' இயக்குநர் ஆக்கியது என் தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியதுதான் உண்மை.
எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.
அந்த படத்தில் எனக்கு மூன்று படத்துக்கான செலவு வைத்தார் இந்த மணிரத்னம். சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது. என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்' வெற்றிப் படம்தான். ஆனால் அதற்கு காரணம் மணிரத்னம் அல்ல.
திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம் அவர்களே... நீங்கள் வழக்கம்போல பேசாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது!நன்றி தட்ஸ் தமிழ்
டிஸ்கி} இன்று காலைமுதல் கடும் மின்வெட்டு அதனால் சொந்த பதிவு எழுத நேரமில்லை! மத்தபதிவுகளை படிக்க கரண்டு தொடருமா தெரியவில்லை! நன்றி!