விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் விரைவில் திரையரங்குகளில், வெளியாகிறது. டி.டி.எச்., சேவையில், பிப். 2ம் தேதி, வெளியிடப்படுகிறது. இதற்கிடையே, "விஸ்வரூபம் படத்தில், முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தை வெளியிடுவதற்கு முன், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட வேண்டும். விமர்சனத்துக்குரிய காட்சிகள் இருந்தால், அவற்றை நீக்கிவிட்டு, படத்தை வெளியிட வேண்டும் என, முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் கமல், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட்டுக் காட்டினார். படத்தை பார்த்த முஸ்லிம் அமைப்பினர், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளனர். எனவே, படத்தை தடை செய்யவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஸ்வரூபம் தடை செய்ய வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் உள்துறை செயலரிடம், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.இப்படத்தை எதிர்த்து 23ம் தேதி(வியாழன்) மாலை ஆர்பாட்டம் நடத்தப் போவதாக, முஸ்லிம் அமைப்புகள் கூறியிருந்தன. ஒரு வேளை படம் வெளியிடப்பட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில்,இப்படத்தை வெளியிட, 15 நாட்கள் தடை விதிக்குமாறு, அரசு தரப்பில் இருந்து, மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களும், இப்படத்திற்கு, 15 நாட்களுக்கு வெளியிட தடை விதித்துள்ளனர்.இந்த, 15 நாட்களில், விஸ்வரூபம் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு, அதன் பின் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து, இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. நன்றி: தினமலர்