ஆறாவது வயதில் தடம் பதிக்கிறது தளிர்!
ஜனவரி 4, 2011 மதிய நேரம் எப்படியோ ப்ளாக் ஒன்றை ஆரம்பித்து அழகி எழுத்துருவில் எழுத்துக்களை தேடித் தேடிப் பிடித்து ஓர் பொங்கல் வாழ்த்துக் கவிதை அச்சடித்து அதை அப்படியே ப்ளாக்கிலும் பேஸ்ட் செய்தேன். முதல் முதல் பதிவே காப்பி-பேஸ்ட் தான். இதுதான் என்னை கொஞ்ச நாளுக்கு விடாமல் இருந்தது போலும்.
திரட்டிகள் பாலோயர்கள், சக வலைப்பூக்களை படிக்க வேண்டும் என்ற எந்த அறிமுகமும் தகவலும் தெரியாது. நானே கூகுளில் தேடி சுயமாக உருவாக்கிய வலைப்பூ. அதன் பின்னர் ப்ளாக்கர் நண்பன் தளம் திரட்டிகளை இணைக்க உதவியது. சுமார் ஒருவாரம் கடந்தபின்னரும் நாலைந்து பதிவுகள் போட்ட பின்னும் கருத்துரைகள் ஏதும் இல்லை. அப்போது திரட்டிகளில் இணைக்கவில்லை. அதனால் பதிவர்கள் யாரும் படித்தார்களா என்பதே தெரியவில்லை.
என்னுடைய ஐடியில் இருந்து நானே என் மனைவி பெயரில் ஒரு கமெண்ட் போட்டு திருப்தி பட்டுக்கொண்டேன். முதலில் இண்டிலி, உலவு என்ற திரட்டிகளில் இணைத்தேன். தமிழ்மண இணைப்பு சுலபத்தில் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் ஓட்டுப்பட்டை இணைக்கவும் மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும் தமிழ்மணத்தில் இணைத்த பின்னர் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ்மணத்தில் இணையும் போது 1000த்துக்குமேலாக இருந்த எனது ரேங்க் மூன்று மாதங்களில் 500க்கு கீழே இறங்கி வந்தது. ஆனால் பிற தள பதிவுகளை பகிர்ந்தமையால் தமிழ் மணம் என்னை நீக்கியது.
வலைப்பூ என்பது முகநூல் போல என்று நினைத்து முதலில் எழுதியும் பகிர்ந்து கொண்டும் இருந்தேன். 2012ல் கொன்றைவனத் தம்பிரான் என்ற சக பதிவர் நான் பிற தளங்களுக்குச் சென்று என்னுடைய பதிவு குறித்து விளம்பரம் செய்வது குறித்து கேலி செய்ய விவாதம் வளர்ந்து பின்னர் பிற தளப்பதிவுகள், சினிமா கிசுகிசுக்கள் போன்றவற்றை பகிர்வதை நிறுத்த ஆரம்பித்தேன். என்னுடைய எழுத்து பலம் எனக்கு புரிய வைத்தவர் அவர்தான். சொந்தமாக படைப்புக்களை எழுதத் துவங்கினேன்.
பிற தளங்களில் குறிப்பாக செய்திதளங்களின் பகிர்வுகளால் நிறைந்து குப்பையாக கிடந்த தளிரில் 2012 இறுதியில் சுத்தம் செய்தேன். அப்போதே ஆயிரம் பதிவுகளுக்கு மேலிருந்தாலும் நிறைய குப்பைகள் அதையெல்லாம் குப்பைத்தொட்டிக்கு அனுப்பினேன். 2013 முதல் என் தளத்தில் அவ்வாறான பகிர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை. சொந்த படைப்புக்கள், விமர்சனங்கள் என்று எழுத ஆரம்பித்தேன். நகைச்சுவை மட்டும் பிற எழுத்தாளர்கள் வாரப்பத்திரிக்கையில் எழுதியதை எடுத்து பகிர்ந்துவந்தேன். அதையும் கோவை ஆவி அவர்கள் அது எதுக்கு பாஸ்? என்று கேட்டார். அதையும் சொந்தமாக எழுத ஆரம்பித்தேன்.
நிறைய வாசகர்கள் வர ஆரம்பித்தார்கள், தொடர ஆரம்பித்தார்கள் பின்னூட்டங்கள் நிறைய வர ஆரம்பித்தன. நிறைய ஆலோசனைகள் சொன்னார்கள், நல்ல நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். பாக்யா, வாரமலர் போன்ற வார இதழ்களில் ஒரு சில படைப்புக்கள் பிரசுரம் ஆயின.
அதுமட்டும் இன்றி வலைச்சரம் என்ற வலைப்பதிவுகளை அறிமுகம் செய்யும் அருமையான வலைப்பூவில் இருமுறை ஆசிரியர் ஆகும் வாய்ப்பு பெற்று என்னால் இயன்றவரை பதிவர்களை அறிமுகம் செய்துவைத்தேன். பதிவர் திருவிழா ஒன்றிற்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
மிக அருமையான எளிமையான திறமையான நண்பர்களை இந்த வலைப்பூ எனக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும்? மிக்க மகிழ்ச்சியோடு ஆறாவது வயதில் தளிர் தடம் பதிக்கிறது. இந்த தடத்தை பின்பற்றி புதியவர்கள் வருவார்களேயானால் அதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்.
என்னைத் தொடரும் நூற்றுக்கணக்கான பாலோயர்கள், வாசகர்கள்,மற்றும் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கும் நண்பர்கள், வலைப்பூ தோழமைகள், மற்றும் திரட்டிகள் அனைவருக்கும் இந்த சமயத்தில் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் ஆதரவோடு இந்த ஆண்டில் மென்மேலும் தளிர் தழைத்தோங்கும் என்பதில் உறுதியோடு விடைபெறுகிறேன்! நன்றி!