Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 2

$
0
0
   தேர்வு!

   இந்த முறை எப்படியும் பாஸாகிவிட வேண்டும். ஏற்கனவே இரு முறை எழுதி தோற்றுவிட்டோம். சக தோழிகள் முன் தலைகாட்ட முடியவில்லை! இந்த முறை எப்படியாவது பாஸ் செய்துவிடு பிள்ளையாரப்பா! என்று பிள்ளையார் கோயில் முன் வேண்டிக்கொண்டு டெட்  (T E T) தேர்வெழுத படபடப்புடன் உள்ளே நுழைந்தார் ஆசிரியை கோமதி.

 துக்கம்!
   துக்கம் பீறிட்டெழுந்தது. ஒற்றைப் பிள்ளை. அவனுக்கும் தெளிவு இல்லை. தந்தை இறந்துபோக அதுகூடத் தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தது. கணவனை இழந்தவள் கதறிக் கொண்டிருக்க துக்க வீடே அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தது. அவளது கதறல் விண்ணை பிளக்க பார்க்கவே பரிதாபமாக இருக்க ரமேஷால் கண்ணீரை அடக்க முடியவில்லை! இது மாதிரி நிலை யாருக்கும் வரக்கூடாது பகவானே! என்று சொல்லிக் கொண்டே கண்ணீரைத் துடைத்தவாறு தியேட்டரைவிட்டு வெளியேறினான்.

பங்கு!
   அப்பா இருந்தவரை நன்றாகத்தான் இருந்தது. பேசிக்கொண்டே இருந்தவர் இப்படி புசுக்கென்று சொல்லிக்கொள்ளாமல் போய்விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவரை ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை பாகப்பிரிவினை. பெரியவன் எனக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும் என்று அடம்பிடிக்க சின்னவனோ இளையவனான எனக்கு நீ விட்டுத் தரக்கூடாதா? என்கிறான். யார் சொல்லியும் அடங்காமல் அடிதடி கட்டிப் புரள்கிறார்கள். அப்பா கொடுத்துப் போன காட்பரீஸ் சாக்லெட் பாரை பிரித்துக் கொள்ள…

இனாம்!
   பொங்கல் இனாம் கேட்க காலையிலேயே வரிசையில் நிற்பார்கள். முன்பெல்லாம் ஒன்று இரண்டு என்று கொடுத்தால் வாங்கிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பத்து கொடுத்தால் கூட போடா பெரிசா கொடுத்திட்டாரு… என்று பின்னால் பேசுகின்றார்கள். ச்சே! எப்படியும் ஒரு ஐநூறு இன்று செலவாகிவிடப் போகிறது.. எல்லோருக்கும் இருபது, ஐம்பது, நூறு என்று பிரித்து கொடுத்துவிட்டு வேக வேகமாக தன்னுடைய முதலாளியை பார்க்க கிளம்பினார் ஈஸ்வரன்.  “ வந்துட்டான் பாரு இளிச்சுகிட்டு காலங்காத்தாலே பொங்க இனாம் கேட்டுகிட்டு” அங்கே அவரது முதலாளி முணுமுணுத்துக் கொண்டு இருந்தார்.

பேச்சு!
   கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு  தன் வசீகர பேச்சினால் வகுப்பெடுத்து வாழ்க்கை முன்னேற்ற பாடம் சொல்லி கைதட்டல் பெற்ற அந்த பேச்சாளர் வீடு திரும்பினார். வீடு முழுக்க இரைச்சல்! ஏம்மா இத்தனை சத்தம்? கொஞ்சம் குறைச்சு வைக்கக் கூடாதா? என்று சொல்ல அவர் பேச்சைக் கேட்க அங்கு யாரும் தயாராய் இல்லை.


மார்க்!
   இதெல்லாம் ஒரு மார்க்காடா? நாங்கள்லாம் அந்த காலத்துல… மகன் நீட்டிய ப்ரொக்ரஸ் கார்ட் பார்த்து கத்த, அப்பா…! ஓவரா பண்ணாதே.. நீ எவ்ளோ மார்க் எடுத்தேன்னு தாத்தாகிட்ட கேட்டுட்டுதான் வந்திருக்கேன் என்றான் பையன். ஓவர் ஸ்மார்ட்.

வரம்!
 வேண்டுவன எல்லாம் தரும் அந்த விநாயகர் கோயிலை சுற்றி வலம் வந்து கொடிமரம் முன் விழுந்து வணங்கியவன் முன் அந்த பலகை தென்பட்டது. கோயிலின் திருப்பணிக்காக பக்தர்களின் நன்கொடை வேண்டிக்கொண்டிருந்தார் விநாயகக் கடவுள்.

முரண்!
   காந்தி வேசம் போட்டு கள்ளுண்ணாமை பிரச்சாரம் செய்ய இயக்கத்தினருடன் போன பெரிசு சம்பளம் வாங்கியதும் டாஸ்மாக் பாரில் நுழைந்து கை நடுங்க சரக்கடித்துக் கொண்டிருந்தார்.

ஜீவகாருண்யம்!
     எங்க அப்பா ரொம்பவே ஜீவகாருண்யம் பார்ப்பாரு. ஒரு ஈ எறும்பு கொசுவைக் கூட கொல்ல மாட்டாரு. ஏன்? வீட்டுக்குள்ளே கொசுவர்த்தி கொளுத்த கூட விடமாட்டாரு அவளோ ஜீவ காருண்யம்  என்று சொல்லியபடியே நண்பனை வீட்டுக்குள் அழைத்து வந்தான் வினோத். உள்ளே “ ஏண்டி ஒரு காபியைக் கூட ஒழுங்கா போட மாட்டியா?’ என்று பளாரென்று மனைவியை கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தார் அவன் அப்பா.

பயம்!
         ஆள் நடமாட்டம் இல்லாத இடமா பார்த்து  ஒதுங்கணும்!
   அதற்கு அந்த காலத்து பாழடைந்த பங்களா மாதிரி இடங்கதான் லாயக்கு!
     இப்ப அந்த மாதிரி எங்கே இருக்கு?
       எங்க பாரு ஒரே மனுஷங்க நடமாட்டம்  பேய் இரைச்சல்!
   யாரும் தொந்தரவு செய்யாம  இருக்கிறமாதிரி ஒரு இடமும் கிடையாதா?
     ம்... எங்க.. இருக்கு? முன்னே மாதிரி புளிய மரமும் முருங்கை மரம் கூட  கிடைக்க மாட்டேங்குது..! ஒரே மனுஷங்க குவியலா இருக்கா பயமா இருக்குது!
    ரெண்டு பேய்கள் பேசிக்கொண்டன.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles