Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தவளைகளின் கச்சேரி! பாப்பா மலர்!

$
0
0
     தவளைகளின் கச்சேரி!

ரொம்ப காலத்துக்கு முன்னாடி அழகாபுரி நகரத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தாரு. அவர் அழகாபுரியை அழகா மாத்தறேன் அப்படின்னு சபதம் எடுத்துக்கிட்டு நகரை விரிவு பண்ணாரு. அகல அகலமான சாலைகள். நிறைய அலங்கார விளக்குகள் நாடே ஜெகஜ்ஜோதியா மாத்தினாரு. அந்த சாலைகளில் எந்த தடையும் இல்லாம ரதங்கள் அதிவேகத்தில் பயணிக்கலாம்.

     சாலை வசதி இருக்கிறதாலே பெரிய பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அழகாபுரிக்குள்ள வந்துருச்சு. அந்த தொழிற்சாலைகளிலே வேலை செய்ய நிறைய மக்களும் வந்து சேர்ந்தாங்க. தொழிற்சாலைகள் நிறைய நிலத்தடி நீரை உறிஞ்சுகிச்சு. அதே சமயம் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா காணாம போயிருச்சு. தொழிற்சாலை கழிவுகளும் மக்கள் பெருக்கத்தாலே வீட்டு கழிவுகளும் அந்த நகரத்துலே ஓடின ஆத்துலே கலந்துருச்சு.

   தெள்ளிய நீரோடையா பாய்ஞ்ச ஆத்துலே ஒரே கழிவுத் தண்ணி கலங்கலா ஓடுச்சு. ஆற்றிலே வசிச்ச மீனுங்க சின்ன சின்ன உயிரினங்கள், தவளைகள், பூச்சிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப் போச்சுங்க. நகரை அழகு படுத்தறேன் வேலைவாய்ப்பை அதிகப் படுத்தறேன்னு சொன்ன ராஜாவுக்கு இப்ப நாம தப்பு செய்துட்டோம்னு தோணிச்சு.

   தொழிற்சாலை புகைகளாலே வானமே மாசு பட்டு ஒரே கறுப்பா போயிருச்சு! நகரத்துலே வந்து போன வாகனங்கள் விட்ட புகையும்  சேர்ந்து காற்றுல மாசு ஏற்பட்டு போச்சு. நகரத்துலே போதிய மரங்கள் இல்லை. எங்க பார்த்தாலும் வானுயர்ந்த கட்டிடங்கள் அதனாலே நகரமே வெப்பமயமா ஆகிப் போச்சு.

     ஒரு காலத்துலே நிறைய மழை பொழிவை தந்துகிட்டிருந்த மேகங்கள் இந்த வெப்ப காற்றினாலே அழகாபுரி பக்கமே திரும்பலை! மழையே இல்லை! குடிதண்ணீருக்கு பற்றாக்குறை வந்துருச்சு. ரொம்ப தூரத்துல இருந்து கிராமத்திலே இருக்கிற ஏரி நீர் குளத்து நீர், அப்புறம் ஆழ்துளை குழாய் போட்டு நீரை நகரத்துக்கு கொண்டு வந்தும் நீர்பற்றாக்குறை இருந்துக்கிட்டே இருந்துச்சு
.
    மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவே முடியலை. அதனாலே நகரமே மாசு அடைஞ்சு போச்சு. நதிகள்லே வசிச்ச மீன்கள் எல்லாம் கொஞ்சம் செத்து போய் மிச்சம் கடலுக்கு போயிருச்சு. தவளைகளாலே கடலுக்கு போக முடியலை!

     அழகாபுரி  சுரபி ஆத்துலே வசித்த தவளைகள் எல்லாம் ஒரு நாள் கூடிச்சுங்க.. "இந்த ஆத்துலே நம்மலாளே வசிக்க முடியலை! வேற இடமும் நமக்கு இல்லே. இந்த நதியை சுத்தப் படுத்தனும்"அப்படின்னு சொல்லுச்சுங்க.

  அப்ப தலைவர் தவளை சொல்லுச்சு, "இந்த நாட்டு மஹாராஜாவாலேயே இந்த ஆத்தை சுத்தப் படுத்த முடியலை! நாம எப்படி சுத்த படுத்தறது. இந்த மனுஷங்க சும்மா இருப்பாங்களா? அவங்க போடற கழிவுகளை அள்ளி முடிக்க நம்ம இனம் போதாது"அப்படின்னு சொல்லுச்சு.

   அப்ப ஒரு இளவயது தவளை சொல்லுச்சு! "முயன்றால் முடியாதது எதுவும் இல்லே! நாம வருண பகவான் கிட்ட முறையிட்டு மேகங்களை பொழிய சொல்வோம். விடாது மழை பேய்ஞ்சா அதுலே அழுக்கெல்லாம் அடிச்சுக்கிட்டு போயிரும். வெள்ளம் பாதிச்சாவாது இந்த நாட்டு மக்களுக்கு புத்தி வந்து நீர் நிலைகளை மதிக்க ஆரம்பிப்பாங்க. இப்பவே நாம போய் வருண பகவானை பார்ப்போம்"அப்படின்னு சொல்லுச்சு.

      உடனே வருணபகவானை நினைச்சு எல்லாம் தவளைகளும் ப்ரார்த்தனை பண்ணிச்சுங்க. தேவலோகத்துல இருந்த வருண பகவானுக்கு தவளைகளோட  ப்ரார்த்தனை கேட்டுச்சு. அவரும் இரக்கப்பட்டு தவளைங்க கிட்டே பேசினாரு.

    "தவளைங்களே உங்க கோரிக்கை என்ன?"ன்னு கேட்டாரு…
 "தவளைங்களும் இந்த மாதிரி அழகாபுரி ஆத்துலே வசிக்கிறோம்! அங்க ஒரே கழிவு தண்ணியா ஓடுது அதனாலே எங்களாலே வசிக்க முடியலை! நீங்கதான் மேகங்களை அனுப்பி மழை பொழிய வைச்சு ஆத்துல இருக்கிற மாசை நீக்கணும்!"னு வேண்டிகிச்சுங்க.

      "ஏம்பா தவளைங்களே நான் மேகங்களை அனுப்புவேன். ஆனா மேகங்கள் குளிர்ச்சி அடைஞ்சாதான் மழை பொழிய முடியும். உங்க ஊருலே ஒரே வெப்ப காத்தா இருக்கே நீங்க வாயு பகவான் கிட்டே போய் ஈரக்காற்றா வீசச் சொல்லுங்க அப்பத்தான் மேகம் குளிர்ந்து நிறைய மழை பொழியும்"னு சொன்னாரு.

      தவளைங்களும் வாயுபகவானை வேண்டுதல் பண்ணுச்சுங்க. வாயு பகவானும் தவளைங்க குறைய கேட்டுகிட்டாரு. ஆனா அவர் சொன்னாரு "உங்க ஊரிலே மரங்களே இல்லை. நிறைய தொழிற்சாலைங்கதான் இருக்கு நான் குளிர்ந்த காத்துக்கு எங்க போவேன்?"அப்படின்னாரு.

     "அப்ப எங்க கதி என்ன? நாங்க எல்லாம் செத்து போக வேண்டியதுதானா?"ன்னு “ஓ”ன்னு அழுதுச்சுங்க  தவளைங்க! அதுங்க கண்ணீர் ஆறா பெருக்கெடுத்து வர வாயு பகவானுக்கு ஒரு யோசனை தோணிச்சு.

   "தவளைங்களா இங்க நீங்க அழுது கச்சேரி வைக்கிற மாதிரி உங்க ஆத்துலே இறங்கி  அழுது கச்சேரி வையுங்க ஒங்க கண்ணுலே இருக்கிற ஈரத்தை காத்தா கடத்தி மேகத்தை பொழிய வைக்கிறேன்"னு சொன்னாரு.
   தவளைங்களும் சம்மதப்பட்டு ஆத்தங்கரையிலே வந்து “ஓ”ன்னு அழுது கச்சேரி வச்சிருச்சுங்க. அது அழ வருண பகவானும் மேகக் கூட்டங்களை அனுப்பி வைச்சாரு. மேகத்து மேல ஈரக்காற்றை பட வைச்சாரு வாயு பகவான்.

   மேகங்களும் தவளைங்க அழுகைக்கு பரிதாபப் பட்டு இருக்கையிலே ஈரக்காற்று பட்டு மழையை பொழிய துவங்கின. ஆஹா! ரொம்ப நாளுக்கு அப்புறமா மழை பெய்யுது விடாதீங்க இந்த கச்சேரியை இன்னும் உற்சாகமா பாடுங்கன்னு தவளைங்க இன்னும் வேகமா அழ ஆரம்பிச்சுது. மேகமும் விடாம மழை பொழிய ஆத்துலே வெள்ளம் கரை புரண்டிருச்சு.

   ஆத்து தண்ணி அழுக்கெல்லாம் அடிச்சிக்கிட்டு போக தவளைங்களுக்கு ஒரே குஷி! இன்னும் அதிகமா பாட ஆரம்பிச்சுதுங்க வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடி கழிவா இருந்த ஆறு  இப்பதான் உண்மையான நதியா மாறுச்சு.

    வருணபகவானுக்கும் வாயுபகவானுக்கும் நன்றி சொன்ன தவளைங்க,"இனியாவது இந்த மனுச பசங்க நம்மளை நிம்மதியா இருக்க விடுவானுங்களா பார்க்கணும்"னு சொல்லி தண்ணியிலே குதிச்சு விளையாட ஆரம்பிச்சுதுங்க.

     "இனியும் அவங்க திருந்தலைன்னா நம்ம கச்சேரியை தொடர்ந்து பாடி மனுஷங்களை உலகத்தை விட்டே விரட்டி அடிச்சுட்டா போச்சு"அப்படின்னு சொல்லுச்சு ஒரு தவளை
அதைக்கேட்டு மத்த தவளைங்க எல்லாம் “ஹ்ஹாஹா’ன்னு சிரிச்சுக்கிட்டே இருந்துச்சுங்க.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

    

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


படம் இயக்குவது என் நோக்கம் அல்ல - சிவகார்த்திகேயன்


நுழைவுத்தேர்வு


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சேரி பிகேவியர்