இன்றைய தினமணி கவிதை மணி இணையதளக் கவிதைப் பக்கத்தில் வெளியான எனது கவிதை! தொடர்ந்து ஆதரவளித்து என்படைப்புக்களை வெளியிட்டு வரும் தினமணி குழுமத்திற்கு மிக்க நன்றி!
கவிதையை வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் வலையக நட்புக்களுக்கு மனமார்ந்த நன்றி!
மேகத்தில் கரைந்த நிலா: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 04th November 2017 05:43 PM | அ+அ அ- |
கிராமத்து இரவொன்றின் நீள்பொழுதில்
தனியனாய் எனக்கு
நீண்ட துணையாக வருகின்றது நிலா!
அதன் மோனத்தில் வசீகரித்து மூழ்கையில்
வதனத்தில் உதிக்கிறது ஓர் புன்னகை!
நடுவானில் கம்பீரமாய் ஒளிவீச
சுற்றிலும் மின்மினிகளாய் நட்சத்திரங்கள்!
இரவின் கருமையை
இரவின் தனிமையை
அழகாக்கிய நிலவை ரசிக்கையில்
ஆபத்தொன்று சூழ்ந்தது!
கருமேகக் கூட்டமொன்று
உருவாகி நிலவினை விழுங்க வேகமெடுத்தது!
பதறிப்போனேன்! ஆனால் பதறவில்லை நிலா!
மேகம் நெருங்க நெருங்க
ஒளியிழந்தது பூமி! தன் காதலியை காக்க முடியாமல்!
மேகம் சிறிது சிறிதாய் நிலவை விழுங்க
நிமிடங்கள் நீண்டது!
கருமேகத்தினுள் ஓளிவெள்ளம் பாய்ச்சி
கரைந்து மறைந்த நிலா
மெல்ல தலைகாட்டியது!
மேகம் மறைக்க முடியுமோ என் புகழை!
மேகத்தில் கரைந்த நிலா
மேலும் அழகாகி குளிர்ந்தது!
குளிர்ந்த மேகம் பொழிந்த மழையில்
தேங்கிய நீரில்
பூமியில் தவழ்ந்த நிலா
மவுனமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தது!