பல்வேறு தடைகளைத் தாண்டி கமல் நடித்த விஸ்வரூபம் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இத்தகவலை நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி தமிழகத்தில் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து நடிகர் கமலுக்கு அரசியல் கட்சியினர் சிலர் ஆதரவு தெரிவித்தனர். விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் அரசியலாவதை உணர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது இத்திரைப்பட விவகாரத்தில் கமல் மீது தனக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே படத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் விளக்கமளித்தார். தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்புகளுடன் கமல் பேச விரும்பினால், தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நடிகர் கமல், இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் உள்துறை செயலாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் படத்தில், சர்ச்சைக்குரிய 7 இடங்களில் ஒலி நீக்கம் செய்ய கமல் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சுமூக உடன்பாடு ஏற்பட்டது. மூன்று தரப்பிலும் தங்களது வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. விஸ்வரூபம் படம் திரையிடப்படும் தியேட்டர் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையுத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து இன்று கமல் தனது வழக்குளை வாபஸ் பெற்றார்.
இதனிடையே, இன்று மாலை நடிகர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் திரைப்படம் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 7) வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து மிக நீண்ட போராட்டத்திற்குப்பின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஸ்வரூபம் 7ம் தேதி திரையரங்குகளை முற்றுகையிட உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கமல் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.
நன்றி: தினமலர்