தன்னம்பிக்கை நாயகி!
பாண்டிச்சேரியில் வசிக்கும் கோதையம்மாளுக்கு வயது 75க்கும் மேல் இருக்கும். பிள்ளைகள் தறுதலைகள் ஆகி சென்றுவிட்டார்கள். தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கை இழக்கவில்லை இந்த மூதாட்டி. தெருதெருவாக சென்று பிச்சை எடுக்கவோ இல்லை அனாதை ஆஸ்ரமங்களில் சேரவோ இல்லை! தன்னம்பிக்கை கொண்டு தனக்குத்தெரிந்த தொழில் செய்து முதுகு கூன் விழுந்தாலும் வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்கிறார் இந்த மூதாட்டி. முதலில் அவருக்கு தலை வணங்குவோம்.
அப்படி என்ன செய்து ஜீவனம் நடத்துகிறார் கோதையம்மாள். அதிகாலையில் வீடு வீடாக சென்று கோலம் போடுகிறார். ஒரு கோலம் போட கூலியாக ஐந்துரூபாய் வசூல் செய்கிறார். இப்படி மொத்தத்தில் மாதம் 1500 ரூபாய் வரை தோராயமாக சம்பாதிக்கிறார். ஒரு வீட்டில் மூன்று வேளை உணவு அளித்து 500 ரூபாய் சம்பளம் தருகிறார்கள். அதில் தனது உணவுக்கான தொகையை திருப்பி தந்து விடுகிறார். வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லையாம் இந்த தன்மான தாய்.
இப்படி சம்பாதித்து பத்தாயிரம் ரூபாய் வரை தனக்கு தெரிந்தவர்களிடம் சேர்த்து வைத்து கொடுத்துள்ளார். இது அவரது இறப்புக்குப் பின் நடக்கும் ஈமச்சடங்குகளுக்கான தொகையாம். இறந்தபின்னும் பிறருக்கு கடன் வைக்க வேண்டாம் என்று இந்த ஏற்பாட்டை செய்துள்ளாராம்.
கை கால்கள் நன்றாக இருக்கும் போதே பிச்சை எடுக்கும் பல மனிதர்கள் முன்னே கோதையம்மாள் உயர்ந்து நிற்கிறார். அவருக்கு ஒரு சல்யூட் வைப்போம். அவரை நடுத்தெருவில் அனாதையாக்கிய பிள்ளைகளுக்கு ஒரு குட்டு வைப்போம்.
இந்த நியுஸ் படிக்கும் போதே ஒரு நியுஸும் கூடவே ஞாபகம் வந்தது. விழுப்புரத்தில் ஒரு பிச்சைக்காரர் தெருவோரம் இறந்து கிடந்துள்ளார். வயதானவர். அவரது உடமைகளை சோதித்த போது கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் அதுவும் 1000, 500ரூபாய் தாள்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்துள்ளது. செல்போன் ஒன்றும் இருந்துள்ளது. அதில் உள்ள எண்களை கொண்டு இறந்தவர் யார்? அவரது உறவினர்களை கண்டுபிடிக்கும் பணியை போலீஸ் செய்து வருகிறதாம் இது கடந்த வாரம் படித்தது.
ஒரே உலகில் இரண்டு முரண்பட்ட மனிதர்கள்!
சொந்தக் காலில் நிற்க துணிந்த மனுஷி ஒருவர்! பிச்சை எடுத்த காசை அனுபவிக்காமல் போன மனுஷர் ஒருவர்!
விந்தையான உலகமடா இது!
நன்றி முகநூல்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!