புன்னைநல்லூர் புற்றுமாரியம்மன்!
அகிலம் எங்கும் அருளாட்சி செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அன்னை எத்தனையோ வடிவங்களில் காட்சி தருவாள். கருணைவடிவாகவும், காளி சொருபமாகவும், இரண்டே கரங்களுடனும் பதினாறு கரங்களுடனும் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் பலவிதங்களில் காட்சிதரும் அம்மன்களை தரிசித்து இருக்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் புன்னை நல்லூரில் புற்றுவடிவில் எழுந்தருளி வித்தியாசமாக அருள்பாலிக்கிறாள் அன்னை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவளை திரையில் வரைந்து வழிபடுவது பக்தர்களின் வழக்கம்.
சோழ மன்னர்கள் போரில் வெற்றிபெற காளி வழிபாடு செய்து வந்தனர். தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல்தெய்வங்களாக அமைத்தனர். கிழக்குப்பக்கம் அமைக்கப்பட்ட சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன். ‘சோழசம்பு’ என்ற நூல் இதை தெரிவிக்கிறது.
1680ல் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகராஜா திருத்தல யாத்திரை செய்யும்போது சமயபுரத்தில் தங்கினார். அன்றிரவு அம்பிகை அரசரின் கனவில் தோன்றி ஒரு புன்னைக் காட்டில் புற்றுவடிவில் தான் இருப்பதாகவும் தன்னை வழிபடும்படியும் கூறிவிட்டு மறைந்தாள். அரசரும் அவள் குறிப்பிட்ட இடத்தை கண்டறிந்து புற்று இருந்த இடத்தில் மேற்கூறை அமைத்து புன்னை நல்லூர் எனப் பெயரிட்டு இந்த கிராமத்தை கோயிலுக்குத் தானமாக வழங்கினார்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் இந்த கோயிலுக்கு மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம்,மதில்சுவர்கள் கட்டி திருப்பணி செய்துள்ளார்.
சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவம் கொடுத்து ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
மூலவர் புற்று மண்ணால் ஆனதால் அபிஷேகம் கிடையாது. அதற்கு பதிலாக தைலக்காப்பு அணிவிக்கப்படுகிறது. மூலவர் அருகில் உள்ள விஷ்ணு துர்கை மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் உண்டு. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தைலக்காப்பு செய்யப்படும். அப்போது அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து அதில் ஆவாஹனம் செய்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கும். தைலக்காப்பில் இருப்பதால் இளநீர், தயிர் நைவேத்தியம் செய்தல் விசேஷம். 2014 ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தைலக்காப்பு செலுத்தப்பட உள்ளது.
திருமணம் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வழிபட பிரார்த்தனை ஈடேறும். கட்டி, பரு உள்ளவர்கள் இங்குள்ள குளத்தில் வெல்லம் வாங்கி கரைத்தால் அதுபோல நோயும் கரைந்து போகும் என்று நம்புகிறார்கள்.
தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஆறாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது புன்னை நல்லூர். காலை ஐந்துமணி முதல் இரவு ஒன்பதுமணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
புற்றுவடிவில் அருள் பாலிக்கும் இந்த அதிசய மாரியம்மனை தரிசித்து ஆனந்தம் அடைவோமாக!
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!