Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

நிதர்சனம்!

$
0
0
நிதர்சனம்!


கடலலைகள் ஓயாமல் ஆர்பரித்துக்கொண்டிருந்தன மெரினாவில். சுற்றிலும் ஜனங்களின் இரைச்சலும் வியாபாரிகளின் குரல்களும் ஒலித்துக்கொண்டிருந்தன. இவை எதுவும் மோகனின் காதில் விழவில்லை! அவன் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது. அவனது காதலி சுமதி வீட்டார் பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்கொள்ள சம்மதித்துவிட்டாளாம். அரசல் புரசலாய் விழுந்த தகவலை மோகன் நம்பவில்லை! இன்று அவளே போன் செய்து கூறவும் அவனதுமனம் எரிமலையாய் வெடித்தது. அவளே போன் செய்து மெரினாவிற்கு வரச்சொல்லி இருக்கிறாள். வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்.
   இதே மெரினாவில் கடலலைகளில் காலை நனைத்தபடி எத்தனை நாள் சுற்றிவந்திருப்போம்! இன்று அதையெல்லாம் மறந்து எவனையோ கட்டிக்கொள்வாளா? பழகுவதற்கு நான். பஞ்சணைக்கு அவனா? நாக்கை பிடுங்கிக் கொள்வது போல் நான்கு கேள்விகள் கேட்கவேண்டும் என்று குமுறிக்கொண்டிருந்தான் மோகன்.
  “ஹாய் மோகன்! ஏன் இப்படி முகத்தை தூக்கி வைச்சிக்கிட்டு உக்காந்திருக்கிறே?” என்று அருகில் வந்து அமர்ந்தாள் சுமதி.
மோகன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். என்ன மோகன் கோபமா? வெட்டியா கோபப்பட்டு பிரயோசனம் இல்லே! உனக்கு எவ்வளவு நாள் டைம் கொடுத்தேன்! ஆனா நீ எதுவும் முயற்சி பண்ணலை! எங்க அப்பாகிட்ட வந்து பொண்ணு கேட்க சொன்னேன். தயங்கி நின்னே.. ஏன்? சொந்தமா உனக்கு ஒரு சம்பாத்தியம் இல்லை! இத்தனை நாள் ஏதாவது வேலை தேடிக்கிட்டியா? இல்லை! நானும் எத்தனை நாள் தான் காத்துக்கிட்டு இருக்கறது? எனக்கு பின்னாடி வேற ஒருத்தி இருக்கா?
   அதுக்கு? நாம பழகினதை மறந்துட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிப்பியா? சில உண்மைகள் சுடத்தான் செய்யும் மோகன். வேலை இல்லாத உன்னை கட்டிக்கிட்டு என்ன பண்ண முடியும்? அப்பா- அம்மாவை எதிர்த்துகிட்டு எதிர்கால வாழ்க்கையை பாழாக்கிக்க சொல்றியா? நண்பர்களா பிரிஞ்சிடுவோம்! நீயும் நல்ல வேலையைத் தேடிக்கோ! அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ! என்னோட கல்யாண பத்திரிக்கையோட உன்னை சந்திக்கிறேன்! ஒரு நண்பனா என்னை வாழ்த்து! வரட்டுமா? என்றபடி எழுந்தவளை தடுத்தான் மோகன்.
  நில்லு ஒரு நிமிஷம்! நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டு போ!
  என்ன கேக்க போறே மோகன்?
அதெப்படி என்னை மறந்துடுன்னு இவ்வளவு ஈசியா சொல்ல முடியது உன்னாலே? இத்தனை நாள் பழகின என்னை கை கழுவறாப்பல விட்டுட்டு அவனோட எப்படி குடும்பம் நடத்த முடியும்? இதுக்கும் ‘தேவடியா தனத்துக்கும்” என்ன வித்தியாசம்?
   நிறுத்து மோகன்! நீ பாட்டுக்கு பேசிக்கிட்டு போறியே! சரி நிஜத்துக்கு வருவோம்! நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வை! என்னை வச்சு ஒரு நாள் உன்னால சோறு போட முடியுமா? உனக்கு ஒரு வேலையும் கிடையாது! கையில பணமும் கிடையாது. உனக்கேத்த ஒரு தொழிலையோ வேலையையோ தேடிக்கவும் மாட்டேங்கிற! நீயும் இத்தனை நாள் ஏதாவது வேலை தேடிப்பேன்னு நானும் எங்க அப்பா- அம்மாகிட்டே பார்த்த மாப்பிள்ளையெல்லாம் வேணாம்னு சொல்லி தட்டிக்கழிச்சிட்டு வந்தேன். இதுவும் உனக்குத் தெரியும். அப்படி இருந்தும் நீ சும்மா திரிஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி? இப்ப காதலி பணத்துல சுண்டல் வாங்கி சாப்பிட்டா இனிக்கும். அதுவே நான் பொண்டாட்டியாகி உனக்கு சம்பாதித்து போட்டா கசக்கும். உன் ஆம்பிளை என்கிற ஈகோ எட்டிப்பாக்கும். நமக்குன்னு குழந்தை குட்டின்னு பிறந்தா அதுக்கு செலவெல்லாம் இருக்கு. ஆனா இதெல்லாம் யோசிக்காம நீ சும்மா திரிஞ்சிட்டு இருக்கே ஒரு பெண்ணான நானே வேலைக்கு போறேன். சுயமா சம்பாதிக்கிறேன் ஆனா நீ? எத்தனை நாளைக்குத்தான் உன்னை நம்பி பெத்தவங்களை ஏமாத்திக்கிட்டு இருக்கிறது?
     அவங்களுக்கும் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்திகளை எடுக்கணும்னு ஆசை இருக்கும் இல்லையா? உன்னை எப்படி மறக்க முடியும்னு கேட்டியே? ஏன் மறக்க கூடாது? கல்யாணம் ஆன உடனே பெண்ணுக்கு தன் கணவன் குடும்பம்னு ஆயிடுது. இதுல நீ வர மாட்டே! இன்னும் ஒன்னும் சொல்றேன் கேட்டுக்க! என்னை கட்டிக்க போறவர்கிட்ட நம்ம பழக்கம் பற்றியும் சொல்லிட்டேன்! அதை அவர் ஈசியா எடுத்துக்கிட்டார். என்னமோ சொன்னியே! ‘தேவடியா”ன்னு இதுதான் உன்கூட பழகினதுக்கு எனக்கு கிடைச்ச பட்டம்! இரண்டு வருசம் பழகியும் நீ என்னை புரிஞ்சிக்கலை! உன் கூட வாழ்ந்து என்ன பயன்?
   நானா உன்னை ப்ரபோஸ் பண்ணலை! நீயா தேடி வந்து காதல் கத்திரிக்காய்னு புலம்பினே! உனக்கு ஒரு வாய்ப்பு வழங்கினேன்! அதை நீ வீணடிச்சுட்டே! சினிமாவிலே வேணா இந்த மாதிரி காதல்கள் ஜெயிக்கலாம்! நிஜ வாழ்க்கையிலே நடக்காது. நிதர்சனத்தை புரிஞ்சிக்க! தாடி வளர்த்துட்டு திரியறதை விட்டு நல்ல வேலையைத் தேடிக்க! அப்புறம் என்னைவிட நல்ல பெண்ணா கிடைப்பா! நீயும் கல்யாணம் பண்ணிக்க! வரட்டுமா? குட்பை! படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு போகும் சுமதியையே பார்த்துக் கொண்டிருந்தான் மோகன்.
  அவள் சொன்னதில் உள்ள நிதர்சனம் சுட மவுனமாக திரும்பி நடக்க ஆரம்பித்தான் மோகன்.

(நான் நடத்திய தேன் சிட்டு என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையில் 96ம் வருடம் எழுதிய கதை)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles