Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 44

$
0
0
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 44


வணக்கம் வாசக அன்பர்களே! சென்ற வார இலக்கணம் கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்திருக்கும். பின்னூட்டத்திலும் தெரிவித்து இருந்தார் திரு சொக்கன். பகுபத உறுப்பிலக்கணம் என்பது எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சில சமயம் பட்டவகுப்புகளில் கூட கேட்கப்படும் கேள்வியாகும். இதை நாம் முறையாக எழுதுவதும் கிடையாது.
  பள்ளிகளிலும் இதை சொல்லிக் கொடுக்கிறார்களா? என்று தெரியவில்லை! நான் படித்தபோது இதை யாரும் முறையாக எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை! கோனார் தமிழ் உரையில் மனப்பாடம் செய்து எழுதி வந்தேன். பிறகு நான் டியுசன் எடுத்த போது இலக்கணம் ஓரளவு படித்து என் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அப்போது இதற்கு இரண்டுமதிப்பெண் வழங்கப்பட்டது. இப்போதைய சமச்சீர் கல்வி முறையில் ஒரு மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டுள்ளது.
  
கொடுக்கப்படும் வாக்கியத்தை பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் இலக்கணம் சொல்வதே பகுபத உறுப்பிலக்கணம். அதனுடைய உறுப்புக்கள்தான் பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை, சாரியை, விகாரம் ஆகிய ஆறும். சென்ற வாரம் கொஞ்சம் விரிவாக பார்த்ததில் குழப்பம் ஏற்பட்டு இருக்கும். நானும் ஆர்வக் கோளாறில் நிறைய சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். நினைவு படுத்த இங்கு சென்று வாருங்கள்:பகுபத உறுப்புக்கள்!


   பகுபத உறுப்புக்களில் அடுத்து வருவது சந்தி ஆகும்.
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது சந்தி. அதாவது பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வந்து சந்திக்க வைப்பதால் சந்தி எனப்பட்டது. சிலசமயம் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
பார்க்கிறான் = பார்+க்+கிறு+ ஆன்.
 பார் = பகுதி, க் = சந்தி கிறு= நிகழ்கால இடைநிலை, ஆன் = விகுதி
கடையார் = கடை+ய்+ ஆர்
 கடை = பகுதி  ய்= சந்தி, ஆர் = விகுதி.

சாரியை:  பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வருவது சாரியை ஆகும். இது இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
  உண்டனன்   = உண்+ட்+ அன்+ அன்
 உண் =பகுதி, ட் = இறந்தகால இடைநிலை அன் = சாரியை  அன் = விகுதி
இதில் சந்தி வரவில்லை.  ட் என்பது இடைநிலையா சந்தியா என்ற குழப்பம் மேலிட வாய்ப்பு உள்ளது. உற்று நோக்கினால் ட் என்பது இறந்தகால இடைநிலை உறுப்பு என்று சென்ற பகுதியில் படித்ததை நினைவு கூர்ந்து இடைநிலை என்று குறிப்பிட வேண்டும். பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வந்தால் மட்டுமே சந்தி. இது சிலசமயம் வராமலும் போகலாம்
அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம் முதலிய சொற்கள் சாரியை ஆகும்.

விகாரம்:  பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி போன்றவற்றில் உள்ள சொற்கள் மற்றவற்றுடன் இணையும் போது மாறுவது விகாரம் ஆகும்.
வந்தான் = வா+ த்+ (ந்)+ த்+ ஆன்
  வா= பகுதி வ ஆனது விகாரம்
  த் = சந்தி ந் என மாறியது விகாரம்
  த்= இறந்தகால இடைநிலை
ஆன்= ஆண்பால் வினைமுற்று விகுதி.


அனைத்து பகுபத உறுப்புக்களையும் கற்றுக் கொண்டாயிற்று. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஒரு முறைக்கு இருமுறை பயிற்சி எடுப்பின் எளிதாகிவிடும்.

பகுபத உறுப்பிலக்கணத்தில் முதல் பாடம் சொற்களை பிரிப்பதில்தான் இருக்கிறது. பகுதியானது கட்டளைச் சொல்லில் அமைய வேண்டும் என்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த ஆறு உறுப்புக்கள் எப்படி அமையும் என்று  சொல்லினேன் அல்லவா அவற்றை கொண்டு பிரிக்க வேண்டும்.

கண்டான் = காண்+ (கண்) ட்+  ஆன்.
          இதில் சந்தி, சாரியை இடம்பெறவில்லை! ஒரு வாக்கியத்தில் அனைத்து உறுப்புக்களும் அமைய வேண்டும் என்று அவசியம் இல்லை! பிரித்த வாக்கியத்தை இணைக்கும் போது உச்சரிப்பு சரியாக வருகிறதா என்று சோதித்தால் விடை சரிபார்த்து விடலாம்.
 உதாரணமாக இந்த கண்டானில், காண்+ ட்+ ஆன்
   காண் கண் எனத்திரியும். கண்+ ட்+ ஆன்  நாம் பிரித்தது சரியாக வருகிறது அல்லவா? இப்படி பிரித்து பயிற்சி செய்தால் எளிதில் விளங்கும்.

இனி இலக்கிய சுவை!


புறநானூற்று பாடல் ஒன்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தன்னுடைய பண்ணனை வாழ்த்தி பாடியது.
  இந்த காலத்தில் தன்னுடைய பணியாளர்களை பாராட்ட யாருக்கு மனம் வருகிறது. இந்த சோழ மன்னன். தன் கீழ் உள்ள ஓர் வேளாண் தலைவனான பண்ணனின் கொடைத்திறத்தை என்னே அழகாக பாடியுள்ளான் பாருங்கள்.
  யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
  பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை
  யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந் தன்ன
  ஊணொலி அரவந் தானும் கேட்கும்
  பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
  முட்டை கொண்டு வற்புலம் சேரும்
  சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
  சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
  இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்
  மற்றும் மற்றும்  வினவுதும் தெற்றெனப்
  பசிப்பிணி மருத்துவன் இல்லம்
  அணித்தோ செய்த்தோ கூறுமின் எமக்கே

தெளிவுரை  : யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய: நான் வாழக்கூடிய நாளையும் பெற்று பண்ணன் வாழட்டும்.
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை: பாணர்களே காணுங்கள் இவனது சுற்றத்தின் வறுமையை!
யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன: நன்கு பழுத்த மரத்தில் பறவைக் கூட்டம் கூடி சத்தமிடுவது போல
ஊணொலி அரவந் தானும் கேட்கும்.
  காற்று வீசும் ஓசையையும் கேட்டு
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டைகொண்டு வற்புலம் சேரும்: மழை பெய்யும் காலமுனர்ந்து முட்டைகளை மூக்கில் சுமந்து மழைநீர் தேங்கா மேட்டு நிலம் நோக்கி நகரும்.
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்: சிறிய நுட்பம்வாய்ந்த நுண்ணிய எறும்புகளைப் போல
சோறுடைக்கையர் வீறு விறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்.  : சோற்று உருண்டைகளை கையில் ஏந்தி சுற்றத்துடன் கூடி வெவ்வேறாக செல்லும் சிறிய பிள்ளைகளைக் காண்போம்.
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்: இப்படி பிள்ளைகள் யாசகம் எடுத்து உண்ணும் நிலையை பார்த்த பின்னரும் மேலும் மேலும் பசியினாலும் நடந்து வந்த களைப்பினாலும் மேலும் யாசகம் கேட்கிறோம்.
பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே!
  எங்களுடைய பசியாகிய பிணியை போக்கும் மருத்துவனின் இல்லம் அருகில் உள்ளதா? தொலைவில் உள்ளதா? கூறுங்கள்

விளக்கம்: கிள்ளிவளவன் பண்ணனது கொடைத்திறத்தை இப்படி வாழ்த்துகிறார். தான் வாழக்கூடிய நாளையும் பெற்று இந்த பண்ணன் வாழட்டும். நல்ல பழுத்த பழுமரக்கிளைகளில் பறவைகள் கூச்சலிடும். அந்த ஓசையைப் போல பெருமழை பெய்யும் முன் காற்றின் ஓசை எழும்பும். சிற்றெரும்புகள் அதை மழை வரப்போகிறது என்று அறிந்து தன்னுடைய முட்டைகளை சுமந்து மேடான இடம் நோக்கிச் செல்லும். அதுபோல பாணனிடம் பசி போக்கிச் செல்லும் அவனது சுற்றத்தினர் குழந்தைகள் தன் இருகைகளிலும் சோற்றுருண்டைகளை ஏந்தி வரிசையாக சென்று கொண்டிருப்பதை காண்கின்றேன். இப்படி பார்த்த பின்னும் என் பசி தீரவில்லை. நடந்துவந்த களைப்பினாலும் பசியினாலும் கேட்கின்றேன். என்னுடைய பசியைப் போக்கும் பண்ணனது வீடு எங்குள்ளது? அருகில் உள்ளதா? தொலைவில் உள்ளதா? என்று வினவுகிறார் பாணர்.

   எறும்புகள் முட்டையை சுமந்து வரிசையாக செல்வது போல பண்ணனிடம் சிறுவர்கள் சோற்றுருண்டைகள் பெற்று செல்கின்றனர் என்று அவன் அன்னதான சிறப்பை சொல்லிய வளவன். பசியை நோய் என்றும் அந்த நோயை போக்கும் மருத்துவன் பண்ணன் என்றும் அவன் நெடுங்காலம் வாழ வேண்டும் என்றும் வாழ்த்துகிறார்.

அருமையான பாடல் அல்லவா?
 மேலும் தொடர்புடைய இடுகைகள்:

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 42உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 41

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! உங்களின் கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!









Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!