மறுபக்கம்!
அன்று காலை மார்க்கெட் சென்ற போது அலுவலகத்தில் பணிபுரியும் மகேந்திரனை சந்திப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை! மகேந்திரன் கறார்ப்பேர்வழி! சிக்கனவாதி! அனாவசியமாக ஒரு பைசா செலவழிக்கமாட்டார். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுவார். என்ன மகேந்திரன் சார்! ஒரு டீ சாப்பிட்டு வரலாமே! என்று அழைத்தால் கூட சாரி சார்! எனக்கு டீ காபி பழக்கமெல்லாம் இல்லை! நீங்க போயிட்டு வாங்க என்று நாசூக்காக மறுத்துவிடுவார்.
அவரை மார்க்கெட்டில் பார்த்ததும் ஆச்சர்யம்! மார்க்கெட்டிற்கு கூட மனுசன் வருவாரா? என்று தோன்றியது. இரண்டு கட்டை பைகள் வைத்திருந்தார். அது நிறைய காய்கறிகள்! இவ்வளவு காய் அவர் வாங்குகிறாரா? ஆச்சர்யம் எனக்கு?அவரும் என்னைப் பார்த்துவிட்டார். “என்ன கோபால் சார்? நீங்களும் என்னைப் போலவே காய்கறி வாங்க வந்துட்டீங்களா? என்று உரக்க அழைத்தவர் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே வாங்கலாம்! நமக்கு தெரிஞ்ச கடை ஒண்ணு இருக்கு! காயெல்லாம் பிரெஷ்ஷா இருக்கும்” என்று அழைத்துச் சென்றார்.
மறுக்க முடியாமல் தொடர்ந்தேன். அலுவலகத்தில் யார் அழைத்தாலும் டீ குடிக்க கூட வராதவர் இன்று நம்மை உடன் அழைக்கிறார் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று அவருடன் நடந்தேன்.
“என்ன சார் வீடு ஒண்ணு கட்டிக்கிட்டு இருக்கிறதா சொன்னீங்களே! வேலை எப்படி போயிக்கிட்டு இருக்கு என்று அவராகவே விசாரித்தார். நல்லபடியா போய்க்கிட்டிருக்கு சார்! இன்னும் ஒரு மாசத்துல எல்லா வேலையும் பிணிஷ் ஆயிரும்! கிரகப்பிரவேசம் போயிற வேண்டியதுதான்” என்றேன்.
“ பரவாயில்லையே! ரொம்ப சீக்கிரமாத்தான் முடிச்சிருக்கீங்க! ” என்றவர் அந்த காய்கறி கடையினுள் நுழைந்தார். காய்கறிக் கடைக்காரன் வாங்க சார்! வாங்க என்று வரவேற்றான். ஒவ்வொரு காயாக பொறுக்கி எடுத்து எடை போட்டு விலை கேட்டு இதென்ன இவ்வளவு விலை? சரியில்லை! ரெண்டுரூபா கொறைச்சுப் போடு! என்று பெண்களை விட பிரமாதமாக பேரம் பேசினார் மகேந்திரன்.
”என்ன சார் இப்படி பேரம் பேசிக்கிட்டு இருக்கீங்க! சட்டுபுட்டுன்னு நாலு காய் வாங்கிட்டு பணத்தை கொடுத்திட்டு போக வேண்டியதுதானே! இந்த ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் சேமிக்கிறதுல என்ன பெரிசா கிடைச்சிறப் போவுது?” என்றேன்.
“அப்படியில்லே கோபாலு! வியாபாரம்கிறது பேரம்தான்! வியாபாரி சொல்ற விலைக்கே நாம வாங்கணுங்கிறது அவசியம் கிடையாது! எந்த பொருளுக்கும் உண்மையான விலை அவங்க சொல்ல மாட்டாங்க! இப்ப நாம கொறைச்சு வாங்கிறதுலேயே அவங்களுக்கு கட்டாயம் லாபம் இருக்கும். நாம கொறைக்காம வாங்கினா இன்னும் கூடுதல் லாபம் அவனுக்கு போவுது இல்லே! அப்படி லாபம் இல்லேன்னா நாம கேட்ட விலைக்கு தருவானா கடைக்காரன்?”
“ நாம பொருளை வாங்கி அனுபவிக்கப் போறோம்! நமக்குத்தான் அதனோட மதிப்பு தெரியும். விற்கறவன் ஆயிரம் பொய் சொல்லுவான்! நாமதான் விழிப்பா இருந்துக்கணும்! பேரம் இல்லாம நான் பொருளை வாங்க மாட்டேன்! அதே போல சூப்பர் மார்க்கெட் பக்கமும் தலை வைச்சு படுக்க மாட்டேன்.” என்றார்.
‘ ஏன் சார்?” என்றேன்.
“அங்க பகல் கொள்ளை இல்லை அடிக்கிறானுங்க! சாதாரண மளிகை கடையில ஒரு ரூபா லாபம் வச்சு வித்தா இவனுங்க அஞ்சு பத்துன்னு இல்லே லாபத்தை ஏத்தி வைச்சு நம்ம தலையிலே கட்டறானுங்க! வாடகை அது இதுன்னு எல்லாம் நம்ம தலையில வந்து விடியும். அதனால எப்பவும் சின்ன மளிகை கடையா பார்த்து வாங்கினா நமக்கு லாபம்” என்றார்.
‘நல்ல சிக்கனவாதிதான்! சார் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க! நம்ம ஆபிஸ்லேயே நீங்கதான் சீனியர்! நல்ல சம்பளம் வாங்கறீங்க! பசங்களும் செட்டில் ஆயிட்டாங்க! இப்ப இப்படி சிக்கனம் பிடிச்சி கஞ்சத் தனம் பண்ணி என்ன சாதனை பண்ணப் போறீங்க?”
“ பார்த்தியா பணத்தை சிக்கனமா செலவு பண்ணா கஞ்சன்னு சொல்றீங்களே! ஒவ்வொரு காசும் நாம வியர்வை சிந்தி சம்பாதிக்கிறதுப்பா! இதை ஏன் வீண் பண்ணனும்? அனாவசிய செலவு எதுக்குன்னு கேட்டா கஞ்சன்னு பட்டம் கட்டறீங்க! இருந்துட்டு போவட்டும் சரி ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றார்.
“என்ன சார் ஹெல்ப் அது இதுன்னு கேட்டுக்கிட்டு தயங்காம சொல்லுங்க!”
“உங்க வண்டியிலே என்னை கொஞ்சம் டிராப் பண்ண முடியுமா? ”
‘உங்க வீட்டுலதான சார்! வாங்க விட்டுடறேன்!’
“நோ! நோ! கோபால்சார்! வீட்டுக்குன்னா நிதானமா போயிப்பேன்! இப்ப நான் சொல்ற இடம் ஒரு அனாதை இல்லம்.”
”அங்க எதுக்கு சார்? இப்ப…”
“இந்த காய்கறியெல்லாம் அந்த இல்லத்துக்குதான் கோபால்! வாரம் ஒரு முறை அந்த இல்லத்துக்கு நான் காய்கறி வாங்கி கொடுக்கிறது வழக்கம்! இப்பவே மணி பத்து ஆயிருச்சு! இன்னும் ஒரு அரை மணி நேரத்துல கொண்டுபோய் கொடுத்தா இன்னிக்கு சமையலுக்கு ஆகும். ஒரு நாற்பது பேர் வயிறார சாப்பிடுவாங்க! இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிருச்சு! இல்லேன்னா இந்நேரம் அங்க இருந்திருப்பேன்! அதான் நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டேன்.” இப்போது நான் அவரை பார்த்த பார்வையில் மரியாதை கூடியிருந்தது.
“சார்! நீங்க உண்மையிலேயே பெரிய மனுசன் தான் சார்! உங்களைப் போய்.. கஞ்சன் அது இதுன்னு பேசிட்டேன்!”
“இருக்கட்டும் கோபால்! நான் எதையும் விளம்பரம் பண்ணிக்கிறது கிடையாது. என்னால முடிஞ்ச அளவுக்கு சிக்கனமா இருக்கேன்! அதை இல்லாதவங்களுக்கு செலவு பண்றேன்! இது உங்களுக்கெல்லாம் தெரியாது இல்லையா? உங்க பார்வையில நான் கஞ்சனாவே தெரிஞ்சதுல தப்பு இல்லை!”
“ அதில்லை சார்! ஒரு ரூபா கூட அதிகமா செலவு பண்ண யோசிக்கிற நீங்க இப்படி ஆயிரக் கணக்குல செலவு பண்ணுவீங்கன்னு நினைச்சுக்கூட பார்க்க முடியலை!”
மகேந்திரன் சிரித்தார். “ காசை வீணாத்தான் செலவழிக்க கூடாதுன்னு சொல்றேன்! அவசியமானதுக்கு செலவு செய்யலாம் இல்லையா? நான் சேமிக்கிற ஒவ்வொரு ரூபாயும் இவங்களுக்கு பயன்படுது!”
“இல்லே சார்! இந்த காலத்துல சொந்தக் காரங்களுக்கு உதவறதே பெரிய கஷ்டம்! அதுல இப்படி யாருமே இல்லாதவங்களுக்கு வாராவாரம் காய்கறி வாங்கிக் கொடுக்கிறது பெரியவிசயம் இல்லையா? உங்களைப் போய் தப்பா நினைச்சிட்டேனே!”
“இதெல்லாம் பெரிய விசயமே இல்லை கோபால்! யார் எது பேசினாலும் நான் அதை காதில வாங்கிக்கிறது இல்லை! என் மனசாட்சிக்கு என்ன தோணுதோ அப்படி நடந்துக்குவேன்! அதனால யார் என்ன பேசினாலும் எனக்கு வருத்தம் கிடையாது! உன்னை நான் தப்பா நினைக்கலே! சரி சரி டைம் ஆவுது.. என்னை அந்த ஹாஸ்டலாண்ட ட்ராப் பண்ணிடறியா?”
“வாங்க சார் நீங்க சொன்ன விடுதிக்கு போகலாம்” என்று அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன்.
முதலில் தூசியாக தெரிந்த அவர் இப்போது பெரும் சிகரமாக மாறியிருந்தார்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!