Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

துப்பாக்கி!

$
0
0
துப்பாக்கி!


அப்போது எனக்கு ஒரு பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயது இருக்கும்.ஒரு சிறிய பிராமணக்குடும்பத்தின் மூத்தமகன் நான். என் தந்தையார் ஒரு ராலே சைக்கிள் அப்போதுதான் வாங்கியிருந்தார். அதை எப்பொழுதாவது அவர் ஓட்டக்கொடுப்பாரா? என்று ஏக்கம் எங்கள் அனைவருக்கும் உண்டு. எங்கள் என்றால் என் தம்பிகளைத்தான் சொல்லுகிறேன்.
   அந்த வயதில் எனக்கு குருவிக்காரன் என்று அழைக்கப்படும் நரிக்குறவர்களைக் கண்டால் பெரும் பயம்! அதற்கு காரணம் அவர்கள் தோளில் எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும் துப்பாக்கிதான். அந்த துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாக்கள் பல பறவைகளின் உயிரை சட்டெனக் குடிப்பதை பார்த்ததில் இருந்து அவர்களைக் கண்டாலே ஒரு மிரட்சி. எங்கே அவர்கள் நம்மையும் சுட்டுக் கொன்று விடுவார்களோ என்று ஒரு பயம். அதைக்கொண்டு விலங்குகளையும் பறவைகளையும் சுடமுடியுமே தவிர மனிதர்களை சுடமுடியாது என்ற அறிவெல்லாம் வளராத பருவமாக அந்த பருவம் அமைந்திருந்தது. இன்றையிலிருந்து எடுத்துக்கொண்டால் சுமார் ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் பின்னோக்கிய காலத்தில் நடந்த கதை இது. இன்றைக்கிருப்பது போல பல வசதிகள் இல்லாத காலம் அது.
   அப்போதுதான் ஒருநாள் என் அப்பா என்னை அழைத்தார். டேய்! சாமிநாதா! இந்த பையில ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை சாமான் எல்லாம் போட்டுக் கட்டி சைக்கிள்ல கட்டி வைச்சிருக்கேன்! இதை எடுத்துக்கிட்டு நத்தம் போய் கொடுத்திட்டு நாளைக்கு திரும்பிடு! ரெண்டு நாள் பள்ளிக்கூடம் லீவுதானே? என்றார்.
     எங்களுடடைய குடும்பம் பெரிது. மொத்தம் ஒன்பது பேர். கோவில்பூஜை செய்து வரும் வருமானத்தில் பிழைக்க வேண்டும். அவ்வப்போது ஒரு சில புரோகிதம் கிடைக்கும். இப்போது மாநெல்லூரில்வசித்தாலும் நத்தத்தில் பூர்வீகமான கோயில் இருந்தது. அதை என் தாத்தா பூஜை செய்துவந்தார். அவரது மறைவுக்கு பின் நான் என் அம்மாவுடம் தங்கி பூஜை செய்துவந்தேன். என் படிப்பு காரணமாக இப்போது நான் மாநெல்லூர் வந்துவிட என் தம்பி அங்கே பூஜை செய்து வந்தான். அவனுக்கு உதவியாக என் அம்மா. மாதம் ஒரு முறை அப்பா மளிகை சாமான்களை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு வருவார்.  இன்று அவருக்கு வேறு ஏதோ அலுவல் போல அதனால் என்னை நத்தம் போகச்சொல்கிறார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.  அதற்கு காரணம் இரண்டு. ஒன்று ராலே சைக்கிள்! இன்று முழுவதும் என் வசம்! இன்னொன்று நத்தம் சென்று தம்பியை சந்திப்பது அவனோடு விளையாடப்போவது!
     சரிப்பா! என்று சந்தோஷத்துடன் தலையசைத்தேன்! காலை டிபன் முடித்துவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்! விதி என்னோடு விளையாடப்போவதை உணராமல். இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்றை சொல்லியாக வேண்டும். மாநெல்லூர் என்பது ஆந்திர எல்லையோரம் உள்ள ஒரு கிராமம். அங்கிருந்து மாதரப்பாக்கம்,பூவலம்பேடு, தாணிப்பூண்டி, தண்டலச்சேரி வழியாக வந்து கவரைப்பேட்டை, புதுவாயல், பஞ்செட்டி, நத்தம் வர வேண்டும். ஏறக்குறைய நாற்பது கிலோமீட்டர். இன்று நிறைய பேருந்துகள் இந்த வழியாக செல்கிறது. தார் சாலை. ஆனாலும் இருபுறமும் காடுகளாய் மரங்கள்! ஆள் அரவம் சற்றுக் கம்மிதான். இப்போதே அப்படி என்றால் அப்போது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்! அப்போது தார் சாலை கிடையாது. இந்த வழியே ஒரே ஒரு தனியார் பேருந்து ஒரு நாளைக்கு இரு நடைகள் வந்து போகும். மற்றபடி இந்த சாலை வெறிச்சோடி இருக்கும். இரண்டுபுறமும் மரங்கள் சூழ்ந்து புதர்க்காடுகளாய் இருக்கும். தாணிப்பூண்டி தாண்டியதும்  வலதுபுறம் ஒரு கிளைவழி உண்டு அந்த வழியே இன்னும் சுத்தமாக ஜனநடமாட்டமே கிடையாது. ஆனால் நத்தம் வர அது குறுக்குப்பாதை அந்த வழியே நுழைந்தால் ஆரணி வந்து விடும். அங்கிருந்து அகரம் அப்படியே ஆமதாநல்லூர் வழியாக நத்தம் வந்துவிடலாம். சுமார் பத்து கிலோமீட்டர் மிச்சம் பிடிக்கலாம். என் தந்தையோடு பலமுறை வந்திருப்பதால் இந்த வழியெல்லாம் எனக்கு அத்துப்படி. சரி இனி கதைக்குள் நுழைவோம்
       மாநெல்லூரில் இருந்து புறப்பட்டு மாதரப்பாக்கம் வந்து தாணிப்பூண்டியை தாண்டிவிட்டேன். அப்போது ஒரு சரிவுப்பாதை வந்தது. மலைமேலிருந்து இறங்குவது போல சரிவாகச் செல்லும் பாதை அது. இது மாதிரி பாதை என்றால் எனக்கு வெகு குஷி! ஏனென்றால் சைக்கிள் மிதிக்க வேண்டாம். வேகமாக மிதித்துவிட்டு பெடலில் காலை வைத்துக்கொண்டால் போதும் சர்ரெண சைக்கிள் ரெக்கைக் கட்டிப் பறக்கும். அது ஒரு சாகசமாக அந்த நாளில் எனக்கு தெரிந்தது. அந்த சரிவைக் கண்டதும் நான் வேகமாக சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன் சரிவில் இறங்கும்போது சைக்கிள் வேகமெடுக்க ஆக்ரோஷமாய் பெடலை உந்தினேன்.
  அது சரிவுப்பாதை என்பதால்  இந்தப்புறமும் மேடாக இருக்கும் பெடல் செய்வது கடினம். அதே சமயம் அந்தப்புறம் யார் வருகிறார்கள் என்று தெரியாது. ஆனாலும் சரிவில் இறங்க போகும் ஆர்வத்தில்பெடலை வேகமாக மிதிக்க மேட்டை கடந்துவிட்டேன். சரிவில் இறங்க வேண்டும் அப்போதுதான் அந்த ஆபத்துவந்தது.
    சாலையின் வலது புறமிருந்து ஒருவன் சாலையின் குறுக்காக எங்கோ பார்த்தபடி ஆ… அவன் கையில் அது… என்ன? அது ஒரு துப்பாக்கி! அவன் ஒரு குருவிக்காரன். எங்கோ குறிபார்த்தபடி நான் வருவதை கவனிக்காமல் சாலையின் குறுக்கே வர சரிவில் வேகமெடுத்த என் சைக்கிள் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது.
   இருவருமே இதை எதிர்பார்த்திருக்க வில்லை! என்னால் பெல் அடிக்கவோ ப்ரேக் பிடிக்கவோ தோணவில்லை! எதிர்பாராத அதிர்ச்சியில் செய்வதறியாது கடைசி நொடியில் ப்ரேக் பிடிக்க அதற்கு டமால் என்ற சத்தம். அவன் ஏதோ குருவியை சுட்டுவிட்டிருக்க கூடும் போலும்! அது என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி பிரேக்கிலிருந்து கையை விட அவன் மேல் மோதி சைக்கிள் ஒருபுறம் அவன் ஒரு புறம்! நான் மறுபுறம் என்று கவிழ்ந்தோம்!
    சைக்கிளில் இருந்த மூட்டை அவிழ்ந்து அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடக்க அவன் ஏதோ புரியாத மொழியில் காச் மூச்சென்று கத்திக் கொண்டு ஒரு புறம் செல்ல நான்  மடமடவென்று எழுந்து சைக்கிளை நிமிர்த்தினேன். தூரத்தில் குருவிக்காரன். ஒன்றும் பாதியுமாய் சாமான்களை பொறுக்கி பையில் போட்டபடி அதை கட்டி முடித்து சைக்கிளை நகர்த்தி மேலே ஏறினேன். பின்னால்  வெகு தூரத்தில் அவன். சைக்கிள் அவன் மீது மோதி அவன் அதே இடத்தில் விழுந்து இருந்தான். உருட்டு என்பதால்  நானும் சைக்கிளும் சரிவில் இருந்தோம்.  எனக்கோ ஒரே பயம்! அவன் கையில் துப்பாக்கி! நம்மை சுட்டு விட்டால் என்ன செய்வது? அவன் மீது மோதிவிட்டோமே கோபத்தில் சுட்டாலும் சுட்டு விடுவான். அவன் வருவதற்குள் ஓட்டம் எடுப்போம்! என்று சைக்கிளை வேகமாக மிதிக்க அவன் மீண்டும் சுட்டான்.  “டமால்” ஐயோ! என்னைத்தான் சுட்டான் போலிருக்கிறது! குறிதவறிவிட்டது! இன்னுமொருமுறை சுடுவதற்குள் தப்பித்தாக வேண்டும்! வேகமாக பெடலை அழுத்த, பின்னால், “சாமியோவ்”  “யோவ்! சாமியோவ்” என்று குரல் கேட்க அது மேலும் அச்சுறுத்த வேகமாக அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன்.

    ஒரு ஐந்து நிமிடம் கழித்து மெல்லத் திரும்பிப் பார்த்தேன்! ஸ்! அப்பாடா! அவன் இல்லை! நல்ல வேளை! தப்பித்தேன் என்று பெருமூச்சு விட்டேன்!
   சைக்கிளை நிதானமாக மிதிக்க ஆரம்பித்தேன்! இப்போது மீண்டும் குரல் கேட்டது.  “சாமியோவ்! சாமியோவ்”
    அட சைத்தான் விடாது போலிருக்கிறதே! திரும்பிப்பார்த்தேன்! அவன் தோளில் துப்பாக்கியுடன் ஒரு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். என்னைப்பார்த்ததும் ,  “யோவ்! சாமியோவ்! உன்னைத்தான் சாமியோவ்” என்று குரல் கொடுக்க  சைக்கிளை வேகமெடுத்தேன். என்ன பிரயோசனம்! என் சைக்கிள் நகர மறுத்தது.
     பேக் வீல் பஞ்சர் ஆகியிருந்தது! காற்று இல்லாமல் திணறியது வண்டி. ‘ம்.. இன்று அவ்வளவுதான்! குருவிக்காரன் கையால் சாக வேண்டியதுதான் போல!” என்று திடப்படுத்திக் கொண்டாலும் மனது கேட்கவில்லை! சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடினேன். எல்லாம் கொஞ்ச நேரம்தான்! அவன் அந்த முறுக்கு மீசை குருவிக்காரன் என்னை நெருங்கிவிட்டான்.
   “ அட நில்லு சாமியோவ்! நீ பாட்டுக்கு இந்த வேகம் ஓட்டற உன்னை பிடிக்குறதுக்குள்ள எம்பாடு பேஜாரா பூடுச்சு!” என்றான்.
     “ என்னை சுட்டுறாதே! தெரியாம தெரியாம மோதிட்டேன்!”
  அப்படியே கெஞ்சுதலாக கேட்கவும்! அவன் ஹாஹாஹா! என்று அதிரலாய் சிரித்தான்.
   ஏன் சிரிக்கிறே?” நான் பாவமாய் கேட்க,
   “ஏஞ்சாமியோவ்! நான் சுட்டுறப்போறேன்னுதான் இந்த வேகம் ஓடியாந்தியா?”
     மையமாய் தலையாட்டினேன். இன்னும் கொஞ்சம் சத்தமாக சிரித்தவன். “ சாமியோவ்! இந்த துப்பாக்கியால கொக்கு குருவிதான் சுடலாம்! மனுசங்களை சுடக்கூடாது! அப்படி சுட்டா என்னை பிடிச்சு உள்ள போட்டுருவாங்க. இது கூட தெரியாத அறியாத புள்ளையா இருக்கியே!”
    சுடறதுக்கு இல்லேன்னா அப்ப ஏன் என்னை துரத்திட்டு வந்தே? நான் கேட்க
  இதுக்குத்தான் சாமியோவ்? என்று தன் ஜேபியில் கைவிட்டு ஒரு பர்ஸை எடுத்து நீட்டினான். அது என்னுடைய பர்ஸ்? மாத செலவிற்கு அம்மாவிற்கு அப்பா கொடுத்தனுப்பிய பணம் அதில்தான் இருந்தது. அதை தொலைத்து இருந்தால் அப்பா முதுகில் டின் கட்டியிருப்பார்.
     கீழே விழுந்த வேகத்துல இந்த பர்ஸ்  விழுந்திருச்சு போல அதை எடுக்காம இவ்ளோ தூரம் ஓடியாந்துட்டியே சாமி? அவன் கேட்க, பதில் பேச முடியவில்லை!
    உருவத்தை கண்டு நாம்தான் தான் தவறாக நினைத்து பயப்பட்டு இருக்கிறோம்! இந்த பர்ஸை அவன் எடுத்துக்கொண்டு இருக்கலாம். ஆனாலும் அதை என்னிடம் ஒப்படைக்க துரத்தி இருக்கிறான். அதை நாம் தவறாக நினைத்து விட்டோம் எதையோ நினைத்து பயந்து போய்விட்டோம் என்று தோன்றியது.
   இந்தா சாமி உன் பர்ஸ்! வண்டி பஞ்சர் ஆயிருச்சு போல! பார்த்து போய் சேரு! இனிமே கவனமா வண்டி ஓட்டு! என்று பர்சை என் கையில் திணித்தவன் வந்த வழியே செல்ல ஒரு நன்றி கூடச் சொல்ல தோன்றாமல் திகைத்து நின்றேன் நான்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கபடுத்துங்கள்! நன்றி!

மேலும் தொடர்புடைய பதிவுகள்




Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!