என்னைக் கவர்ந்த நேரு!
குழந்தைகள் தின ஸ்பெஷல்!
இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள்.
இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது.
இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது.
அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான்.
யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக்கு பாரதத்தின் பிரதமர் யானைக்குட்டியை பரிசாக தந்தார் என்ற போது மகிழ்வாக இருந்தது. அத்துடன் பொந்துக்குள் சென்ற பந்தை புத்திசாலித்தனமாக நீர் ஊற்றி மேலே எடுத்தார் என்று படித்ததை விட அதை எங்கள் ஆசிரியை எங்களுக்கு விளக்கிச்சொன்னவிதம் பிடித்துப்போய் நேருவின் மேல் ஓர் பிரியம் உருவாகிவிட்டது. அதற்கும் மேலே அவர் சட்டையில் குத்திக் கொண்டிருக்கும் ரோஜாப்பூ. அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் சமயம் கதை எழுதப் பழகினேன். அப்போது நான் தயாரித்த கையெழுத்துப்பத்திரிக்கையின் பெயர் நேருமாமா. இந்த பெயரிலேயே ஒருவருடம் இந்த பத்திரிக்கை நடத்தினேன். இத்தனைக்கும் அதில் உருப்படியாக ஒன்றும் எழுதவில்லை! அதன் வாசகர்கள் என் நண்பர்களும் என் தங்கைகளும்தான்.
அதற்கப்புறம் ஓர் சிறுவர்சங்கம் தொடங்கினேன். வானொலியில் சிறுவர்பூங்கா நிகழ்ச்சிகள் கேட்டு மகிழ்ந்ததன் விளைவு இந்த சிறுவர்சங்கம். அதில் ஒவ்வொருவாரமும் ஒரு சிறுவர்சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்குபெறுவார்கள். நாமும் அப்படி பங்குபெறவேண்டும் என்று நேரு சிறுவர் சங்கம் துவக்கினேன். வயது வளர்ந்தபோது நேரு நண்பர்கள் நலச்சங்கம் என்று அதுவும் வளர்ந்தது. இப்படி நேரு என்னோடு பின்னி பிணைந்து இருந்தார்.
கையெழுத்து பத்திரிக்கையில் குழந்தைகள் தின சிறப்பிதழில் அவரைப்பற்றிய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதியுள்ளேன். குழந்தைகள் தினத்தன்று எங்கள் சங்கம் சார்பாக சிறுவர் சிறுமியருக்கு போட்டிகள் நடத்தி பரிசும் அளித்து உள்ளேன். இப்படி நேருவின் பிறந்த நாளை அன்றெல்லாம் என் பிறந்தநாளைவிட சிறப்பாகக் கொண்டாடினேன்.
வயது சற்று முதிர்ந்தபோது நான் படித்த சில செய்திகள் அவருக்கும் மவுண்ட்பேட்டன் மனைவிக்குமான உறவு, சீனப்போரில் தவறான முடிவு எடுத்து எல்லைகளை இழந்தது. பட்டேலுக்கும் அவருக்குமான சர்ச்சைகள் என்று அவரைப்பற்றிய இந்த விதமான செய்திகள் அவரை உயர்த்தி மதிப்பிட்டுவிட்டோமா? என்று எண்ணத் தோன்றியது.
ஆனாலும் அவர்வகுத்த பஞ்சசீல கொள்கைகளாகட்டும் பசுமைப்புரட்சிக்கு வித்திட்டு கிராமங்களை ஊக்குவித்ததாகட்டும் உலக அரங்கில் பல தலைவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவையாகட்டும் என் மனதைவிட்டு நீங்காதவை இந்த நீங்காத நினைவுகள் அவர் மீது உள்ள குறைகளை கூட கலைந்துபோகச்செய்கின்றது.
தவறு செய்யாத மனிதன் இல்லை! நேரு தவறாக சில முடிவுகள் எடுத்திருந்தாலும் குழந்தைகள் விரும்பும் தலைவர். இந்தியாவெங்கும் உள்ள குழந்தைகள் அவரை மாமாவாக ஏற்றுக் கொண்டு நேருமாமா என்று அன்புடன் அழைத்தன. குழந்தைகளை நேசிக்கும் தலைவர்களை இவர் அளவிற்கு யாரும் இருந்திருக்க மாட்டார்கள். இனியும் பிறந்து வருவார்களா என்பது சந்தேகமே! குழந்தைகள் தினம் கொண்டாடும் இந்தவேளையில் அன்று நான் கையெழுத்துப்பிரதியில் அவரைப்போற்றி எழுதிய பாடல் ஒன்று உங்கள் பார்வைக்கு!
“ஆசிய ஜோதி நேரு”
நேருமாமா நம் மாமா
நேசம் மிக்க நம் மாமா
ஆசிய ஜோதி என்றென்றும்
அணையாவிளக்கு நம் மாமா!
நாட்டுமக்கள் நலத்தினிலே
நாளும் பொழுதைக் கழித்திடுவார்!
சிறுவர்களோடு சிலமணிநேரம்
சிரித்து மகிழ்ந்திட மறப்பாறோ?
அழகு ரோஜா மலர்தன்னை
அவரும் விரும்பி அணிந்திடுவார்
அடிமைத் தளையை அகற்றிடுவே
அல்லும் பகலும் உழைத்திட்டார்!
காந்தியின் சீடரும் அவர்தானே!
கருணை உள்ளம் மிக்கவராம்!
பணியில் கவனம் செலுத்தாமல்
பகலைப் போக்க மாட்டாராம்!
விளையாட்டினிலே விருப்பம் கொண்டே
வெள்ளைக்குதிரை ஏறி சவாரி செய்திடுவார்!
வெள்ளையனை விரட்டி அடித்திடவே
வெகுநாள் சிறைவாசம் கழித்திட்டார்!
உலகசமாதானம் அவர் கொள்கை!
உயர்ந்த இந்தியா அவர் கனவு!
இந்தியமக்கள் எல்லோரும்
ஒருதாய் மக்கள் அவர்கொள்கை!
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
இன்றைய பிள்ளைகள்! நாளைய இளைஞர்கள்! இவர்களே இந்தியாவின் தூண்கள்! இன்றே பிள்ளைகளை நல்லவர்களாக வளர்ப்போம்! நாளைய பாரதம் நன்கே அமைப்போம்!
குழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளுக்கு நல்லதையே போதியுங்கள்! நல்லதையே அளியுங்கள்!
இனியகுழந்தைகள் தின வாழ்த்துக்கள்!