“ஏண்டா பொய் சொன்னே?”
கணேஷ் எட்டாவது படிக்கும் சிறுவன், அவனது குடும்பம் நடுத்தர குடும்பம். அவனது பள்ளி அவன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலலவில் இருந்தது. இத்தனை வருடமாக கணேஷ் பள்ளிக்கு நடந்துதான் செல்வான். பிறகு இலவச பயண சீட்டு வரும் அதன் மூலம் சென்று வருவான்.
இந்த வருடம் பள்ளி தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை! இலவச பயணச்சீட்டும் இன்னும் வழங்கவில்லை! “என்னால் பள்ளிக்கு நடந்து போக முடியாது” என்று அடம்பிடித்தான் கணேஷ்.
இது அவனது தாய்க்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தினமும் பஸ்ஸில் சென்று வருவதானால் பத்துரூபாய் தேவைப்படும். இது அவர்களை பொறுத்தவரை முடியாத காரியம் இல்லைதான். ஆனாலும் திடீரென கணேஷ் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறானே என்று யோசித்தாள் அவள்.
“ஏண்டா என்ன ஆச்சு! இத்தனை வருசம் பாஸ் கொடுக்கறவரை நடந்துதானே போனே? இப்ப என்ன திடீர்னு!” என்றாள்
“அம்மா என்னால நடக்க முடியலை! கால் ரெண்டும் செமயா வலிக்குது தினம் பஸ்ஸிக்கு காசு கொடுத்தாதான் போக முடியும்” என்றான் பிடிவாதமாய் கணேஷ்!
“ சரி சரி! இதுக்காக எல்லாம் ஸ்கூலுக்கு போகாம இருக்காதே! நாளையிலிருந்து பஸ்ஸிலேயே போய்வா! காசு தரேன்!” என்றதும் கணேஷின் முகம் மலர்ந்தது.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. அன்று எங்கோ சென்றுவிட்டு மாலை நேரம் பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்த மரகதம் மற்ற பிள்ளைகள் பஸ்ஸில் ஏறவும் தன் மகனை தேடினாள். காணவில்லை.பஸ் கிளம்பியதும் உள்ளே விசாரித்தாள் . ”கணேஷா! அவன் நடந்து இல்ல வருவான்!” என்றான் பக்கத்து தெரு மணி.
அவளுக்கு கவலை பிடித்துக் கொண்டது. “ தினமும் கொடுக்கும் பத்துரூபாய் என்ன ஆகிறது? தினமும் பஸ்சுக்கு என்று வாங்கி வேறு என்ன செய்கிறான்? வீட்டுக்கு வரட்டும் பார்த்துக்களாம்” என்றுஅதே நினைப்புடன் வீடுவந்து சேர்ந்தாள் மரகதம்.
பள்ளியில் இருந்து திரும்பிய கணேஷ், “ அம்மா பசிக்குது சோறு போடு! ”என்று சொல்ல மரகதம் அவன்முன் வந்துமுறைத்தாள். “தொரை நடந்து வந்தாரே! அதனாலே அதிகமாத்தான் பசிக்கும்!” என்றாள் கோபமாக. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணேஷ் தலைகுனிந்து நின்றான்.
“ஏண்டா பொய் சொன்னே? காசை என்ன பண்றே? உண்மையைச் சொல்லு!”
“ அம்மா அது அது வந்து காசு தொலைஞ்சு போச்சு!”
‘பளார் என்றுஅறை ஒன்று அவன் கன்னத்தில் விழுந்தது! “ஏண்டா மறுபடியும் பொய் சொல்றே? பக்கத்து வீட்டு மணி நீ தினமும் நடந்து போய்வரதா சொல்றான்!” ஏண்டா! உனக்கு என்னடா ஆச்சு? என்றாள்கண்ணீருடன் மரகதம்.
அதைக்கண்ட கணேஷின் கண்களிலும் கண்ணீர்! ”அம்மா என்னை மன்னிச்சிருங்கம்மா? நான் நடந்துதான் ஸ்கூலுக்கு போய்வரேன்! ஆனா காசை வீணாக்கலைம்மா! உதவிதான் செய்யறேன்!”
”உதவியா?” மரகதத்தின் கண்கள் விரிந்தன. “ஆமாம்மா! மோகன் தெரியும் இல்லை உங்களுக்கு மேலத்தெரு ஜானகி அம்மாவோட பையன். கால் ஊனமானவன்”. “ஆமாம் தெரியும்!”
“அவன் நல்லா படிப்பான். என் வகுப்புதான். கால் ஊனமா இருக்கறதாலே அவனாலே நடந்து வர முடியலை. அவங்க வீட்டுல காசு கொடுக்கிற அளவுக்கு வசதி இல்லையாம். ஒரு மாசம் பள்ளிக்கு வரமுடியாதுடா! பஸ் பாஸ் வந்தப்புறம்தான் வர முடியும்னு” சொன்னான்
. “ பாடங்களும் வீணாகிடும். ஒருமாசம் லீவ் போட்டா ஸ்கூல்ல சேர்த்துக்கவும் மாட்டாங்களாம்! அதான் என்ன பண்றதுன்னு யோசிச்சேன்.அவனுக்கு உதவி பண்ணனும்னுதான் உங்க கிட்ட காசு கேட்டு அடம்பிடிச்சேன்.தினம் உங்க கிட்ட காசு வாங்கி அவனுக்கு கொடுத்திட்டு நான் நடந்து போயிட்டு வந்துடுவேன்”. முதல்ல இதுக்கு மோகன் மறுத்தாலும் நான் வற்புறுத்ததனாலே ஒத்துக்கொண்டான் என்றான் கண்ணீருடன்.
அவனை அணைத்துக்கொண்ட மரகதம் “நான் தான் உன்னை அவசரப்பட்டு அடிச்சிட்டேன்!இத நீ மொதல்லேயே சொல்லியிருக்கலாம்! நான் மறுத்திருக்க மாட்டேன். ஏதோ நம்மளாலே முடிஞ்ச சின்ன உதவி இனி தினமும் உனக்கு பத்து ரூபாய் கிடைக்கும்! வா முதல்ல சாப்பிடலாம்” என்றாள் மன நிறைவுடன் அந்த தாய்!
“நல்ல அம்மா! ”என்று தாயை கட்டிக்கொண்டான் கணேஷ்.
(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்தகருத்துக்களை பகிரலாமே!