தளிர் ஹைக்கூ கவிதைகள்!
ஆடை தொலைத்தன மரங்கள்
முகம்திருப்பின பறவைகள்!
இலையுதிர்காலம்!
குறுத்துக்கள் முளைக்கையில்
இடம்பெயர்ந்தன
பழுத்த ஓலைகள்!
பூத்தூவிய மேகங்கள்!
வாசமான பூமி!
சாறல்மழை!
இறப்புக்கு நாள் குறித்தும்
வருந்தவில்லை
பூ ஈன்ற வாழை!
ஒட்டிக்கொண்டு பிரிய மறுக்கிறது
ஒவ்வொரு குழந்தையிடமும்
மண்!
எண்ணெய் குடித்து
இறந்து போனது
விளக்குத்திரி!
ஒளிகொடுக்க
உயிரைக் கொடுத்தது
விளக்குத்திரி!
வெளிச்சம் போட்டு காட்டியது
விளக்குகள்
இரவு நேரத்தில் தூரத்து கிராமம்!
மண்சோறு ஊட்டிக்கொண்டது பாப்பா!
பசியோடு தூங்கிப்போனாள்
சோறுட்டிய தாய்!
நெருப்பாய் சுட்டது!
ஈரத்தை விழுங்கிய
மணல்!
இரவு முழுதும் பயணம்!
இலக்கினை எட்டவில்லை!
நிலா!
குழந்தை தவழ்ந்துவருகையில்
ஈரமாகிறாள்
பூமித்தாய்!
வானம் கறுக்கும் முன்
வானிலை அறிவித்தன
தும்பிகள்!
ஓடும் குதிரைகளை
ஒழுங்குபடுத்தின ஒளிரும் விளக்குகள்!
டிராபிக் சிக்னல்!
அலைகள் அழிக்குமென்றாலும்
வளை தோண்டின
நம்பிக்கை இழக்கா நண்டுகள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!