தளிர் சென்ரியு கவிதைகள்!
விலையில்லாமல்தான் கொடுத்தார்கள்
விலையானது
ஆட்டுக்குட்டிகள்!
கட்டுப்படுத்த சுட்டார்கள்!
கட்டவிழ்ந்தது
வன்முறை!
விடுதலையை வேண்டுகையில்
சிறையில் இருந்தார் கடவுள்!
நடை அடைப்பு!
தட்டு நிறைய சில்லறை
நிறையவில்லை
பிச்சைக்காரன் வயிறு!
அரிதாரம் பூசின கிராமங்கள்
உருவாகின
புதிய நகரங்கள்!
காணிக்கை கேட்கும் கடவுளிடம்
வேண்டுதல் வைக்கிறான்
பக்தன்!
தடி வைத்திருந்தும்
விரட்டவில்லை காக்கைகளை
காந்திசிலை!
தினம் தினம் வீடு மாறினார்கள்
திக்கில்லாதவர்கள்!
நாடோடிகள்!
சீருடையிலும் பிரிவினை
விதைத்தன
தனியார் பள்ளிகள்!
நீதிகிடைக்க
கடவுளுக்கு கொடுக்கப்பட்டது லஞ்சம்
யாகங்கள்!
தாண்டியவனை தடுத்தார்கள்
வெடித்தது போராட்டம்
மேகதாட்டு அணை!
அலட்சியம் பூக்கையில்
மலர்ந்ததும் மறைந்தன
பிஞ்சுகள்!
வாகனப் பெருக்கம்
வலியில் துடித்தன
சாலைகள்!
அழிந்துபோன கிராமங்கள்
அழித்தன
கால்நடைகள்!
வரவேற்பறையில் சாத்தான்
நலம் விசாரித்துக் கொண்டிருந்தது!
தொலைக்காட்சி!
வெட்டிப் பிழைத்தான்
வெட்டிவிட்டது வாழ்க்கை!
செம்மரக் கடத்தல்!
எல்லை மீறியதும்
அரங்கேறியது உரிமை மீறல்!
போலீஸ் அடி!
குவிந்த விற்பனையில்
தேய்ந்தது சாமானியன் சேமிப்பு!
அட்சய திருதியை!
பொன்னை வாங்க வாங்க
சரிந்தது
ரூபாய் மதிப்பு!
உழைக்க மனமில்லை
உடம்பில் அடித்துக் கொண்டான்!
கழைக்கூத்தாடி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!