தித்திக்கும் தமிழ்! பகுதி 9
தொழில்நுட்பம் வளர்கையில் அது வளர்ச்சிக்கு பயன்படுவதைவிட அழிவுக்கு அதிகம் பயன்படுவது வேதனை. ஒரு காலத்தில் தகவல்தொடர்பு என்பது மிகவும் கஷ்டம் ஆகும். ஓரிடத்தில் இருந்து மற்றொர் இடத்திற்கு செய்தி போக ஆட்கள் மூலம்தான் செய்தி சொல்லமுடியும். பின்னர் புறாத் தூது வந்தது. பின்னர் அஞ்சல், தொலைபேசி என்று வளர்ந்து இன்று இமெயில், வாட்சப் என்று அதன் வளர்ச்சி பெரிதும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தாலும் அதன் மற்றொரு பக்கம் மிகவும் மோசமானதாக அமைகிறது.
பெண்களை இழிவாக சித்தரிக்கும் ஆபாசபடங்கள் வாட்சப்பில் அதிகமாக பகிரப்படுவதாக தற்போது வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இன்றைய குழந்தைகள் கூட வாட்சப் பயன்படுத்தும் நிலையில் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படவேண்டும்.
இன்று இதுபோன்ற காரணிகள் ஒழுக்கத்தை கெடுக்கின்றன என்றால் அன்று எது கெடுத்தது என்று தெரியவில்லை! அன்றும் தேவதாசி முறை போன்றவை இருந்துள்ளது. பெண்கள் மேல் மோகம் கொண்டு பலர் இருந்துள்ளனர். பல அடியார்களும் குறிப்பாக அருணகிரி நாதர் முதலியவர்கள் கூட முதலில் பெண் மோகம் கொண்டு பின்னர் கடவுள் பக்திக்கு திரும்பியுள்ளனர்.
நமக்கு பணியாரம், தோசை பற்றி என்ன தெரியும்? உண்ணக் கூடிய பொருள் என்றுதான் தெரியும். நன்றாக சுவையாக செய்து கொடுத்தால் ஒரு கட்டு கட்டுவோம்! பணியாரம் தோசையை வைத்து பாட்டு எழுத முடியுமா? வேண்டுமானால் சினிமாவுக்கு ஓர் கானா எழுத முடியும். பணியாரம் தோசையை நான்காக பிட்டு நன்றாக சாப்பிடத்தான் நமக்குத் தெரியும். ஆனால் இந்த புலவர் பணியாரம் தோசையை நான்காக பிட்டு வைத்து நல்லதொரு பாடலையும் அறிவுரையும் தருகின்றார்.
பெண்களை சேர்பவர் அடையும் பலன்கள் என்று பணியாரம் தோசை என்ற ஒரே அடியைக் கொண்டு மிக அழகாக பாடியுள்ளார் அந்தகக் கவி வீரராகவர்.
அந்தப்பாடலில் அவர் என்ன சொல்கிறார்? இன்று வாட்சப்பில் பரப்பும் இது போன்ற பாவச்செயல்களை செய்பவர்கள், பல்லி, பாம்பு, அந்துப்பூச்சி போன்ற ஒலியை வெளிப்படுத்த இயலாத பிறவிகளாக பிறப்பார்கள் என்று சாபம் கொடுக்கிறார். இன்றும் இது போன்ற பாவச்செயல்களை செய்பவர்கள் உணர வேண்டிய விஷயம் இது. பாடலையும் அதன் சுவையையும் படித்து மகிழ்வோமே!
பணியாரந் தோசையி லக்கொங்கை
தோய்ந்திடப் பார்ப்பர் பல்லி
பணியாரந் தோசையி லாச்செந்து
வாய்ப்பிறப் பார்களென்னோ
பணியாரந் தோசைமுன் னோனுக்கிட்
டேத்திப் பழனிச் செவ்வேள்
பணியாரந் தோசைவ ராகாரன்
னோர்க்கென்ன பாவமிதே
அந்தகக் கவி வீரராகவர்.
பாடலின் பொருள்: பணியாரம், தோசை முதலிய பண்டங்களை விநாயகருக்கு படைத்து வழிபட்டு பழனியில் உள்ள முருகப்பெருமானை வணங்க இயலாதவர்கள் சைவசமயத்தவர்கள் ஆக மாட்டார்கள். மாதர்களின் அணிகள் பொருந்திய அழகிய இரண்டு மலைபோன்ற மார்புகளை சேர்த்து அனுபவிக்க நினைப்பார்களேயானால் அவர்கள் பல்லி, பாம்பு, அந்துப்பூச்சி, போன்ற ஒலியை எழுப்ப இயலாத சிற்றுயிர்களாக பிறப்பார்கள். ஐயோ! அவர்களுக்கு இது என்ன பாவத்தின் பயன்?
பாடலைவிளக்கமாக அடிபிரித்து பார்ப்போமா?
பணியாரந் தோசையிலக் கொங்கை தோய்ந்திட பார்ப்பர் = பணி+ஆர்+அம்+தோ+சையிலம்+ கொங்கை + தோய்ந்திட பார்ப்பர் =
அணிகள் அணிந்த அழகிய இரண்டு மலைககள் போன்ற தனங்கள் உடைய பெண்களை சேர்ந்திட நினைப்பவர்கள்:
பணியாரந் தோசையிலாச் செந்துவாய்ப் பிறப்பார்களென்னா = பணி+ஆர்+அந்து+ஓசை +இலா+ செந்துவாய்+ பிறப்பார்களென்னா
பல்லியும், ஓசை இல்லாத அந்து போன்ற வாயில்லா பூச்சிகளாக பிறப்பார்கள்
பணியாரந் தோசை முன்னோனுக்கிட்டு ஏத்தி பழனிசெவ்வேன் = பணியாரம்+ தோசை+ முன்னோனுக்கு+ இட்டு + ஏத்தி +பழனி+ செவ்வேன்
பணியாரம், தோசை முதலிய பண்டங்களை முருகனின் முன்னவனான விநாயகருக்குப் படைத்து வழிபட்டு பழனி செல்லாதவர்கள்
பணியாரந் தோசைவ ராகாரன் னோர்க்கென்ன பாவமிதே = பணியார்+ அந்தோ+ சைவர்+ ஆகார்+ அன்னோர்க்கு+ என்ன+ பாவமிதே
இவ்வாறு பணிந்து வணங்காதவர்கள் சைவ சமயத்தவர்கள் ஆகமாட்டார்கள், அவர்கள் செய்த பாவம்தான் என்ன?
பணியாரம் தோசையினை பதமாக ருசித்தீர்களா அன்பர்களே! மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மேலும் ஓர் தமிழ்சுவையினை பருகுவோம்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!