விநாயகர் தியாகி ஆனது எப்படி? தித்திக்கும் தமிழ்! பகுதி 12
இன்று யாராவது ஒரு பத்து ரூபாய் கொடுத்துவிட்டால் போதும் வள்ளல் என்றும் கொடையாளர் என்றும் பாரி என்றும் பலவிதமாக துதி பாடுகின்றனர். அன்றும் புலவர்களுக்கு கொடையளித்த பல புரவலர்கள் புகழ்ச்சியை விரும்பினர் புலவர்களும் புரவலர்களை விதவிதமாக புகழ்ந்து பாடி அவர்களை மகிழ்வித்து கொடை பெற்று மகிழ்ந்தனர். இவ்விதம் புகழ்கையில் அப்புலவர்களின் தமிழ் அறிவு மட்டும் இன்றி புரவலர்களின் தமிழ் அறிவும் நம்மால் அறிய முடிகின்றது. பொருத்தமானவரை பற்றியே புகழ்ந்தார்களே அன்றி எல்லோரையும் புகழவில்லை.
துரிதகவி திருமலைக் கொழுந்து கவிராயர் என்று ஒருவர். அவரை ஆதரித்த வள்ளல் விநாயக வள்ளல். விநாயக வள்ளலைப் பாடி சிறப்பித்துள்ளார் இந்த கவிராயர். விநாயக வள்ளல் கட்டிய சத்திரத்தைப் பற்றியும் பாடுகின்றார். சிவபெருமான், முருகன் போன்றோருக்கு பல கண்கள் உண்டானது இந்த விநாயக வள்ளல் கட்டிய சத்திரத்தின் அழகை பார்க்கவே என்று உயர்வு நவிற்சியில் சிறப்பிக்கின்றார்.
விநாயக வள்ளலை கர்ணன், பாரி, காரி என்றெல்லாம் சிறப்பிக்க முடியாது. அவர் ஓர் தியாகி என்று சொல்லுகின்றார் வள்ளல் எப்படி தியாகி ஆனார்? அவர் செய்த தியாகம் தான் என்ன? இந்த பாட்டிலே படித்து ரசியுங்கள்!
எல்லார்க்கும் கன்னம் இருந்திட, இவனைக்
கன்னன் என இசையாது; ஓர்ந்து
வில்லாரும் காரிஎனில், வடுகனையும்
சனியனையும் விளக்கும்; கீர்த்திச்
செல்லாரு பாரி எனில் இல்லா
ளாம்காளத் தீச்சுட்டுக் கொல்லும்;
பல்லாரும் புகழ் மயிலை விநாயகனைத்
தியாகிஎனப் பகரலாமே!
அனைவருக்கும் ‘கன்னம்’ என்ற முகத்தின் ஓர் உறுப்பு அமைந்துள்ளது. ஆதலால் விநாயகவள்ளலை கன்னன் என்று சொல்ல முடியாது. வில் வீரரான காரி என்று அழைக்கலாம் என்றால் அந்தச்சொல் பைரவரையும் சனீஸ்வரரையும் குறிக்கும். ஆதாலால் இதுவும்பொருந்தாது. புகழ் மிக்க பாரி வள்ளல் என்று அழைக்கலாம் என்றால் அச்சொல்லுக்கு “இல்லாள்” என்ற பொருள் உண்டு. அப்படியானால் பொருள் இல்லாதவன் என்றாகி வறுமை என்னும் கொடுமையான விஷமான தீ சுட்டுக் கொல்லும். எனவே விநாயக வள்ளலை தியாகி என்று அழைக்கலாம். அப்படி அழைத்தால் கொடையாளி என்று பொருளாவதால் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.
இந்த விநாயக வள்ளல் சென்னை மயிலையில் வசித்தவர் என்று அறிய வருகின்றது.
சென்றவாரம் ஓர் விடுகவி பார்த்தோம். அதற்கான விடை மதுரை. நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், பகவான் ஜி உள்ளிட்ட பலர் சரியாக கணித்து அசத்தி இருந்தனர். விடுகவி என்றால் என்ன என்று ஊமைக்கனவுகள் தளத்தில் அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார் நண்பர் விஜி அவர்கள். இன்று மீண்டும் ஓர் விடுகவி பார்ப்போமா?
விடுகவி:
ஆன்நெய்தனைப் பூனை அருந்தினதும் அல்லாமல்
பூநெய்தனை ஈஎடுத்தும் போனது வும்- மான் அனைய
கண்ணார் தலைஅதனில் காய்காய்த்து அறுத்ததுவும்
நண்ணா அறிந்து நவில்.
ஆனையைப் பூனையானது உண்டது. அந்த பூனையை ஈ தூக்கிச்சென்றது. மான் போன்ற பெண்களின் தலையில் காய் காய்த்ததும் அறுத்தார்கள். இவற்றை என்னவென்று நன்கு அறிந்து சொல்வாயாக!
விடைகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இனிய இலக்கியச் சுவையுடன் சந்திப்போமா?
தங்கள் வருகைக்கு நன்றி! உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!