Quantcast
Channel: தளிர்
Viewing all 1537 articles
Browse latest View live

தளிர் சென்ரியூ கவிதைகள்!

$
0
0
தளிர் சென்ரியூ கவிதைகள்!

அணியவில்லை மூடி!
ஒளிந்துகொள் ஓடி!
தலைக்கவசம்!

உறைபோட்ட நிலங்கள்!
இரைக்க மறுத்த நீர்!
சிமெண்ட் சாலைகள்!

செயற்கை உரங்கள்
செழித்தது
வட்டிக்கடை!

ஓட்டை விழுந்தது
கிழிந்து போனது வானிலை!
ஓசோன்!

இறைத்த காசில்
பொறுக்கி எடுக்கப்படுகின்றது
தேர்தல் வெற்றிகள்!

தூக்கில் இட்டார்கள்!
கதறவில்லை!
தின்பண்டங்கள்!

கஞ்சி ஆறுமுன்
பசி ஆறியது ஆடு!
சுவரொட்டி!

வளிக்கு
வலி எடுத்தது!
தொழிற்சாலை புகை!

போதை அழைத்ததும்
தவறுகின்றது
பாதை!

ஓடிப்போனார்கள்!
உடைந்துபோனது
ஊர்!

விளையும் முன்
அறுவடை செய்கிறார்கள்!
குழந்தைத் தொழிலாளர்கள்!


இளைக்க இளைக்க
வருந்துகிறது மனசு!
 பணப்பை!

அள்ளிக் குவித்தார்கள்!
தள்ளிப்போனது பாசனம்!
மணல்!

உயிரை உறிஞ்சினார்கள்!
ஊற்றெடுக்கவில்லை நீர்!
மணல்!

வானுயர்ந்த கட்டிடங்கள்!
வழி அனுப்பின
காற்று!

துரித உணவுகள்!
துறத்துகின்றது
ஆயுள்!

வெட்டுபட்ட மரங்கள்!
கட்டுப்படுத்தின!
மழை!

ரணங்களை கரைக்க
பணங்களை பறிக்கின்றன
மருத்துவமனைகள்!

இலக்கினை எட்டுகையில்
விளக்கினை இழக்கின்றன குடும்பங்கள்!
டாஸ்மாக்!

உணவுக்கு ரேசன்!
குடிப்பதற்கு அளவில்லை!
முரணான அரசு!

 இன்றைய வலைச்சரத்தில் எனது பதிவைக் காண இங்கு: இணையக் கடலில் ஓடும் சிற்றாறு நான்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

பயிரை மேயும் வேலிகள்!

$
0
0



குழந்தையின் உடல் அனலாய் கொதிப்பதைக் கண்டு கனகத்திற்கு கையும் ஓடவில்லை! காலும் ஓடவில்லை! சமையல்கூட செய்யாமல் குழந்தையின் பக்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். வேலைக்குச் சென்ற அவள் புருஷன் இன்னும் வீடு திரும்பவில்லை! அவன் ஓர் கூலித் தொழிலாளி. இந்த வேலை என்று இல்லை! எது கிடைக்கிறதோ செய்வான். கிடைக்கும் காசில் குடித்துவிட்டுத் திரும்புவான்.
   
    “பாவிமனுஷன்! இன்னிக்காவது குடிக்காம வரணும்! முருகா! நீதான் அந்த ஆளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கணும்!” கனகத்தின் வேண்டுதலை முருகன் நிறைவேற்றவில்லை! அப்போது உள்ளே நுழைந்த கனகத்தின் புருஷன் சபாபதிக்கு முன் சாராயநெடி உள்ளே நுழைந்து கனகத்தை ஆத்திரப்படச் செய்தது.

 “ ஏய்யா! உனக்கு கொஞ்சமாவது புத்தி இருக்கா! குடும்பத்து மேல அக்கறை இருக்கா! பொழுதன்னைக்கும் சம்பாதிக்கிறதை இப்படி குடிச்சியே அழிக்கிறியே! இங்க புள்ள ஜுரத்துல கிடந்து தவிக்குது! உனக்கு  சரக்கு கேட்குதா?” என்று வெடித்தாள் கனகம்.

   சபாபதி அதை சிறிதும் லட்சியம் செய்யாமல், “ஏய் புள்ளை! சோறு போடு! இன்னிக்கு என்ன ஆக்கினே! கறி மீன் ஏதாவது செஞ்சியா?” என்றான்.

  “ யோவ்! நான் என்னா பேசறேன்! நீ பாட்டுக்கு சோறு போடச்சொல்றே! புள்ளை பச்ச தண்ணி குடிக்காம ஜுரத்துல இருக்குதுன்றேன்!”

 “அது  கிடக்குதும்மே! எனக்கு பசிக்குது! சோறு போடு!”

 “ சோறு ஆக்கலை!”

“ என்னது சோறு ஆக்கலையா! அப்ப வீட்டுல என்னத்தை ........புடுங்கிட்டு இருந்தே! புருஷன்காரன் பகல் முழுக்க வேலை செஞ்சிட்டு ஊட்டுக்கு வந்தா ஒரு புடி சோறு வக்கணையா ஆக்கி போட முடியுதாடி உன்னால...!”

   “ யோவ்! நீ என்னாத்தை சம்பாரிச்சு கொண்டுவந்துகொட்டிட்டேன்னு அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கே! சம்பாதிக்கற எல்லாத்தையும் பொழுதன்னைக்கும் குடிச்சுப்புட்டு இங்க வந்து அதிகாரம் பண்றே வக்கில்லாத புருஷா!”
” என்னடி சொன்னே?” கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
“ யோவ்! பெத்த குழந்தை மூணுநாளா கண்ணை தொறக்காம கிடக்குது! அத ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியாம நான் அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன்! உனக்கு அது தெரியுதாய்யா! பெரிசா சோறு கேட்டு அடிக்க வந்துட்டே!”
ஆமாம்! ஊரு உலகத்துல இல்லாத புள்ளை! இவதான் பெத்தா! எப்ப வந்தாலும் சோத்தை போடாம ஒரே பொலம்பல்! போங்கடி நீயும் உன் மவனும்! செத்து தொலைங்க! நான் நிம்மதியா இருப்பேன்!  கத்திவிட்டு வெளியேறினான் சபாபதி.
  அட துப்புக்கெட்ட மனுசா! கொஞ்சமாவது இரக்கம் இருக்குதா பாரு!  என்று புலம்பிய கனகம் பண்ணையாரை பார்த்து உதவி கேட்டுவரலாம் என்று முடிவு செய்தாள்.
 பண்ணையாரின் வீட்டில் எடுபிடி வேலைக்கு சபாபதிதான் அவளை சேர்த்துவிட்டிருந்தான். இரண்டு நாட்களாக மகனுக்கு ஜுரம் என்று போகவில்லை! இன்று போய் ஏதாவது பணம் வாங்கி மகனை ஆஸ்பத்திரியில் காட்டிவரலாம் என்று நினைத்தாள்.
“ அய்யா!”
“யாரு கனகமா? என்னம்மா ரெண்டுநாளா வரலை! இப்பத்தான் அட்ரஸ் கண்டுபிடிச்சி வர்றியா?”
இல்லே அய்யா! பச்ச புள்ளை ஜுரத்துல தவிக்குதுங்கய்யா! அதான் வர முடியலை! ஒரு ரெண்டுநாளு பொறுத்துக்கங்க ஐயா! வேலைக்கு வந்திடறேன்!”
 “சரிசரி! அதைச் சொல்லத்தான் வந்தியா! நான் என்னமோ வேலை செய்ய வந்திருக்கேன்னு உனக்காக நிறைய வேலைங்க ஒதுக்கி வச்சிருக்கேன்!”
  ”அய்யா….” இழுத்தாள் கனகம்.
  “என்னம்மா! அதான் சொல்லிட்டேனே! ரெண்டு நாள் பொறுத்துதான் வா!”
  ”அதில்லை ஐயா!”
   “எதில்லை?”
   “அய்யா கொஞ்சம் பணம் கொடுத்து உதவி பண்ணா எம்  புள்ளைய ஆஸ்பத்திரியிலே காட்டிருவேன்!”
“ ஏம்மா! கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலே  இப்பல்லாம் பணம் கேக்கறாங்களா என்னா? உன்னை மாதிரி ஏழைபாழைங்க என்ன பண்ணுவீங்க பாவம்? ”கேலியாக பேசினார் பண்ணையார்.
 “ஐயா! இது விஷ ஜுரமாம் தனியார் ஆஸ்பத்திரிக்கு டவுனுக்கு கொண்டுபோகனும்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலே சொல்லிட்டாங்க!”
  “அப்ப நிறைய பணம் செலவாகுமே!”
 “நீங்க கொஞ்சம் கடனா கொடுத்து உதவுனா…”
ஏம்மா! நான் யாருக்கும் அடமானம் இல்லாம கடன் கொடுக்க மாட்டேனே! ஏளனமாக சொன்ன பண்ணையாரின் கண்கள் அவளின் அங்கங்களை மேய்ந்தன. கனகம் கூசிப்போனாள்.
“ஐயா!  என் சம்பளத்துல கழிச்சிக்குங்க! நான் வேலை செஞ்சு அடைச்சிடறேன்!”
 ”தோ பாருடா! உன் புருஷன் முன் பணம் வாங்கிட்டுதான் உன்னை வேலைக்கே சேர்த்து விட்டிருக்கான். அது கழியவே இன்னும் பல மாசம் ஆகுமே!”
 “அடமானம் எதுவும் இல்லீங்களே ஐயா!”
 “தோ பாரு கனகம்! எதுக்கு வெட்டியா பேசி இழுத்துக்கிட்டு! நீ மட்டும் சம்மதி! உன்னை மட்டுமல்லே உன் குடும்பத்தையே வச்சு காப்பாத்தறேன்! சரின்னு ஒரு வார்த்தை சொல்லு உன் மவனை இப்பவே டவுன் ஆஸ்பத்திரியிலே சேர்த்துடறேன்! உன் குடிசை வீட்டை கோபுரமா மாத்திடறேன்!”
  ச்சீ! நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்!  அடுத்தவன் பொண்டாட்டியை எப்படி இப்படி வாய் கூசாமா கேட்க முடியுது? அடுத்தவன் பொண்டாட்டியை பெண்டாள கூப்பிடறியே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம? உனக்கெல்லாம் எதுக்குய்யா வெள்ளைச் சட்டை! காறி உமிழ்ந்த கனகம் வேகமாக வெளியேறினாள்.
 அவள் வீடு திரும்பிய சமயம் சபாபதி திரும்பிவிட்டிருந்தான். குழந்தை ஜுரவேகத்தில் அனத்திக் கொண்டிருக்க, “எங்கடி போயி மேய்ஞ்சிட்டு வரே நாயே!” என்றான்
 யோவ்! நீ ஒழுங்கா இருந்தா! குடிக்காம புருஷனா நடந்துக்கிட்டா இப்படி கண்ட நாய் என்னை கேள்வி கேக்குமா? பண்ணையார் வீட்டில் நடந்ததை கூறினாள் கனகம்.
   “ ஏண்டி! ஒத்துக்கறதுதானே! வேலை செய்யாமலேயே நாள் முழுக்க குடிப்பனே! உக்காந்து சோறு துண்ணுவனே!”
  “ ஏய்யா! நான் உன் பொண்டாட்டி! அது நினைப்பு இருக்கா?”
  “அதனாலதான் உன்னை போகச் சொல்றேன்!”
கனகத்திற்கு பேரதிர்ச்சியாக இருந்தது.  ”சே! வெக்கம் கெட்ட மனுஷா! பொண்டாட்டியை அடுத்தவன் கிட்ட விட்டு சம்பாதிக்க நினைக்கறியே உனக்கு மானம் இருக்கா? அறிவு மழுங்கி போயிருச்சா? உனக்கெல்லாம் எதுக்குய்யா பொண்டாட்டி? நீ கட்டுன தாலி என் கழுத்துல இருக்கறதே அசிங்கம்! அதைஅடகு    வைக்க கூட நான் தயங்கினேன் ! ஆனா நீ பொண்டாட்டியையே அடகு வெக்க துணிஞ்சிட்டியே! ”
  “ என்னாடி! ஓவரா பேசிக்கிட்டு போறே?” கையை ஓங்கிவந்தான் சபாபதி.
 அவனது கையை மடக்கிய கனகம், யோவ்! நிறுத்துய்யா!  நீயெல்லாம் ஒரு புருஷன்! உன் கூட வாழறதைவிட வாழாவெட்டியா இருந்துட்டு போறேன்! இனி அடிக்கற வேலை வெச்சுக்காதே! நீ கட்டுன தாலியை வித்து பையனுக்கு வைத்தியம் பார்க்க போறேன்!  இதையும் உன்கிட்ட அறுத்து போட்டுருவேன்! ஆனா ரோஷம் கெட்ட நீ அதையும் குடிச்சு அழிச்சிருவே! அதனால அதைச் செய்யலை!
   “உன் கூட வாழ்ந்த நாளுக்கு கூலியா அதை எடுத்துக்கிறேன்! இனிமே உன் கூட வாழறதைவிட நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேச்சி பொழச்சுக்கறேன்! பாதுகாப்பா இருக்க வேண்டிய வேலியே  ஆடாக மாறி பயிரை மேயறபோது பயிர்கள் மத்த ஆடுகளுக்கு பயப்பட வேண்டியதே இல்லை!”
   உங்களை மாதிரி வேலிகளின் பாதுகாப்பில் இருப்பதை விட ஆடுங்களோட போறாடி வாழறதே மேல்! போ! போ குடிச்சு குடிச்சு சாகு! இப்பவே நான் பொட்டை அழிச்சுக்கறேன்! என்ற கனகம் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேறுகையில் வானத்தில் ஓர் இடிமுழக்கம் கேட்டது போல் இருந்தது.

டிஸ்கி} நான் நடத்திய கையெழுத்து பத்திரிக்கை தேன் சிட்டில் 99ல் எழுதிய கதை! சிறுமாற்றங்களுடன் இங்கு பதிவு செய்கின்றேன்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கடியாரம் கட்டிய நாட்கள்!

$
0
0
 கடியாரம் கட்டிய நாட்கள்!

   காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் கடியாரங்களுக்கும் விலக்கல்ல! 

 முன்பெல்லாம் எல்லோர் கைகளிலும் அணி செய்த அழகான கைக் கடியாரங்கள் இப்போது காட்சிப்பொருளாக மாறிவிட்டன. அலைபேசியில் கடிகாரம் வந்தபின் கைக்கடிகாரங்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. ஆனாலும் பெண்களுக்காக டிசைன் டிசைனாக  வளையல் மாதிரி சில கடிகாரங்களை ஒரு கடிகாரக் கடையில் கண்டேன். ஒரு காலத்தில் ஓகோவென்றிருந்த டைம்பீஸ் தன் ஓட்டத்தை நிறுத்தி ஓய்வு பெற்றதைப் போல  கைக் கடிகாரங்களும் ஓய்வு பெற்றுவிடுமா என்று தெரியவில்லை.

   ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கைக் கடிகாரங்களில் இருந்து கத்தி, லேசர், மைக்ரோபோன் எல்லாம் கிடைக்கும்.  ஒரு முப்பது வருடங்கள் முன்பு டிஜிடல் கைக் கடிகாரங்கள் புழக்கத்துக்கு வந்து முள் கடிகாரங்களை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளியது. சாவி கொடுக்க வேண்டியதில்லை! சின்ன குழந்தைகள் கூட எளிதாக மணி பார்க்கலாம், துல்லியமாக மணி நிமிடம், செகண்ட் அனைத்தும் அறியலாம் என்ற வசதி  முள் கைக்கடிகாரங்களை பின்னுக்குத் தள்ளி இந்த வகை கடிகாரங்கள் மீது மக்களை மோகத்தில் ஆழ்த்தியது.

       என் சின்ன வயதில் எனக்கு கைக்கடிகாரங்கள் மீது கொள்ளை ஆசை! வீட்டில் வறுமை நிலை என்பதால் பொம்மைக் கடிகாரங்கள் கூட வாங்கித்தர யோசிப்பார்கள். ஜவ்வு மிட்டாய் காரன் கடிகாரம் போல செய்து கட்டிவிடுவான். அதை வாங்கிக் கொடு என்று கேட்டால் உடம்புக்கு நல்லதில்லை என்று சொல்லிவிடுவார்கள். அந்த கடிகாரம் கட்டிய பசங்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம்.

  பக்கத்து ஊர் முருகன் கோயில் திருவிழாவில் கடைவீதி போடுவார்கள். அங்கே கடைகளில் பொம்மை கடிகாரங்கள் இருக்கும். கலர் கலராய் மின்னும் அதன் கண்ணாடியில் விதவிதமான உருவங்கள் மாறும். நேரம் மட்டும் மாறாது. அந்த கடிகாரத்தின் விலை ஒரு ரூபாயாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஒரு ரூபாய் செலவு செய்ய யோசிப்போம்.

      எங்காவது வெளியில் கூட்டிச் சென்றால் பெட்டிக் கடையில் தொங்கும் கடிகாரங்களை காட்டி வாங்கித் தரச் சொல்வேன். அப்பா மறுப்பார். அது வேண்டாம் அப்புறம் வாங்கிக்கலாம் என்பார். மனம் ஒடிந்து போகும். எப்படியோ நாலாவது படிக்கையில் ஓர் பொம்மைக் கடிகாரம் வாங்கி கட்டி அதை அக்குவேறாக பிரித்தும் பார்த்து என் ஆசையைத் தணித்துக் கொண்டேன்.

     ஏழாவது படிக்கையில் முருகர் கோயிலில் அர்ச்சகர் வேலை செய்து ஒரு நாற்பது ரூபாய் சம்பாதித்தேன். அந்த சமயத்தில் அது பெரும் தொகை! ஒருநாளில் அவ்வளவு தொகை சம்பாதிப்பது பெரியவர்களால் கூட முடியாது. சின்ன பையன் சம்பாதித்துவிட்டானே! என்று சொன்னார்கள். அந்த காசை எடுத்துவந்து அப்பாவின் நண்பர் திரு கண்ணனிடம் கொடுத்து வாட்ச் வாங்கி வரச் சொன்னேன்.

   அவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிப்பவர். வாரம் ஒரு முறை அப்பாவைபார்க்க ஊருக்கு வருவார். அவர் மறு வாரம் வருகையில் டிஜிட்டல் வாட்ச் ஒன்று வாங்கி வந்தார் மெட்டல் பட்டையுடன். நாற்பது ரூபாய் வாட்ச் என் கையில் ஆசையாக அணிந்து கொண்டேன். அதில் அலாரமும் செட் செய்யலாம். அதில் வினாடி செட் செய்து பெரும்பேட்டில் இருந்து ஊர் செல்லும்வரை எத்தனை வினாடி ஆகின்றது என்று கணக்கிடுவேன். இத்தனை நிமிடத்தில் இவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்று நானாக போட்டி வைத்து நடப்பேன். சுமார் ஓர் மூன்று அல்லது நான்கு மாதம் ஓடிய வாட்ச் நின்று போய்விட்டது.

     ஊருக்கு வந்து அப்பாவிடம் கொடுத்தேன். செல் போட்டுவர எடுத்துச்சென்றார் அப்பாவின் நண்பர். பின்னர் வாட்ச் வரவில்லை!  ஓடாது என்று சொல்லிவிட்டார் வருத்தமாகிவிட்டது. பின்னர் மீண்டும் வாட்ச் வாங்கும் ஆசை பெருகிவிட்டது. ஆனால் பணம்தான் சேர்க்க முடியவில்லை! காலம் என்னை ஆசானூரில் இருந்து நத்தம் கொண்டுவந்து சேர்த்தது.  அந்த சமயத்தில் அப்பாவிற்கு அவரது நண்பர் ஓரு சிட்டிசன் வாட்ச் பரிசளித்தார். கோல்ட் கலர். டிஜிட்டல் கிடையாது. முள் வைத்தது. ஆனால் செல் போடவேண்டும். அவ்வளவு அழகாக இருக்கும் அது. அப்பா கழட்டி வைக்கும் சமயம் எடுத்து கட்டிப் பார்ப்பதுண்டு. அந்த வாட்சின் அழகில் மயங்கிய நண்பர் ஒருவர் அதை விலைக்கு கேட்க அப்பா கொடுக்க மறுத்துவிட்டார். நீண்ட நாள் உழைத்தது அது.

  அதன் பிறகு பத்தாவது படிக்கையில் மீண்டும் டிஜிட்டல் வாட்ச் வாங்கினேன். முப்பது ரூபாய் விலையில். அது மிகவும் நன்றாக உழைத்தது. பேட்டரி மட்டும் அவ்வப்போது மாற்றுவேன். கல்லூரி முதலாண்டு படிக்கையில் அதற்கும் முடிவு வந்தது. மீண்டும் ஓர் டிஜிட்டல் வாட்ச் அது இரண்டு வருடம் ஓடியது. இந்த வாட்ச்  டூ இன் ஒன் வாட்சாக இருந்தது. இரண்டு டைம் காட்டும். 24 மணி நேர முறை ஒன்று. 12 மணி நேர முறை ஒன்று.

   97ம் வருடம் என்று நினைவு. முதன் முதலாக சாவி கொடுத்து ஓடும் ஓர் கைக் கடிகாரம் வாங்கினேன். எச். எம்.டி வாட்ச். முன்னூறு ரூபாய் விலையில் என்று நினைவு. அது நீண்ட நாள் உழைத்தது. பத்து வருடங்கள். சில சர்வீஸ் மட்டும் செய்ததாய் நினைவு.  2007ல் டைமெக்ஸ் வாட்ச் வாங்கினேன் அதுவும் விலை குறைவுதான் 450 ரூபாய். இன்னும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன் பின் இரண்டு வாட்ச்கள் வாங்கினேன். டைமெக்ஸ் வாங்கும் முன் ஓர் சிட்டிசன் வாட்ச் வெறும் 100 ரூபாய் கொடுத்து 2000த் தில் வாங்கினேன். கறுப்பு டயல் கொண்ட அது சமர்த்தாய் உழைத்தது ஐந்து வருடங்களுக்கும் மேலாய்.

    இப்படி வாட்ச் வாங்க முடியாது தவித்து பின்னர் வாட்ச் வாங்கி அணிந்து அனுபவித்த பின் நடுவில் வாட்ச் ஆசை விட்டுப் போனது. அலைபேசியிலேயே மணிபார்த்துக் கொண்டேன். ஆனால் எனக்கு அது சவுகர்யமாக படவில்லை.  அதனால் மீண்டும் கடிகாரம் அணியத் தொடங்கினேன். சோனி தயாரிப்பு ஒன்று அணிந்து கொண்டேன். இப்போதுவரை நன்றாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.  இன்று அவசர கதியில் புறப்படுகையில் வாட்ச் அணிய மறந்துவிட்டேன்.

   அப்போது சிந்தித்த போது இந்த பதிவு தோன்றியது. எழுதி உங்களை மொக்கைப் போட்டுவிட்டேன்.  இப்போது எல்லா பொருட்களிலும் வாட்ச் வந்து வாட்ச் புல்லாக இருக்கிறது உலகம். ஆனால் வாட்ச் அணிந்த கைகள் இப்போது வாட்ச் இல்லாமல் அழகிழந்து இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.  எல்லாம் ஒரு மாயைதான்!

டிஸ்கி} நேற்றே எழுதி பதிவிட முடியாமல் போன பதிவு. கணிணி கொஞ்சம் மக்கர் பண்ணுகின்றது. வலைச்சர பதிவுகள் இன்று கொஞ்சம் தாமதமாய் வெளிவரும். பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 41

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 41


1.   கல்யாண நாளுக்கு நகை வாங்கி கொடுத்ததுக்கு உன் மனைவி கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாளா? ஏன்?
நான் வேலைக்காரியின் கல்யாண நாளுக்கு இல்ல வாங்கி கொடுத்தேன்!

2.   டாக்டர் இன்னிக்கு எல்லாமே அப்நார்மலா இருக்குது!
  என்ன சொல்றே?
நீங்க ஆபரேசன் பண்ணிண பேஷண்டுக்கு நினைவு திரும்பிருச்சு!

3.   நெத்தியிலே எதுக்கு பிளாஸ்திரி ஒட்டியிருக்கே?
மனைவியோட புடவையை இஸ்திரி பண்றப்ப நடந்த தப்புக்குத்தான் இந்த பிளாஸ்திரி ஒட்ட வேண்டியதா போச்சு!

4.   பையனை ப்ரி.கே.ஜி யிலே சேத்தியே எப்படி இருக்கான்?
நிறைய கே.ஜி புத்தகங்களை சுமந்துக்கிட்டுத் திரியறான்!


5.   புலவரே நீர் பெரிதாக என்னை பற்றி அப்படி ஏதும் பாடிக்கிழிக்கவில்லையே?
மன்னரே நீங்கள் பெரிய செயல்கள் எதுவும் செய்து கிழிக்கவில்லையே!

6.   ஓட்டல்ல மாவட்டறவர் இதுக்கு முன்னாடி பட்டிமன்ற பேச்சாளரா இருந்தவராம்!
  ஒஹோ! அதான் அரைச்ச மாவையே அரைச்சிக்கிட்டு இருக்காரா?

7.   தலைவர் ஏடாகூடமா அறிக்கை விட்டு மாட்டிக்கிட்டாரா எப்படி?
தமிழக அரசு  படங்களுக்கு வரி விலக்கு அளிக்காவிட்டால் கூட பரவாயில்லை பத்திவிலக்கு  அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளாரே!

8.    மாப்பிள்ளை ரொம்ப கறார் பேர்வழியா இருக்கலாம் அதுக்காக பொண்ணை எடை போட்டு புரொபைல்ல கொடுத்திருக்கிற எடையோட இருந்தாத்தான் தாலிக்கட்டுவேன்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

9.   நம்ம தலைவர் அப்பாவியா இருக்காரு!
  எப்படிச் சொல்றே?
எல்லாக் கழகத்துக்கும் போய் வந்தாச்சு! போக்குவரத்துக் கழகத்துல சேர்த்துப்பாங்களான்னு கேக்கிறாரு!


10. நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது மன்னா!
  உடனே பத்தாயிரம் சீப்புக்களை தயாரித்து தலைவாரிவிடுங்கள் அமைச்சரே!

11.சாதாரண சளிக்காய்ச்சல்னு சொல்றீங்க ஆனா எதுக்கு இவ்ளோ மருந்து எழுதிக்கொடுக்கறீங்க டாக்டர்?
மெடிக்கல் ஸ்டோர் காரன் ரெண்டுநாளா மருந்து விற்கலைன்னு என் மண்டையை காய்ச்சறானே!

12.அந்த பையனோட அப்பா கிண்டல் பேர்வழியா இருக்கார்!
  எப்படி?
உங்க பையன் அவனோட இடத்துல உட்காராம பக்கத்து பையனோட சீட்லதான் உட்காருவேன்னு அடம்பிடிக்கிறான்னு சொன்னா ஜாதகப்படி அவனுக்கு சொந்த இடம் அமையாது மேடம்னு சொல்றாரு!

13.அவர் நிறைய லட்சியங்களோட அரசியலுக்கு வந்தார்!
  அப்புறம் ?
நிறைய கோடிகளை சம்பாதித்துக் கொண்டார்!

14.உன் லவ்வருக்கு நீ அதிகமா பர்மிஷன் கொடுத்தது தப்பா போச்சா ஏன்?
இப்ப டாக்டர் கிட்ட  அட்மிஷன் கேட்க வேண்டிய நிலையா போயிருச்சு!

15. காஸ்ட்யூம் செலவை குறைச்சதனால படத்தோட பட்ஜெட் எகிறிப் போயிருச்சா எப்படி?
ஹீரோயினோட சம்பளம் உயர்ந்து போச்சே!

16.ஏண்டா நான் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கேன் ஒருத்தனும் வாயைத் திறக்க மாட்டேங்கிறீங்களே!
நீங்கதானே சார் சொன்னீங்க பைத்தியக்காரத்தனமான கேள்விக்கெல்லாம் பதிலே கிடையாதுன்னு!

17. திருடனுங்க பயம் ஜாஸ்தியா இருக்குன்னு ஒரு நாய்க்குட்டியை வாங்கி கட்டினியே என்ன ஆச்சு?
அந்த நாய்க்குட்டியையே யாரோ திருடிட்டு போயிட்டாங்க!

18.நெட் செண்டர்ல வேலை பாக்கிற பொண்ணை உன் பையன் லவ் பண்றான்னு சொன்னியே என்ன ஆச்சு!
நிறைய ஜி.பி செலவழிச்சதுதான் மிச்சம் டேட்டா சேவ் ஆகலை!

19.ஹெல்மெட் போட்டுட்டு போனவங்களை போலிஸ் புடிச்சுடுத்தா ஏன்?
அவங்க ரெண்டு பேரும் திருட போயிருக்காங்க!

20.மன்னர் உடைவாளை கையில் எடுக்கவே மாட்டேன் என்கிறாறே என்ன விஷயம்?
அது உடைந்து போன வாளாகி ரொம்ப நாள் ஆகிவிட்டதாம்!

21. உன் கணவர் உன்னை மன நல டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போகனும்னு சொல்றாரா ஏன்?
நான் அவங்க அம்மா கூட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்ததை பார்த்துட்டார்!


22.மன்னர் எதற்கு திடீரென்று ஆங்கிலம் கற்றுக்கொள்கின்றார்?
பேஸ்புக்கில் வெளிநாட்டு ராணியோடு கடலை போடத்தான்!

23. உன் சமையல்ல உப்பு காரம் சரியா இல்லேன்னு நாலு பேரு முன்னாடி மனைவியை ஓங்கிக் கேட்டது தப்பா போயிருச்சு!
என்ன ஆச்சு?
நாலு பேர் முன்னாடி என் கன்னம் வீங்கிப் போயிருச்சு!



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


எறும்புகளின் கோபம்! பாப்பா மலர்!

$
0
0
எறும்புகளின் கோபம்! பாப்பா மலர்!


வெகு காலத்துக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு  கணவன் மனைவி வாழ்ந்து வந்தாங்க! அவங்களுக்கு மூணு கொழந்தைங்க. மூணுபேரும் ஆண் பிள்ளைங்க. மூத்தவனும் கடைசி பிள்ளையும் நல்லா இருந்தாங்க. நடுப்பிள்ளைக்கு மட்டும் கண்ணு தெரியாது.

   இந்த பையன் மட்டும் கண்ணு தெரியாத பையனா பொறந்துருச்சேன்னு புருஷனும் மனைவியும் கவலைப்பட்டு கவலைப்பட்டு அவங்களும் நோயில விழுந்துட்டாங்க. இனி பிழைக்க மாட்டோம்னு அவங்களுக்கு தோணவும் தங்களுடைய காடு கரையெல்லாம் நடு மகன் பேர்ல எழுதி வைச்சாங்க. அப்புறம் மூத்தவனையும் இளையவனையும் கூப்பிட்டு சில புத்திமதி சொன்னாங்க.

  “ பிள்ளைங்களா! உங்களோட பிறந்தவன் கண்ணு தெரியாதவனா இருக்கான். அதனால அவன் பேருக்கு நாங்க சொத்து எல்லாத்தையும் எழுதிட்டோம். இந்த சேதி ஊராருக்குத் தெரிஞ்சா அவனை ஏமாத்தி எல்லாத்தையும் பிடுங்கிகிட்டு ஊரவிட்டு விரட்டிருவாங்க. அதனால ரகசியமா அவன் பேருல எழுதி இருக்கோம். நீங்க ரெண்டுபேரும் அதுல வர்ற வருமானத்தை எல்லாம் எடுத்துக்குங்க, ஆனா  அவன் வயித்துக்கு கஞ்சி ஊத்தி துணிமணி எடுத்துக் கொடுங்க. அவன் காலத்துக்கு அப்புறம் நீங்க சொத்தை பிரிச்சுக்கிட்டு சுகமா இருங்க!” அப்படின்னு சொன்னாங்க.

  இதைக்கேட்டதும் ரெண்டு மகன்களுக்கும் கோவம் வந்துச்சு! நமக்கு ஒண்ணும் இல்லாம குருட்டு பையனுக்கு எல்லாம் எழுதிட்டாங்களே! இன்னும் கொஞ்ச நாள்ள சாகப்போற இவங்க கிட்ட சண்டை போடவேண்டாம். அப்புறம் பார்த்துக்கலாம்னு  சரிம்மா! சரிப்பா! நீங்க சொல்றபடியே நடந்துக்கிறோம்னு சொல்லிட்டாங்க.

   கொஞ்ச நாள்ள அந்த கணவன் மனைவி ரெண்டு பேரும் இறந்து போயிட்டாங்க. சொத்து எழுதி வச்ச விவரம் அப்பா- அம்மா அண்ணன் – தம்பிக்கிட்டே பேசுனது எதுவும் நடுப்பையனுக்கு தெரியாது.  அவன் பாட்டுக்கு எப்பவும் போல மூத்தவன் வீட்டுல சாப்பிட்டுக்கிட்டு இருந்தான்.

  ஒருநாள் அவங்க அண்ணன், “டேய்! இனிமே முப்பது நாள் இங்கேயும் முப்பது நாள் தம்பி வீட்டிலேயும் சாப்பிட்டு தங்கிக்க என்று சொன்னான். நடுப்பையனும் அதை ஒத்துக்கிட்டு தம்பி வீட்டுக்கு போய் தங்கினான்.

   இவன் வேலையே செய்யாம மூணு வேளையும் கஞ்சி குடிக்கிறது அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் எரிச்சலா இருந்துச்சு.  “ இவனும் நம்ம ரெண்டு பேரைப் போல ஒரே தாய் வயித்துல பொறந்தவன் தானே! நாம மட்டும் உழைக்கணும் இவன்  உட்காந்து திங்கணுமா?” அப்படின்னு பேசிக்கிட்டாங்க. அப்புறமா நடுப்பையனுக்கு  களத்துமேட்டில காவல் வேலையைக் கொடுக்கலாம்னு முடிவு செஞ்சாங்க.

மூத்தவன் ஒருநாள் களத்துல சோளத்தட்டையை காயப்போட்டு,  “கண்ணு தெரியாதுன்னு சொல்லாம ஒழுங்கா காவல் பாரு! ஒரு குருவி காக்கா வந்து கொத்திக்கொண்டு போகாம  நல்லா காவல் காக்கணும் தெரியுதா? சாக்கு போக்கு சொல்ல கூடாது. அப்படி சொன்னியோ துரத்திவிட்டுருவோம்”னு சொன்னாங்க!

  நடுப்பையனும், அண்ணனும் தம்பியும் எத்தனை நாளைக்குத்தான் நம்ம உட்கார வைச்சு தண்டக் கஞ்சி ஊத்துவாங்க! அவங்க சொல்ற வேலையை செஞ்சி கவுரவமா சாப்பிடலாம்னு விசுவாசமா காவல் காத்துக்கிட்டு நிக்கான். ஒரு பெரிய கம்பை தரையில தட்டிக்கிட்டு “சூ! சூ!” என்று கத்திகிட்டு அவன் காவல் காக்கையில் ஒரு காக்கா குருவியும் கிட்ட நெருங்கலை!


   சாயங்காலம் ஆச்சி. மூத்தவன் வந்து சோளக்களத்தை பார்த்து அசந்து போயிட்டான். ஒரு சோளம் கூட குறையலையே! கண்ணு தெரியாட்டியும் நல்லா காவல் காக்கிறானே! எந்த சாக்குச் சொல்லி இவனை விரட்டறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சான். கொஞ்சநேரத்துல அவன் தம்பியும் வந்தான்.
 
அப்போ களத்தோட ஈசான்ய மூலையிலே ஒரு ஏழெட்டு எறும்புங்க சோளத்தை தூக்கிக்கிட்டு வரிசையா போய்க்கிட்டு இருந்துச்சுங்க! அதை பார்த்ததும் அண்ணனுக்கும் தம்பிக்கும் இதான் சாக்குன்னு தோணுச்சு.
 
  ‘நீ காவல் இருக்கிற லட்சணம் இது தானாடா? சோளத்தை எல்லாம் எறும்புங்க தூக்கிட்டு போவ விட்டுட்டு என்னத்தை பெரிசா காவல் காக்கிறே? அதுங்க இப்படி திருடிக்கிட்டு போச்சுன்னு களமே காலியாயிடும் போல இருக்க! காலையில் இருந்து எவ்வளோ சோளம் போச்சோ? தெரியலையே! அதுங்க எடுத்துக்கிட்டு போன சோளத்தை கொண்டுவந்தாத் தான்  இனிமே உனக்கு கஞ்சி ஊத்துவோம். இல்லாட்டா இனி வீட்டுப் பக்கமே வராதேன்னு” சொல்லி விரட்டி விட்டுட்டாங்க!

   நடுப்பையன் பாவம்! என்ன செய்யறதுன்னே தெரியலை! செத்துப்போன அப்பா அம்மாவை நினைச்சு அழுதுகிட்டே நடந்தான். நடந்தான் அப்படி நடந்தான். வழியிலே ஓர் எறும்பு புத்துக்கிட்ட வந்து உக்காந்து அழுதுகிட்டே இருந்தான்.  அந்த புத்துல இருந்து வர்ற எறும்புகளும் போற எறும்புகளும் இவன் அழுதுகிட்டே இருக்கிறதை பார்த்து அரண்மணைக்குள்ள போய் ராணி எறும்புகிட்ட சொல்லுச்சுங்க! “ ரெண்டு கண்ணும் இல்லாத ஒருத்தன் நம்ம புத்து வாசல்ல உக்காந்து அழுதுகிட்டு இருக்கான்”  என்று கவலையா சொல்லிச்சுங்க.


  உடனே ராணி எறும்பு பல்லாக்கிலே ஏறி உக்காந்துகிட்டு வெளியே வந்துச்சு. நடுப்பையன் கிட்ட ஏம்பா நீ இங்க வந்து உட்காந்து அழுதுகிட்டு இருக்கே?ன்னு கேட்டுச்சு .

   தாங்க முடியாத சோகத்துல இருந்த நடுப்பையன், தன்னோட கதையை அழுதுகிட்டே சொல்லி, உங்க எறும்புப் படைங்க  சோளத்தை எடுத்துட்டு வந்ததாலே எனக்கு சோறு போட மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லி ’ஓ’ன்னு அழ ஆரம்பிச்சான்.

  இதைக் கேட்டதும் ராணி எறும்புக்கு வந்துச்சே கோவம்! “ பூமித்தாய்  தர்ற இரையை பொறுக்கி சாப்பிடற எங்களை காரணம் காட்டி கண்ணு தெரியாத உனக்கு இவ்ளோ கொடுமைய பண்ணிட்டாங்களே  உன் அண்ணன் தம்பிங்க! மனுஷங்களான அவங்களை சும்மா விடக்கூடாது.”

  “ எறும்புகளா! இனிமே நீங்க தீனிக்கு காடு மேடுன்னு அலையாதீங்க! மனுஷங்க இருப்பிடத்துக்கே போய் அவங்க திங்கறது எல்லாம் தின்னுக்கிட்டு அவங்க கூடவே குடியிருக்கணும். ஏதாவது இடைஞ்சல் பண்ணுனாங்கன்னா சும்மா விடாதீங்க எல்லோரும் சேர்ந்து கடிச்சு வைங்க. இதனால நாம செத்தாலும் பரவாயில்லை! அநீதி இழைச்ச அவங்களுக்கு தண்டணை கொடுத்த திருப்தியோடு செத்துப் போங்க!” அப்படின்னு கட்டளை போட்டது.

  அதனாலதான் அதுவரைக்கும் காடு கரையில இரை பொறுக்கி தின்னுக்கிட்டிருந்த எறும்புங்க மனுஷங்களோட வீடுகள்ல நுழைய ஆரம்பிச்சுது. நம்ம வீட்டு பண்டம் எல்லாத்தையும் சுவைச்சு ருசி பார்த்துக்கிட்டு இருக்குது.

  அதோட அந்த ராணி எறும்பு கண்ணுத் தெரியாத அந்த அப்பாவியை தன்னோட புத்துக்கு கீழே கூட்டிப் போய் வச்சுக்கிச்சாம். பூமிக்கு கீழே அவன் சுகமா வாழ ஏற்பாடு பண்ணுச்சாம்.

  அதுக்காகத்தான் இன்னும் இந்த எறும்புகள்ளாம் பூமிக்கு கீழே இரையை எடுத்துக்கிட்டு போவுதாம். நீங்களும் போய் பார்த்தீங்கன்னா அந்த கண்ணு தெரியாத தம்பி அங்க வாழறதை பார்க்கலாம்.

(செவிவழிக் கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



தித்திக்கும் தமிழ்! வாணியன் பாடிட தட்டான் புறப்பட்டான்! பகுதி 14

$
0
0
தித்திக்கும் தமிழ்!  வாணியன் பாடிட தட்டான் புறப்பட்டான்!


   ஊரெங்கும் ஆலயங்களில் பிரம்மோற்சவ வழிபாடுகள் நடக்கும். பத்து நாட்கள் நடக்கும் இந்த பிரம்மோற்சவத்தில் கருவறையில் இருக்கும் சுவாமி விக்கிரக வடிவிலே சர்வ அலங்காரத்துடன் வீதி உலா வருவார்.
ஒவ்வொரு நாளும் ஓர் அலங்காரம். வானவேடிக்கைகள், நாதஸ்வரம், மேளம், கொட்டு வாத்தியங்கள் நாட்டியங்கள் என விமரிசையாக  நடக்க பல்லக்கில் பவனி வருவார் சுவாமி.
 கருவறையில் இருக்கும் இறைவனை நாம் கோயிலுக்குச் சென்று வணங்குகிறோம். அவரது வீட்டுக்கு நாம் விருந்தினராகச் செல்கின்றோம். ஆனால் பிரம்மோற்சவ சமயத்தில் நம்மைக் காண நம் விருந்தினராக நம் இல்லங்களுக்கு வருகின்றார் சுவாமி.
  நம்மைத் தேடி அலங்கரித்துக் கொண்டு வரும் சுவாமியை வரவேற்றுப் பாடி பதிகங்கள் சொல்லி அர்ச்சனைகள் செய்து வழிபட்டு அனுப்புவோம். இப்படியாய் வீதி உலா வருகின்றார் இறைவன். இத்தகைய இறைவனின் வீதி உலா புலவன் ஒருவனின் கண்ணில் படுகின்றது.
 புண் உள்ளவன் கையும் பண் தெரிந்தவன் வாயும் சும்மா இருக்காது என்று ஓர் பழமொழி! இந்த புலவன் உடனே பாடுகின்றான். அவனுக்கு அந்த வீதி உலா இகழ்ச்சியாகத் தோன்றுகிறது. என்னய்யா! எங்கள் சாமியை இப்படி இகழ்ந்து பாடி கேலி செய்கிறாய்? என்றால், நான் எங்கே கேலி செய்தேன்! புகழ்ந்தல்லவா பாடினேன் என்கிறான் அந்த புலவன்.
 ஒரு பாடலில் இகழ்வது போல புகழ்வது வஞ்சப் புகழ்ச்சி அணி எனப்படும். வஞ்சமாய் இறைவனை புகழ்ந்த அந்த புலவன் வேறு யாரும் அல்ல! கவி காளமேகம் தான்.
  இதோ அந்தப் பாடல்!
   வாணியன் பாடிட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
   சேணியன் போற்றக் கடற்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
   கோணியன் வாழ்த்தக் கருமான் துகில்தனைக் கொண்டணிந்த
  வேணிய னானவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே.

இதை மேலோட்டமாக பார்த்தால் இகழ்வது போல இருக்கும். வாணியன் வியாபாரம் செய்பவன் பாட, துணி வெளுப்பவன் சுமக்க, வடுகர், செட்டி, கோணியன் போற்ற கருமானின் துணியணிந்த தட்டான் வீதியில் புறப்பட்டான் என்று தோன்றும்.
சொற்களை பிரித்து பொருள் உணர்ந்தால் இகழ்ச்சி மறைந்து புகழ்ச்சி வெளிப்படும்.
வாணியன் – வாணி- கலைமகளின் கணவனான பிரம்மா
வண்ணான் – வளப்பமான உடலை உடையவன் நந்தி
வடுகன் – பைரவன், செட்டி- முருகன், சேணியன் – இந்திரன்
கடற்பள்ளி- கடலில் பள்ளிகொண்டவன் – திருமால்-
கோணியன் – வளைத்தவன் , வில்லை வளைத்தவன் மன்மதன்,
கருமான் – கரிய மா – யானை- யானையின் தோலாகிய துணி
வேணியன் – வேணி – முடி = சடையணிந்தவன்
தட்டான் – மனம்- வாக்கு- காயங்களுக்கு அப்பாற்பட்டவன்.

விளக்கம்: நான்முகன் வேதம் ஓத நந்திதேவன் சுமந்துவர வயிரவரும் முருகரும் இந்திரனும் மற்றும் பலரும் வணங்க பாற்கடலில் பள்ளிகொண்ட திருமால் வழிபட இனிய கரும்பை வில்லாக வளைத்த மன்மதன் வாழ்த்த யானையின் தோலை ஆடையாக போர்த்திய சடையை உடைய  எவருக்கும் தட்டுப்படாத சிவபெருமான் வீதி உலா வந்தார்.


எத்தனை அழகாக சொற்களை இணைத்து பாடிக் களித்து நம்மையும் களிக்க வைக்கிறார் பாருங்கள்! அதனால் தான் அவர் காளமேகம்.
கோயிலா கோவிலா?  இறைவன் வாழுமிடம் கோயில் என்பது என் கருத்து. கோ – இறைவன். இல்- இல்லம்- கோவாகிய இறைவன் வாழுமிடம் கோயில். இதை பலரும் தவறாக கோவில் என்று எழுதுகின்றனர். இதைப்படிப்பவர்களாவது புரிந்து கொண்டு திருத்தி எழுதினால் நன்று.

மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் இன்னும் ஓர் அழகிய பாடலுடன் சந்திப்போம்! நன்றி!
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0


1.முகத்தைகாட்டி
பயமுறுத்துகிறது!
கண்ணாடி!

2.உயிரற்றமரத்தில்
உயிருள்ளபூக்கள் 
கம்பத்தில்பறவைகள்!

3.வெம்மைவெளியே
சென்றதில்குளுமை!
மழை!

4.ஒற்றையடிப்பாதையாக
சுருங்கியதுமனசு
அதீதகாதல்!

5.குளிரில்
முடங்கியதுசூரியன்!
மழை!


6.சிக்னல்கிடைத்ததும்
புறப்பட்டதுதொடர்வண்டி!
எறும்புகள்

7.அந்தரத்தில்தொங்கின
அஸ்திவாரமற்றவீடுகள்!
தூக்கனாங்குருவிக்கூடு!

8.வெள்ளைரோஜாக்கள்
வரிசையாய்அணிவகுத்தன!
பள்ளிபிள்ளைகள்!

9.அடித்ததும்
அழுதுபின்சிரித்தது
தேங்காய்!

10.சத்தமிட்டே
நல்லபெயர்வாங்குகிறது
பல்லி!

11.புகுந்தவீட்டுக்கு
செல்கின்றன
புதுநாற்றுக்கள்!

12.தண்ணீர்சிதறல்
சுவரில்எழுந்தது
நவீனஓவியம்!

13.வீட்டுக்குவீடுவிருந்தழைப்பு
திகைத்தகாக்கை
பண்டிகைநாள்!

14.தொட்டதும்
பிடித்துக்கொண்டது
மின்சாரம்

15.முகத்தைதிருப்பிக்கொண்டது
முழுநிலவு
அமாவாசை

16.வெடிச்சத்ததில்
தொலைந்துபோனது
பறவைகள்!


17.குளத்தில்
கோலம்போட்டது
மழைத்துளி!

18.கண்சிமிட்டிஅழைத்தது
வணிகவளாகம்
ஒளிரும்விளக்கு!

19.சுட்டுத்தள்ளி
சுவைத்தார்கள்
தீபாவளிபலகாரம்!


20.கவியும்இருட்டில்
காணாமல்போனது
ஊர்!

தமிழ் தோட்டம் என்னும் தளத்தில் நான் எழுதி பாராட்டுப்பெற்ற சில ஹைக்கூ கவிதைகள் இது. இங்கே சேமித்து வைத்துக்கொள்ள வசதியாக இடுகை இட்டுள்ளேன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

வாசனை!

$
0
0
வாசனை!


 காலைக்கதிரவன் சுறுசுறுப்பாய் முன்னேறி தன் செங்கதிர்களால் சுட்டெரித்துக் கொண்டிருந்த முற்பகல் வேளை. வாசலில் ”டிங்டிங்” என்று காலிங் பெல் ஒலித்தது. வியு பைண்டரின் வழியே பார்த்துவிட்டு “ இந்தாளுக்கு வேலையே இல்லை! மாசம் ரெண்டு தடவை எதையாவது தூக்கிட்டு வந்துடறான்” என்று முணு முணுத்தாள் லட்சுமி.
  “ என்ன லட்சுமி! யாரு! கதவைத் திறக்காம முணுமுணுத்துகிட்டு இருக்கே! திறக்க வேண்டியதுதானே!”
  “ திறக்கறேன்! திறக்கறேன்! நான் வேண்டாம்னு சொன்னா நீங்க கேக்கவா போறீங்க!  உங்க  தலையிலே மிளகாய் அரைக்கறதுக்குன்னே வந்து சேருதுங்க!” என்றபடி கதவைத்திறந்தாள் லட்சுமி.
  வெளியே அறுபதை கடந்த வயதில் ஒல்லியான தேகம், நரைத்த முடி! கண்களில் அந்தக் கால தடிமனான கண்ணாடி, தோளில் ஓரு ஜோல்னா பையோடு நின்றிருந்த அந்த முதியவர் கைகளை கூப்பி, ”வணக்கம் அம்மா!”என்றதும் “வணக்கம் வணக்கம்!”  உள்ளே வாங்க! என்றபடி விரைந்தாள் அவள்.
  ” வாங்க ஐயா! இப்படி உட்காருங்க! ” என்றேன் நான்.
இருக்கட்டும் தம்பி!  ஏதொ உங்களை மாதிரி ஒருத்தர் ரெண்டுபேர் வாடிக்கையா வாங்கிறதுனாலே என் பொழைப்பும் ஓடுது. என்றவர். பையில் இருந்து ஊதுபத்தி பாக்கெட் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். பத்து பாக்கெட்கள் அடங்கிய ஒரு பண்டல் அது. ஐயா, இந்த முறை ரெண்டா கொடுங்க! என்றபோது அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
     சொம்பில் தண்ணீர் எடுத்து வந்த லட்சுமி, நான் ரெண்டு பாக்கெட் வாங்குவதை பார்த்து,  எதுக்குங்க ரெண்டு பண்டல்? என்று கண்ணாலேயே கேட்டாள்.  நான் கை அமர்த்தினேன். நீரை குடித்துவிட்டு ரெண்டு பண்டல்களுக்கு இருநூறு ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ரொம்ப நன்றி தம்பி! இன்னிக்கு  நீங்க ரெண்டா வாங்கிட்டதாலே எனக்கு கொஞ்சம் அலைச்சல் கம்மி! வரேன் தம்பி! என்று விடைபெற்றார் அந்தப்பெரியவர்.
   அவர் சென்றது பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள் லட்சுமி! “ என்னங்க நம்ம வீட்டுல மட்டும் பணம் செடியிலாங்க காய்க்குது! இப்படி தண்டம் பண்றீங்க! அந்த பெரியவர் விற்கிற அந்த ஊதுவத்தில  வாசனையே வராது. அதை ஒரு பண்டல் வாங்கிறதே அதிகம். ரெண்டா வேற வாங்கறீங்க!  ஒரு பண்டல் வத்தியே நமக்கு அதிகம். வாசனை இல்லேன்னு நா வேற தனியா கடையிலே வாங்கறேன்.
   அது போதாதுன்னு இப்ப ரெண்டு பண்டல் வாங்கி இருக்கீங்களே! ஒரு ரெண்டு தடவை திருப்பி அனுப்புங்க! அப்புறம் வர மாட்டாங்க!” என்றாள்.
    ”இதோட நிறுத்திக்கறியா? ஒரு இருநூறு ரூபா செலவு பண்ணா நாம ஒண்ணும் ஏழையாகிட மாட்டோம்!”
   ஒரு இருநூறு ரூபா மட்டும் சும்மா வருதாங்க! ஒரு தடவை பரவாயில்லை! மாசா மாசம் அந்தாளுக்கிட்டே ஏன் வாங்கணும்? இது போதாதுன்னு நாம யூஸ் பண்ணவே மாட்டோம்! அந்த மாதிரி துணியிலே அவர் கொண்டுவர தலைகாணி உறை, கர்சீப், ஜட்டி, பணியன்  இதை வேற வாங்கி பீரோவிலே அடுக்கி வைக்கறீங்க! உங்களுக்கென்னங்க வந்தது?
   “ பைத்தியம் முத்திருச்சுன்னு நினைக்கிறீயா?”
“ அத நான் எப்படி சொல்றது? ஆனா நீங்க செய்யறத பார்த்தா அப்படித்தான் தோணுது!” வாசனையே வராத இந்த பத்தி பாக்கெட் வேணும்னா ஒரு பாக்கெட் வாங்கிட்டு அனுப்பிச்சரலாம் இல்லையா?  ரெண்டு பண்டல் வாங்கி அடுக்கறீங்களே!”
       “ லட்சுமி! அந்த பெரியவருக்கு வயசு என்ன இருக்கும்?”
  “ அறுபதுக்கு மேல இருக்கும்! அதுக்கு என்ன?”
 இத்தனை வயசுக்கு மேல அவரு எதுக்கு இப்படி வீடு வீடா போய் சம்பாதிக்கணும்.?
   அது அவர் தலையெழுத்து!
”இப்படி சொல்லிட்டு போயிடக் கூடாது! இதுவே அவர் உன் அப்பாவா இருந்தா விட்டுருவியா?”
    “என் அப்பாவுக்கு அந்த நிலைமை வராது!”
   “ஒரு வேளை வந்துருச்சுன்னா என்ன பண்ணுவே!”
 “அதெப்படிங்க வரும்! என்னோட அண்ணன் இருக்கான், தம்பி இருக்கான் பார்த்துக்க மாட்டானுங்களா?”
  இந்த பெரியவருக்கு கூட ரெண்டு பசங்க இருந்தும் இப்ப கைவிட்டுட்டானுங்க! அனாதை இல்லத்துல இருக்கார். அங்கதான் ஊதுவத்தி சுத்தறது, மெழுகுவத்தி தயாரிக்கிறது, தலையணை உறை இதெல்லாம் செய்ய கத்து தராங்க! அதை சிலர் செய்யறாங்க! செஞ்சதை சிலர் விற்பனை செய்யறாங்க! இந்தப் பெரியவர் அப்படி விற்பனை செய்ய வரார்.
    இதே வயசுல எத்தனையோ பேர் ரோட்டுல பிச்சை எடுத்துட்டு இருக்கிறதை பாத்து இருப்பே! இவர் அப்படி இல்லாம உழைச்சு சாப்பிடறார். அனாதை இல்லத்துல கூட இலவசமா தங்கக் கூடாதுன்னு இப்படி உழைச்சு வருகின்ற காசை கட்டி தங்கி இருக்கார். இவரோட ஊதுவத்திலே வாசனை வரலைன்னு சொல்றே ஒத்துக்கறேன்! ஆனா உழைப்போட வாசனையை அதுல நான் உணர்கிறேன். அதனாலதான் ரெகுலரா வாங்கிறேன்.
   நம்மளை மாதிரி சிலரும் ரெகுலரா வாங்கிறாங்க! இது அவங்க உழைப்புக்கு நாம தர்ற ஒரு சிறிய மரியாதை! இதனால அவங்களுக்கும் ஒரு சந்தோஷம். சினிமா, நொறுக்குத்தீனி, சைட் சீயீங்க்னு எவ்வளோவோ ஒரு மாசத்துக்கு செலவு பண்றோம். இப்படி ஒரு ஐநூறோ ஆயிரமோ செலவாகிறதுல தப்பு இருக்கிறதா எனக்குத் தோணலை! எனக்கு ஒரு மனத் திருப்தியும் கிடைக்குது.
   உனக்கு இந்த வத்தியோட வாசனை பிடிக்கலைன்னா ஏதாவது கோயிலுக்குக் கொடுத்திடலாம்! ஆனா இனிமேலும் அந்தபெரியவரை தப்பா பேசாதே என்றேன்.
     “ சாரிங்க! நானும் இனிமே என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அந்த பெரியவர்கிட்ட ஏதாவது பொருள் வாங்கிக்க சொல்றேன். என்றாள் லட்சுமி.
   நான் அர்த்தமாய் புன்னகைத்தேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 42

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 42


1.    உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பந்தல் நிறையக் கூட்டம் வரும்னு சொன்னே காலியா இருக்கேப்பா!
எல்லாரும் வயிறு நிறைக்க போயிருக்காங்க!  வந்ததும் பந்தல் நிறைஞ்சிரும் தலைவரே!

2.    கட்சியோட கொள்கைகளை ஏன் தலைவர் கல்வெட்டா அடிச்சு ஒட்டச் சொல்றாரு?
பின்னால யாரும் கட்சி கொள்கைகளை காத்துல பறக்க விட்டதா சொல்லக் கூடாதாம்ல!

3.   என்னடி இத்தனை நாளா உனக்கு டாப் அப் பண்ண பையனை காணோம்! புது ஆளா இருக்கு!
நெட் ஒர்க்கை மாத்திட்டேண்டி!

4.   கல்யாணம் பண்ணிக்கொடுத்த உங்க பொண்ணோட வாழ்க்கை இருண்டிருச்சுன்னு சொல்றீங்களே மாப்ள என்ன பண்றார்?
ஈ.பி யிலே வேலை செய்யறார்!

5.   சிக்கலை அவிழ்க்கிறேன்னு முன் வந்த மந்திரியார் மீது ராஜா கோவிச்சுக்கிட்டாராமே! ஏன்?
அது மகாராணியின் கூந்தலில் விழுந்த சிக்கலாம்!

6.   நீ எதுக்கு உன்மாமியாருக்கு வொய்ட் பெனாயிலை ஊத்திக் கொடுத்த?
வெளுத்ததெல்லாம் பால்னு நம்பிருவாங்கன்னு சொன்னாங்க! அதை டெஸ்ட் பண்ணத்தான்!


7.    டாக்டர் அந்த பேஷண்டுக்கு அடிக்கடி நினைவு திரும்பி திரும்பவும் மயக்கம் ஆயிடறார்!
நினைவு திரும்பறப்ப நம்ம ஆஸ்பிடல் பில்லை காட்டாதேன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது!


8.   மன்னர் எதற்கு ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைக்க வேண்டும் என்கிறார்?
நிறைய கமல் படங்களை டி.விடியில் பார்த்ததன் விளைவு! நகர்வலம் செல்வதற்கு அரண்மணை ஒப்பனை போதவில்லையாம்!

9.    ஏம்பா கொஸ்டின் பேப்பரை வாங்கிட்டு வேகமா வெளியே நடந்து போறே?
விடைகள் நும் சொந்த நடையில் இருக்க வேண்டும்னு போட்டிருக்கே!

10. மன்னர் ஏன் வாயில் காப்போனை முறைக்கின்றார்?
அரசகுல திலகமே என்று அழைப்பதற்கு பதில் வாய் தவறி அரசகுல கலகமே என்று அழைத்துவிட்டானாம்!

11.தலைவருக்கு வாய்மை மீது நிறைய பற்று இருக்கு!
   எப்படிச் சொல்றே?
தினமும் வாய் நிறைய லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு வரதை வைச்சுத்தான்!

12.பொண்ணோட ஜாதகத்துல செவ்வாய் ஏழில இருக்கான் அதனால இந்த வரனை தள்ளிப் போடுங்க!
பொண்ணோட வயித்துல புள்ளை மூணுல இருக்கானே ஜோஸ்யரே!

13.புலவரே! நீரே மெட்டமைத்து பாடினீரே! மன்னர் என்ன சொன்னார்?
  கட்டவிழ்ந்த குதிரையாக அல்லவா ஓடிவிட்டார்!

14.உன் பொண்டாட்டிக்கு இரக்க குணம் அதிகம்னு எதைவச்சு சொல்றே?
சண்டையில அடிபட்டுறப்போவுதுன்னு ப்ளாஸ்டிக் சாமானா பாத்து அடிக்கிறாளே அதைவைச்சுதான்!


15.இந்த வீட்டை நிறைய கடன் வாங்கி கட்டியிருக்கென்னு எப்படிசொல்றே?
இந்த வீட்டை கட்டறதுல நிறைய ‘இண்ட்ரெஸ்ட்” எடுத்துக்கிட்டு செய்தேன்னு சொல்றதை வச்சுதான்!

16. என் மனைவி அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டா!
  அவ்வளோ சாந்தமா?
பார்வை பார்த்தாள்னா போதும்  சப்தநாடியும் அடங்கிரும்!


17.தலைவர் ட்ரெயின்ல போறப்ப ஒருத்தனை அடிச்சுட்டாராமே!
பின்னே! இங்கேயும் சீட் கிடைக்கலையா தலைவரேன்னு நக்கலா கேட்டானாம்!

18.எந்த ஒரு ஆவணமும் இல்லாம போலிஸ் கிட்ட சிக்காம எப்படி பைக் ஓட்டிட்டு வந்தே!
ஹெல்மெட் போட்டுட்டு வந்தேன் விட்டுட்டாங்க!

19.நிறைய கனவுகளோடு அவர் சினிமாத் துறைக்கு வந்தார்!
இப்போ?
நிறைய கடன்களோட தூக்கம் இல்லாம தவிக்கிறார்!

20. அந்த டாக்டர் கிட்டே போய் வந்தவுங்களுக்கு வீட்டுல  ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும்.
   எப்படி?
போட்டோவுல படத்தை மாட்டி தெய்வமா ஆக்கிருவான்னு சொல்ல வந்தேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!

$
0
0
அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!


ஆடிமாதப் பிறப்பு தட்சிணாயின புண்ணிய காலம் என்று போற்றப்படுகின்றது. சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் இந்தக் காலம் தேவர்களின் இரவுப் பொழுது என்று சொல்லப்படுகின்றது. ஆடி மாதம் துவங்கினாலே அம்மன் கோயில்கள் களைகட்டும். அம்மன்களுக்கு விஷேச பூஜைகள், திருவிழாக்கள் எல்லாம் அமர்க்களப்படும்.

   விவசாயத்திற்கும் ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் உண்டு. ஆடிமாதத்தில் வாழை வைத்தால் நன்றாக விளையும் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த மாதத்தில் சூரியனும் தன்னுடைய கடும் வெப்பம் தணிந்து அவ்வப்போது தூறல் மழை பொழிய ஆரம்பிப்பார்.

    கடும் வெப்பம், அதற்கு பின் மழை என்பதால் உடல் சீதோஷ்ணம் பாதிக்கும். அதனால் நோய்களும் தாக்கும். இதனாலேயே ஆடிமாதங்களில் வீடுகளில் வேப்பிலைத் தோரணங்கள் அம்மன் வழிபாடு,கூழ்வார்த்தல் போன்றவை நம் மக்கள் அக்காலத்திலேயே தோற்றுவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். தெய்வ வழிபாடும் ஆயிற்று. உடல்நலமும் சீராகிறது என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறித்து இருக்கிறார்கள்.

  ஆடிமாதப்பிறப்பன்று தட்சிணாயின புண்ணிய காலம் என்பதால் நதிக்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும். இம்மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினம் முன்னோர்களுக்கு மிகவும் உகந்த தினமாகும். பொதுவாக அமாவாசை தினம் நிறைந்த அமாவாசை என்று சுபகாரியங்கள் செய்கின்றார்கள். அமாவாசை தினம் முன்னோர்கள் வழிபாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்ட நாளாகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதற்கு மட்டுமே உகந்தது. அமாவாசை தினம் அம்மன் கோயில்களில் வழிபாடு நடக்கும்.அமாவாசை தவிர்த்து பிரதமை தினம் அம்பாளுக்கு உகந்த திதியாகும்.

 ஆடிவெள்ளியில்அம்மனைதரிசிப்பதுசிறப்புக்குரியது. சகலபாக்யங்களையும்அள்ளித்தரவல்லது. விரதம்இருந்துஎண்ணெய்தேய்த்துகுளித்துஅம்மனைவழிபட்டால், பெண்களின்மாங்கல்யபலம்கூடும். கன்னிப்பெண்களுக்குசிறந்தவரன்அமையும்.

• ஆடி மாத சுக்ல தசமியில் திக்வேதா விரதம் கடைப்பிடித்து, திக்தேவதை களை அந்தத் திசைகளில் வழிபட்டால் நினைத்தது தடையின்றி நடைபெறும். 

• ஆடி மாத வளர்பிறை துவாதசி நாளில் விரதத்தை தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசி பூஜை செய்து வந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடுவதுடன் வளமான வாழ்வு கிட்டும். 


• ஆடி மாத சுக்ல துவாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும். 


• ஆடி மாதம் வெள்ளிக்கிழமை விரமிருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். 


• ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் விரமிருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். 


• ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். 
பொதுவாகவே ஆடிமாதம் அம்மனை வழிபட சிறந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி,ஆடி செவ்வாய், ஆடிப்பதினெட்டாம் பெருக்கு, ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடிமுளைக்கொட்டுவிழா. ஆடி அமாவாசை, ஆடி ஞாயிறு ஆகியவை அம்மனுக்கு உகந்த நாளாக உகந்த பண்டிகை தினங்களாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர முருகருக்கு உகந்த கிருத்திகை நாளும் ஆடி மாதத்தில் விஷேசமாகும்
.

ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் ஔவையார் நோன்பு கடைபிடிக்க படுகின்றது. இந்த நோன்பில் ஆண்கள் கலந்து கொள்ள முடியாது. அரிசிமாவு வெல்லம் கலந்த கொழுக்கட்டை செய்து கன்னிப்பெண்கள் வழிபடுவர். இந்த நோன்பு கடைபிடிப்பதால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை உண்டு.
அம்மனுக்கு உகந்த இந்த ஆடிமாதத்தில் காலையில் நீராடி அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவோம்! அம்மன் அருளினை பெற்றிடுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை  பின்னூட்டம் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


நிழலை விற்றவன்! பாப்பாமலர்!

$
0
0
நிழலை விற்றவன்! பாப்பாமலர்!


முன்னொரு காலத்திலே அச்சமாபுரம் என்ற ஊர்ல அசோகன் என்ற பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவன் அந்த ஊரிலேயே பெரிய மாளிகை கட்டி அதில் வசித்து வந்தான். மாளிகையைச் சுற்றி நிறைய  செடிகொடிகள் நட்டு வைச்சிருந்தான். அதோட மாளிகையோட வாசல்புறம் ஒரு பெரிய வேப்பமரம் நட்டு வைச்சிருந்தான். அது பரந்து விரிந்து வளர்ந்திருந்தது.

    அசோகன் பணக்காரனா இருந்தாலும் ஒருத்தருக்கும் ஒரு நயா பைசா கூட தரமாட்டான். அவன் வீட்டுப் பக்கம் யாரும் தேவையில்லாம நடமாட முடியாது. உள்ளே நுழையனும்னா அனுமதி வாங்கித்தான் நுழையனும் அவ்ளோ கெடுபிடி. வருமானத்தை தினமும் பெருக்கணும். எந்தெந்த வழிகளில் பணம் சம்பாதிக்க முடியுமோ அந்தந்த வழிகளில் சம்பாதிக்கணும்னு நினைக்கிறவன் அசோகன். அதனால ஒருத்தரால பிரயோசனம் இருந்தாத்தான் வீட்டுக்கே கூப்பிடுவான். அப்படிப்பட்ட ஆளு அசோகன்.

   அந்த ஊருக்கு புதுசா அன்புன்னு ஒரு ஆள் வந்தான். அவன் குதிரையில் வந்தமையால் அந்த குதிரையை வேப்பமரத்தடியில் கட்டிவிட்டு மரத்தினடியில் படுத்து இளைப்பாறிக்கொண்டிருந்தான். தன்னோட உப்பரிகையில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த அசோகனுக்கு கோவமா வந்துது.
வேக வேகமா கீழே இறங்கி வந்து, அன்பை பார்த்து, “ அடேய்! எழுந்திரு! இது என்னுடைய மரம்! இங்கிருந்து அப்பால போ!” என்று விரட்டினான்.
  
   அன்புவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. ”நான் எதற்கு இங்கிருந்து போகவேண்டும்? சிறிது நேரம் மரத்தடியில் ஓய்வாக இருந்து விட்டு போகலாம் என்று வந்தேன்.” என்றான்.

   இதைக்கேட்டதும் அசோகனுக்கு கோவம் அதிகமாயிருச்சு. “இங்கிருந்து போகிறாயா இல்லையா? இது என் மரம். சின்ன செடியாக வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து இவ்வளவு பெரிய மரமாக ஆக்கியுள்ளேன். மரம் எனக்கு சொந்தம்.” என்றான்.
 
  “ ஐயா! மரம் உங்களுடையதாகவே இருக்கட்டும்! அதை நான் ஒன்றும் வெட்டிவிட வில்லையே! இதன் கனிகள் கூட கசக்கும். அதனால் தின்ன முடியாது. இலைகளையும் பறிக்க மாட்டேன். சற்று நேரம் நிழலில் இளைப்பாறிவிட்டு செல்கிறேனே!” என்றான் அன்பு.

    “அடேய்! நான் சொல்வது உனக்கு புரியவில்லையா? மரம் எனக்குச் சொந்தம் என்றால் அதன் கிளை, இலை, நிழல் எல்லாமே எனக்குச் சொந்தம். எனக்கு சொந்தமான நிழலில் நீ எப்படி இளைப்பாறலாம்? மரியாதையாக இடத்தை காலி செய்!”

      ”ஆக, இந்த நிழல் உங்களுக்கு சொந்தம் அப்படித்தானே!”

    “அதைத்தான் ஐயா இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்! இன்னும் அகராதி வேறு வைத்து விளக்க வேண்டுமா?”
  “ சரி சரி! கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்கள் நிழலில் இளைப்பாறுவது தவறுதான். ஆனால்.. !”
   “ என்னய்யா ஆனா ஆவன்னான்னு?”
   ‘ஓன்றுமில்லை! இந்த நிழலை எனக்கு விற்று விடுங்களேன்! நான் இங்கு படுத்து இளைப்பாற விரும்புகிறேன்! நிழலை மட்டும் தான் கேட்கிறேன்! மரத்தை அல்ல! உங்களுக்கும் பணம் கிடைக்கும். எனக்கும் நிழலில் இளைப்பாறிய சுகம் கிடைக்கும்!”

  பணம் கிடைக்கிறது என்று சொன்னவுடன் அசோகனுக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. “ சரி நீ இவ்வளவு தூரம் கேட்கிறாயே என்பதால் நிழலை உனக்கு தந்துவிடுகின்றேன்! எவ்வளவு தருவாய்?”
  “ உங்கள் பொருள் நீங்களே விலை சொல்லுங்கள்!”

   “சரி நூறு வராகன் கொடுத்து இந்த நிழலைப் பெற்றுக் கொள்!”

  அன்பு ஊரார் முன்னிலையில் நூறு வராகன் கொடுத்து நிழலைக் கிரயம் பெற்றுக் கொண்டான். அதற்கான பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டான்.  ஆகா எவ்வளவு ஏமாளி! நிழலுக்கு நூறு வராகன் கொடுத்துள்ளான் நாம் அதிர்ஷ்ட சாலி என்று நினைத்தான் அசோகன்.
    அது எவ்வளவு தவறு என்பது அடுத்த நாளே அவனுக்குப் புரிந்தது. அன்பு தினமும் மரத்தில் நிழலில் வந்து அமர்ந்தான். சில நாள் சென்றது. நிழல் அசோகனின் வீட்டு முற்றத்தில் விழுந்தது. உடனே அங்கு சென்று அமர ஆரம்பித்தான் அன்பு.
சிலநாள் மாடியில் விழுந்தது. அங்கு சென்றான். இப்படியே நிழல் எங்கெல்லாம் விழுகின்றதோ அங்கெல்லாம் சென்று அமர்ந்து கொண்டான் அன்பு.
   ஏனப்பா இப்படி என் வீட்டுக்குள் எல்லாம் வந்து தொந்தரவு செய்கின்றாய்? என்று கேட்டபோது நிழலை விற்று விட்டீர்கள் அது எங்கு விழுகின்றதோ அங்கு வந்து இளைப்பாறுகிறேன்! அதை நீங்கள் தடுக்க முடியாது என்று வாதம் செய்தான் அன்பு.

   இன்னும் சில நாள் சென்றதும், தன் வீட்டில் உள்ள ஆடு மாடு குதிரைகளை ஓட்டிச் சென்று வேப்ப மர நிழல் எங்கெல்லாம் விழுகின்றதோ அங்கெல்லாம் கட்டினான் அன்பு. அசோகனின் வீடு முழுவதும் மாட்டு சாணத்தால் நிறைந்து போனது.
   “ ஏய்! நீ என்ன செய்கின்றாய்? ஆடு மாடுகளை ஏன் கொண்டு வந்து வீட்டில் அடைக்கிறாய்?”
  “ ஐயா! நான் வீட்டில் அடைக்கவில்லை! நிழல் எங்கு விழுகின்றதோ அங்குதான் அடைக்கின்றேன். ஏனென்றால் நான் அந்த நிழலை நூறு வராகனுக்கு கிரயம் பெற்று இருக்கிறேன். என்றான் அன்பு. அசோகனால் பதில் பேச முடியவில்லை.


  ஒருநாள் அசோகன் ஊர் முக்கியஸ்தர்களுக்கு விருந்தளிக்க விருந்தினர் அறையினுள் அந்த வேப்ப மரத்தின் நிழல் விழுந்தது. அங்கே வந்து அமர்ந்து கொண்டான் அன்பு.
  “ யாரப்பா நீ! அசோகன் எங்களுக்கு விருந்து அளிக்கிறார்! இடையில் நீ யார்?” வந்திருந்த விருந்தினர்கள் கேட்க,
 “ஐயா! இந்த நிழலை நூறு வராகனுக்கு எனக்கு விற்றுவிட்டார் அசோகன். அந்த நிழல் எனக்குச் சொந்தம் அது எங்கு விழுகின்றதோ அங்கு நான் சென்று இளைப்பாறுவேன்! என்னை தடுக்காதீர்கள்! என்றான் அன்பு.
  அந்த சமயம் நிழல் விருந்தினர் மீது பட்டது. ஓடி வந்து விருந்தினர் மேல் ஏறி நின்றான் அன்பு.  “ ஏய்! என்ன செய்கின்றாய்?” ”அய்யா நான் வாங்கிய நிழல் உங்கள் மீது விழுந்துள்ளது. அதில் அமர்ந்து இளைப்பாறுகிறேன்!” என்றான் அன்பு.

   விருந்தினர்கள் அசோகனிடத்து கோபம் கொண்டு சென்று விட்டார்கள். அசோகனுக்குப் பெருத்த அவமானம் ஆகிவிட்டது. அன்று ஓர் பெரிய சம்மட்டியோடு வந்தான் அன்பு. வந்தவன் நேராக மாடிப்படிகளில் ஏறி மாடியை உடைக்க ஆரம்பித்தான்.

  “ ஏய்! என்ன செய்கிறாய்? ஏன் வீட்டை உடைக்கிறாய்?
  “ அய்யா! நான் உங்கள் வீட்டை உடைக்க வில்லை! நான் வாங்கிய நிழலை இங்கிருந்து பெயர்த்து எடுத்துச் செல்ல போகிறேன்! தயவு செய்து என்னை தடுக்காதீர்கள்!”

 அசோகனுக்கு தான் பெரிய தவறு செய்துவிட்டது புரிந்துவிட்டது. இனியும் தாமதித்தால் தன்னுடைய வீட்டை மட்டுமல்ல நிம்மதியும் இழந்துவிட வேண்டியதுதான் என்று தோன்ற, அய்யா! தயவு செய்து நான் சொல்வதைக் கேள்! நான் செய்தது தவறுதான்! நிழல் எல்லோருக்கும் பொதுவானது! அதை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடியது தவறுதான்! அதோடு அதை விற்று மாபெரும் தவறு செய்துவிட்டேன்! நீ கொடுத்த நூறு வராகனுடன்  இன்னும் ஐம்பது வராகன்  சேர்த்து தந்து விடுகின்றேன். நிழலை திருப்பிவிடு! அந்த பத்திரத்தை ஊரார் முன்னிலையில் கிழித்தெறிந்துவிடலாம். 
  இனி இப்படி  பணத்திற்காக அலைய மாட்டேன்! என்னை மன்னித்துவிடு என்றான் அசோகன்.
   அன்பு புன்னகைத்தான். நண்பா! உன்னை திருத்த வேண்டும் என்றே இவ்வாறு செய்தேன். எனக்கு கூடுதல் பணமெல்லாம் வேண்டாம். நான் கொடுத்த பணத்தை திருப்பினால் போதும். பத்திரத்தை கிழித்து போட்டுவிடுகின்றேன். இனியாவது தன்னலமாக வாழாமல் கொஞ்சம் பொது நலனுடன் வாழப் பழகிக்கொள். அது போதும் என்றான்.
 
  நன்றி நண்பா! இனி நான் திருந்திவிட்டேன்! இந்த மரம் மட்டுமல்ல! என் வீட்டுத் தோட்டத்தையே அனைவருக்கும் திறந்து விடுகின்றேன். எல்லோரும் கூடி மகிழ்ந்து விளையாடட்டும்!  என்றான் அசோகன்.

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



தித்திக்கும் தமிழ்! பகுதி 15 மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்!

$
0
0
தித்திக்கும் தமிழ்! பகுதி 15  மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்!

இன்று அவசர யுகம்! பொருளீட்ட கடல் கடந்து பறக்கிறார்கள். விமானங்கள், நவீன சொகுசு கப்பல்கள், பேருந்துகள், தொடர்வண்டிகள் என எத்தனையோ போக்குவரத்துச்சாதனங்கள் மலிந்துவிட்டன. அதே போல தொலைதொடர்பு சாதனங்களும் மிகுந்துவிட்டன. எங்கிருந்தாலும் அலைபேசி மூலம் தொலைக்காட்சி உரையாடல் செய்ய முடிகின்றது. தொழில்நுட்பம் பெருகிய இக்காலத்தில் பிரிவு என்பது ஒரு பெரிய வலியாக இருக்க முடியாது. அருகில் இல்லை என்ற வருத்தம் இருக்கும். நினைவுகள் அழுத்தும் ஆனால் உடனே அலைபேசியில் பேசி நம் மனதிற்கு பிரியமானவரிடம் உரையாடி ஆறுதல் காண முடியும்.

சங்க காலத்தில் அவ்வாறு கிடையாது. தலைவன் தலைவியை பிரிந்து சென்றால் திரும்பி வரும் காலம் வரை எந்த ஒரு செய்தி பரிமாற்றமும் கிடையாது. அப்படியே இருந்தால் தூதஞ்சல் மட்டுமே! தலைவி இப்படி தலைவன் வருகை இன்மையால் வாடியிருக்க அவளுக்கு நல்ல அறிகுறிகள் காட்டி தலைவன் விரைவில் திரும்பிவந்துவிடுவான் என்று நம்பிக்கை ஊட்டுவாள் தோழி. இத்தகைய காட்சிகளை அகநானூற்றில் அழகாக காட்சி படுத்தியுள்ளனர் பழந்தமிழ் புலவர்கள்.
இந்த தலைவனின் அன்பைப் பாருங்கள்! இப்படியொரு காதலனை கணவனாகக் கொண்ட அந்த தலைவி புண்ணியம் செய்தவள் அல்லவா? இதோ பாடல்! குறுங்குடி மருதனார் எத்தனை அழகாக இந்த பாடலை இயற்றியுள்ளார் பாருங்கள்!

  ''முல்லைவைந்நுனைதோன்றஇல்லமொடு
பைங்காற்கொன்றைமென்பிணிஅவிழ
இரும்புதிரித்தன்னமாயிருமருப்பிற்
பரலவல்அடையஇரலைதெறிப்ப
மலர்ந்தஞாலம்புலம்புபுறக்கொடுப்பக்
கருவிவானம்கதழுறைசிதறிக்
கார்செய்தன்றேகவின்பெறுகானம்
குரங்குளைப்பொலிந்தகொய்சுவற்புரவி
நரம்பார்த்தன்னவாங்குவள்பரியப்
பூத்தபொங்கர்த்துணையொடுவதிந்த
தாதுண்பறவைபேதுறல்அஞ்சி
மணிநாஆர்த்தமாண்வினைத்தேரன்
உவக்காண்தோன்றும்குறும்பொறைநாடன்
கறங்கிசைவிழவின்உறந்தைக்குணாது
நெடும்பெருங்குன்றத்தமன்றகாந்தட்
போதவிழ்அலரின்நாறும்
ஆய்தொடிஅரிவைநின்மாணலம்படர்ந்தே."


பணியின் நிமித்தமாக வெளியூர் கிளம்புகின்றான் தலைவன். கிளம்புகையில் தலைவி சோகமாகின்றாள். உங்களை பிரிந்து எப்படி இருப்பேன் என அவள் கேட்கையில் கார்காலத்தின் தொடக்கத்தில் உன்னிடத்தே இருப்பேன்! அதுவரை பொறுத்திரு! என்று சொல்லிச் செல்கின்றான்.

தலைவியோ தலைவன் திரும்பவில்லையே என்று தனது மெல்லிய உடல் மேலும் மெலிய பிரிவாற்றாமையினால் வருந்தினாள். அப்போது தோழி தலைவியைத் தேற்றுகின்றாள்.

இதோ கார்காலம் தோன்றிவிட்டது! நம் தலைவர் இப்பொழுதுவந்துவிடுவார் என்று அவள் தலைவன் வருகையை இவ்வாறு கண் முன்னே நிறுத்துகின்றாள். ஆராய்ந்து எடுக்கப்பட்ட வளையல்களை அணிந்த தலைவியே!

முல்லைக்கொடிகள் நிறைந்திருக்கும் வனத்தில் கொடிகளில் கூர்மையான வாசம் மிகுந்த மொட்டுக்கள் தோன்றுகின்றன. தோன்றா மரம் அரும்புகளுடன் விரிய கொன்றைமரத்தின் இலைகள் பசுமை பூக்க அதன் மொட்டுக்கள் மெல்லிய இதழ்களை விரிக்கின்றன.

இத்தகைய வனத்திலே இரும்பை முறுக்கிவிட்டது போன்ற இருபுறமும் நீள கரிய பெரிய கொம்புள்ள ஆண் மான்கள் பரல் கற்கள் நிறைந்த பள்ளங்களில் தேங்கியுள்ள நீரை அருந்தி மகிழ்ச்சியினால் துள்ளிக் குதிக்கின்றன.

இத்தனை நாட்கள் கோடையில் நீர் இன்றி தவித்த உலகம் தன் வருத்தம் நீக்க மேகக்கூட்டம் மின்னலுடன் தோன்றி தன்னுடைய நீரை சொறிந்தமையால் அழகிய கார்காலம் உதித்தது. முல்லை நிலமான இந்த கானகம் அழகாக விளங்குகின்றது. இந்த காலத்தே திரும்பி வருவேன் என்று நம் தலைவர் உரைத்த கார்காலம் துவங்கிவிட்டது.

வளைந்த தலையாட்டத்தினால் கொய்த  பிடரி மயிரினை உடைய குதிரைகளின் கடிவாளமானது நெகிழ குதிரைகள் விரைவாக ஓடுகின்றது. பூ பூத்த சோலையின் நடுவே தலைவனின் இந்த ரதமானது தலைவியின் பிரிவுத்துயரை போக்க விரைந்து கொண்டிருக்கின்றது. அப்போது கொன்றை மலர்களில் யாழின் நரம்புகள் ஒலித்தாற்போல ஓர் இனிமையான இசையை ஒலித்துக்கொண்டு வண்டுகள் தம் துணையுடன் தேனருந்திக் கொண்டு இருக்கின்றன.

இந்த காட்சியைக் கண்டதும் தலைவனுக்குள்ளே காதல் உணர்வு மேலிட தம் இரதத்தில் உள்ள மணியோசைகள் அந்த வண்டுகளின் காதலைப் பிரித்துவிடுமே என்று வருந்துகின்றான். உடனே தலைவன்  குதிரையின் கழுத்தில் உள்ள மணியின் நாவை இழுத்துக் கட்டுகின்றான். தம்மைப் போல வண்டுகள் பிரிவுத்துயர் அடைய வேண்டாம் என்ற அன்பில் அவன் இதனைச் செய்து முடித்தான்.

இத்தகைய அருள் சுரக்கும் குணமுடைய தலைவன், சிறிய மலைகளை உடைய நாடன், ஆரவாரிக்கும் ஓசையுடைய விழாவினை எடுக்கும் உறையூர்க்கு கிழக்கில் உள்ள நீண்ட பெரிய மலையில் பூத்த காந்தள் மலரைப் போன்ற உன் சிறந்த அழகினை எண்ணி உன் நினைவாக உன் பெண்மை நலம் பேணி தன் வினை முடித்து விரைந்து வருகின்றான் என்கின்றாள் தோழி.

எத்தனை அழகான உவமைகள்! எத்தனை எத்தனைச் செய்திகள் இதில்! உறந்தை என்று விளிக்கப்படுவது உறையூர். குன்றம் என்று குறிக்கப்படுவது சிராப்பள்ளி மலை குணாது என்றால் கிழக்கில் உறையூருக்கு கிழக்கே சிராப்பள்ளி மலையில் பூக்கும் காந்தள் மலரின் நறுமணத்தோடு தலைவியின் பேரின்பம் ஒப்பிடப்படுகின்றது.


இந்தப்பாடலை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில் எனது தமிழாசிரியர் திரு முருகேசன் அவர்கள் விளக்கியது அத்துணை சிறப்பாக இருந்தது. அவர் விளக்கம் இன்று நினைவில் இல்லாத போதும் தலைவன் வண்டுகள் பிரியுமே என்று மணிநாவை கட்டிய காட்சியை விவரித்தமை இன்னும் நினைவில் நிற்கின்றது.  இதை அப்படியே ஓர் சிறுகதையாக எழுதலாம் என்றும் ஓர் ஆசை உள்ளது. அப்படி பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். இந்தப் பகுதி அப்படி இல்லாமல் பாடல் விளக்கமாக எழுதுவதால் இப்படி பதிவிட்டேன்.

இந்தப்பாடலை எனக்கு எளிதாகத் தேடிக் கொடுத்த ஊமைக்கனவுகள் ஆசான் திரு விஜி அவர்களுக்கும் தேடலை நினைவுகூற வைத்த பாலமகி பக்கங்கள் பேராசிரியை மகேஸ்வரிபாலசந்திரன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு அழகிய பாடல் விளக்கத்துடன் சந்திப்போம்! நன்றி!



தளிர் சென்ரியூ கவிதைகள்!

$
0
0



தலைசீவியதும்
தண்ணீர்தந்தது
இளநீர்!

இழவுவீடு
எல்லோராலும்ரசிக்கபட்டது
தொலைக்காட்சி


  பள்ளத்தில் இருந்து 
   உச்சிக்குவந்தது நீர்!
  குடிநீர் தொட்டிகள்!

 குடி கொண்டமையால்
 குடி கெட்டது
 டாஸ்மாக்!


 கட்டாயத் தலைக்கவசம்
 காப்பாற்றியது
 தலைக்கவச விற்பனை!

 நிறைந்த உணவகம்
 நிரம்பவில்லை
 பசி!

ஒளியில் ஆடியும்
இருள் கவ்வியது!
கிரிக்கெட் சூதாட்டம்!


கடும் வெயில்
குளிரூட்டியது
குளிர்சாதனம்!

மருந்தே உணவு!
செழித்தது
மருத்துவம்!

தேனீர் கலந்ததும்
மறைந்தது பால்!
பள்ளிகளில் ஆங்கிலம்!

பருவம் தவறியது
உருவிழந்தது விவசாயம்!
மழை!

வெளிச்சம் கிடைத்ததும்
மறைந்து கொள்கிறார்கள்
நடிகர்கள்!

தொழிற்சாலைகளின்
பெருமூச்சில்கறுத்தது
காற்று!


விளக்கேற்றியும்
விடியவில்லை
அறியாமை!

சமாதானம்காட்டியும்
சுடப்பட்டது 
வெள்ளைப்புறா!



நாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்!

$
0
0
நாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்!

  எனது எண்ணங்கள் தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் அவர்கள் வீட்டு நாய்க்குட்டி ஜாக்கி இறந்தது குறித்தும் அதன் நினைவாக தெரு நாய்களுக்கு உணவிட்டு வருவதாக ஓர் பதிவு இட்டிருந்தார். இணைப்பு:  தெரு நாய்களும் நானும்அதையொட்டி எனக்கும் எங்கள் வீட்டு நாய்க்குட்டிகள் நினைவு வந்துவிட்டது.

    நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் தான் நாய்க்குட்டி வளர்ப்பு துவங்கியது. அதற்கு முன்பே சில பூனைக்குட்டிகள் வீட்டில் வளர்ந்துவந்தன. அதைப்பற்றி பசுமை நிறைந்த நினைவுகள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயம், ஓர் மழை நாளில் வெள்ளை நாய் ஒன்று எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டது. பெண் நாய். எங்கிருந்தோ தப்பி வந்துவிட்டது.  எங்கள் வீட்டில் மீதமான உணவைப் போட அது தங்கி விட்டது. அந்த பெண் நாய் முடி எல்லாம் புசுபுசுவென அழகாகவே இருக்கும்.

     சுமார் ஒருவருட காலம் இருந்த அது இரண்டு தடவை குட்டிகள் போட்டது. அந்த குட்டிகளும் அதுவும் என எங்கள் வீட்டருகே யாரும் அண்டவிடாது. அத்தனை அட்டகாசம் செய்யும். இப்படி இருந்த அது திடீரென ஒருநாள் இறந்து போனது. எப்படி என்றே தெரியவில்லை! வீட்டருகே புதரில் இறந்து கிடந்தது. எடுத்து அடக்கம் செய்துவிட்டோம். அதனுடைய குட்டிகள் இரண்டு இருந்தது. அதற்கு பெயரெல்லாம் நாங்கள் வைக்கவில்லை! ஒன்று வெள்ளை நிறம் இன்னொன்று செம்மண் கலர். அவை நீண்டநாட்கள் எங்கள் வீட்டில் வசித்தன.

   மிகுந்த உணவை போடுவோம்! பெரிதாக பராமரிப்பு எல்லாம் கிடையாது. அவைகளும் காலப்போக்கில் இறந்து போக ஒரு பெண் நாய் மீண்டும் வந்தது. அது வரும் போதே உடலெல்லாம் புண்களோடு இன்றோ நாளையோ என்ற நிலையில் வந்தது. என் தங்கைக்கு இரக்க குணம் அதிகம். அதற்கு மருந்திட்டு உணவு வைக்க அது நிரந்தரமாக தங்கிவிட்டது. மருந்து தொடர்ந்து போட்டதால் புண்களும் குணமாகி ஆரோக்கியமாக மாறிவிட்டது. அது தன் வேலையை காட்டத்துவங்கியது.

  அப்புறம் என்ன? அது பாட்டுக்கு வருஷத்துக்கு மூன்று தடவைகள் குட்டிப் போட்டு இனப்பெருக்கம் செய்து கொண்டிருந்தது. ஒன்று மூன்று நான்கு என குட்டிகள் போட்டாலும் ஆறு மாதம் ஒருவருடம் வரைதான் அதன் குட்டிகள் வாழ்ந்தன. எப்படியோ இறந்து போகும். அது மட்டும் நன்றாக இருக்கும் மறுபடியும் குட்டிகள் போடும்.

   என் அப்பாவிற்கு இந்த நாயைக் கண்டாலே கோபம் வரும்! எங்கிருந்தோ வந்து இங்கு தங்கிவிட்டதே! என்று துரத்தி துரத்தி அடிப்பார்! ஆனால் அது திரும்பவும் வந்துவிடும். கடைசியாக அது மூன்று குட்டிகள் போட்டது. அதில் ஆண் நாய் இரண்டு பெண் ஒன்று. அதில் ஓர் ஆண் நாய் மட்டும் தாயைப்போலவே இருந்தது. ரொம்பவும் சுறுசுறுப்பு! யாரையும் அண்டவிடாது. துரத்தி துரத்தி அடிக்கும். இந்த தாயும் குட்டியும் சேர்ந்துவிட்டால் அப்புறம் எதுவுமே வரமுடியாது அவ்வளவு ஆக்ரோஷம்.

    பன்றி மேய்ப்பவர்கள் எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கழனியில் பன்றிகளுடன் வந்த போது இந்த நாய் அவர்களை துரத்தி அடித்து உள்ளது. அவர்கள் ஒரு மண்ணாங்கட்டியை எடுத்து இதன் வயிற்றில் வீசி விட்டார்கள் பயங்கரமாக அழுதபடி வந்து எங்கள் வீட்டில் படுத்துக் கொண்டது. உணவே எடுக்கவில்லை! அப்பாவுக்கு கூட கொஞ்சம் வருத்தமாக போய்விட்டது. பன்றி மேய்ப்பர்கள் மந்திரம் மூலம் நாயின் வாயைக் கட்டிவிடுவார்களாம்! இரை எடுக்காமல் இறந்து போய்விடுமாம். எங்கள் அப்பாவிற்கும் இந்த விஷயமும் மாற்று மந்திரமும் தெரியும் என்பதனால் மாற்று மந்திரம் செய்தார். மறுநாள் முதல் உணவு எடுக்கத் துவங்கியது. ஆனால் பழையபடி ஆக்ரோஷம் கிடையாது.

   இந்த ஆண் நாய் ஒரு பெண் கருப்பு நாயை ஒரு சமயம் அழைத்துவந்துவிட்டது. இரண்டும் தங்கிவிட்டது. இவைகள் இரண்டும் சேர்ந்து குட்டிகள் போட மீண்டும் நாய்கள் பெருகிவிட்டது. ஊரில் எல்லோரும் உங்கள் வீட்டு நாய்க்குட்டி கோழியை கவ்வி வந்துவிட்டது. ஆட்டை கடித்துவிட்டது என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.  இதன் நடுவில் ஊரில் நாய்த்தொல்லை அதிகம் ஆகிவிட்டது என்று பஞ்சாயத்தில் நாய்களை சுட்டுத் தள்ள குறவன் ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஊர் முழுக்க நாய்கள் நிறைய சுட்டு தள்ளினார்கள். பரிதாபமாக இருந்தது. எங்க வீட்டு நாய் தப்பித்ததா?  அதை அப்புறமா சொல்றேன்!


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

நாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்! பாகம் 2

$
0
0
நாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்! பாகம் 2


   எங்கிருந்தோ வந்து சேர்ந்த நாய்க்குட்டி ஒன்று எங்கள் வீட்டில் தங்கி இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்ததை சொன்னேன். அப்போது ஊரில் நாய்கள் தொல்லை என்று குறவர்களை கூப்பிட்டு சுட்டுத் தள்ள பஞ்சாயத்தில் முடிவு செய்து சுட்டும் தள்ள ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் வீட்டில் இருந்த பெண் நாய் மற்றும் ஆண் நாய் அதன் குட்டிகள் என மொத்தம் நான்கு இருந்தது.  இதையெல்லாம் எப்படி பாதுகாப்பது என்று எங்களுக்கு யோசனை.

   என் தங்கை அழுதே விட்டார். இந்த நாய்களை சுட்டுவிடுவார்களோ? என்று அவர் கண்ணீர் வடித்தது அப்பாவிற்கும் ஏதோ செய்திருக்க வேண்டும். இதற்கிடையில் குட்டிநாய் வழக்கம் போல வெளியே சுற்றுலா சென்றுவிட்டது.

   எங்கள் ஊரில் துணிவெளுக்கும் பெண்மணி ஒருவர் நாய் ஒன்று வளர்த்தார். அந்த நாய் நன்கு பெரிதாக வளர்ந்து இருக்கும். ஆக்ரோஷமான நாய். யாரையும் அவர் வீட்டுப்பக்கம் அண்டவிடாது. கடித்து குதறிவிடும். அந்த நாயிடம் கடிபட்டவர்கள் ஊரில் அதிகம். அன்று முதல் வேளையாக அந்தப் பெண்மணி தம் நாயை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தார்.

  அந்த நாயைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஊரில் எல்லோரும் சொன்னார்கள். ஆனால் வீட்டில் போய் சுட முடியாது அல்லவா? அவர் வீட்டில் நாயை அடைத்து வைத்திருக்கும் செய்தி எங்களுக்குத் தெரியவந்தது. எங்கள் வீட்டின் பக்கமே கோயில் அதன் காம்பவுண்ட் மதில் சுவராய் நான்கு புறமும் வளர்ந்திருக்க கிழக்கே வாசல்! அதற்கு இரண்டு பெரிய கதவுகளும். ஒரு சிறு திட்டி வாசலும் உண்டு. ( என் வலைப்பூவின் முகப்பில் என் பெண்கள் அமர்ந்து இருக்கிறார்களே அந்த வாசல்)  எங்கள் வீட்டில் வளர்த்து வந்த நான்கு நாய்களில் மூன்றினை இந்த கோயில் பிரகாரத்தில் விட்டுவிட்டு கதவை தாழிட்டுவிட்டு வந்துவிட்டோம். அப்போது கோயில் அவ்வளவு பிரபலம் இல்லை.

   காலையில் பூஜைக்குத் திறந்து பின் மூடிவிட்டால் அப்புறம் மாலையில் தான் திறப்போம் யாரும் வர மாட்டார்கள். அவ்வளவு பெரிய பிரகாரத்தில் நாய்களால் சுற்றிவர முடியவில்லை! ஊளையிட்டுக் கொண்டே இருந்தன. வெளியே சென்ற குட்டி நாய் ஒன்று மட்டும் வீடு திரும்பவில்லை! குறவனிடம் மாட்டிக் கொண்டுவிட்டது போலும். இந்த மூன்று நாய்களை எப்படியோ கடவுள் காப்பாற்றிவிட்டார்.

   இதற்கப்புறம் கிராமதேவதை கோயில் குடமுழுக்கு ஒன்று செய்கையில் என் தந்தை கலசம் எடுக்கையில் அவர் காதில் நாய் அழும் ஓசை கேட்கிறது! நாய்களை சுட்டு கொன்றுவிட்டீர்களே! அதன் பாவம் கிராமத்தை வதைக்கிறது என்று சொன்னார். ஆனாலும் கிராமத்தினர் அதை லட்சியம் செய்யவில்லை.

   துணி வெளுக்கும் பெண்மணியின் நாயும் கட்டுக்காவலை மீறி வெளியே வந்து இருக்கிறது. அவ்வளவுதான் போட்டுத் தள்ளிவிட்டார்கள். அந்த பெண்மணி பெரிய சண்டையே போட்டார். ஆனால் துரத்திவிட்டார்கள். அதற்கப்புறம் ஊரில் நாய்களே குறைந்து போய்விட்டது. பாதிக்கும் மேல் ஓடிப்போய்விட்டன.

   துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பி பிழைத்த நாய்கள் சிலநாட்கள் வாழ்ந்தன. அப்புறம் வயல் வெளியில் பாம்பு தீண்டி இறந்தன. அந்த தாய் நாயை வெறிபிடித்த ஓர் நாய் கடித்துப் போட்டுவிட்டது. அதைக் காப்பாற்றச் சென்ற ஓர் நாயும் செத்துப் போனது. பன்றி மேய்ப்பவர்கள் கல்லால் அடித்ததாக சொன்னேனே அந்த நாய் மட்டும் ரொம்ப நாள் வாழ்ந்தது. அது ஒரு பெண் நாயைக் கூட்டிவந்தது என்றேன் அல்லவா? அந்த நாய் வருடம் மூன்று முறை குட்டிகள் போடும். அந்த குட்டிகள் என்ன பாவம் செய்தனவோ? வளரும் முன்னரேயே இறந்து போய்விடும். சில குட்டிகள் நன்கு வளர்ந்து இருக்கும் பார்த்தால் ஏதாவது விபத்து அல்லது பாம்பு தீண்டி இறந்து கிடக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் எல்லாம் இந்த நாய்களுக்கு பிஸ்கெட் முதலானவற்றை போடுவார்கள்.  சென்ற வருடம் ஒருநாள் திடீரென அந்த ஆண் நாயைக் காணவில்லை! இரண்டு நாட்களாக தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை. எங்காவது சென்றிருக்கும் வந்துவிடும் என்று பார்த்தோம். ஆனால் வரவில்லை. அப்புறம் பார்த்தால் எங்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள ஓர் வயல்வெளியில் இறந்து கிடந்தது. அங்கு ஏதோ பாம்பு தீண்டி இறந்து போனது போலும். மனது மிகவும் கனத்து போனது. பின்னர் பெண் நாயும் அதன் குட்டிகளும் மட்டும் இருந்தன.

     இந்த பெண் நாய் பல முறை குட்டிகள் போடும். சில சமயம் மழைக்காலங்களில் அதன் குட்டிகள் தவிக்கும். அந்த சமயங்களில் மழையில் நனையாதவாறு சிறு பந்தல் தடுப்புக்கள் அமைத்து கோணிகள் போட்டு விடுவோம். அதன் குட்டிகள் வளர்ந்து எங்கள் குழந்தைகளோடு விளையாடும்.

   சென்ற மாதத்தில் ஒருநாள் பெண் நாயைக் காணவில்லை! அதன் குட்டியும் இல்லை. சரி எங்காவது சென்றிருக்கும் வந்துவிடும் என்று பார்த்தோம். ஆனால் மறுநாள் எங்கள் வீட்டருகே இருந்த வயல் புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. சென்று பார்த்தபோது  நாய் இறந்து கிடந்தது. அன்றே குட்டி நாயும் சாலையில் அடிபட்டு இறந்து போனதாய் தகவல் கிடைக்க  எனக்கு வருத்தமாக போய்விட்டது. என் அப்பாவிற்கு வருத்தம் இருந்தாலும் ஒருவிதத்தில் மகிழ்ச்சி! இந்த பெண் நாய் அடிக்கடி குட்டி போட்டுவிட்டு அந்த குட்டிகள் கோயிலில் அசுத்தம் செய்து பாழ் செய்துவிடும். அந்த தொல்லையில் இருந்து விடுதலை என்று சொன்னார். அந்த நாயை அவரே எடுத்துச் சென்று தொலைவில் புதைத்துவிட்டார்.

  கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக எங்களோடு வசித்த நாய்க் குடும்பம் முற்றிலும் அழிந்துவிட்டது. இதே போல்தான் பூனைக்குடும்பமும் முற்றிலும் அழிந்து போனது. எதுவும் நிலையில்லை! என்பதை இது சொல்கிறதோ என்னவோ?

  இப்போது வேறு சில நாய்கள் வீட்டை சுற்றி வருகின்றன. ஆனால் எதுவும் தங்குவது இல்லை! நல்லதொரு நாய்க்குட்டியை பிடித்துவந்து வளர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பைரவர்  அருள் கிடைக்கிறதா பார்ப்போம்!

( இந்த நாய்க்குட்டிகள் சிலவற்றை என் மொபைலில் சிலமுறை படம் எடுத்து இருக்கிறேன்! இப்பொழுது தேடுகையில் எதுவும் சிக்கவில்லை! அதுவும் எனக்கு வருத்தமே!)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 43

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 43


1.   அந்த திருடனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்பு!
  எப்படி சொல்றே?
நகையை அறுத்ததோட இல்லாம ஏம்மா இன்னும் ஓல்டு மாடல் நகையே போட்டுகிட்டு இருக்கீங்க! புதுமாடல் போட மாட்டீங்களான்னு கேட்டுட்டு போறான்!

2.   தலைவர் எதுக்கு மதுவிலக்கை தீவிரமா ஆதரிக்கிறார்?
அப்பத்தான் நாட்டுச்சரக்கு ஃப்ரீயா கிடைக்குமாம்!

3.   மன்னர் ஏன் புலவரை கோபித்துக் கொள்கின்றார்?
அரசர் கொடுத்த முத்திரை மோதிரத்தை அடகுக் கடையில் வைத்துவிட்டாராம்!

4.   கல்யாண நாளும் அதுவுமா குடிச்சுட்டு வந்து இருக்கீங்களே! உங்களுக்கே நல்லாயிருக்கே!
  சாரிம்மா! துக்கம் தாளாம கொஞ்சம் ஊத்திக்கிட்டேன்!

5.   எதுக்குடி எங்க அம்மா தலையிலே இத்தனை பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கிப் போட்டே!
நீங்கதானே சொன்னீங்க எங்க அம்மா கிட்ட ஐஸ்வச்சி பேசிப் பழகுன்னு!

6.   மாப்பிள்ளை ரெண்டுவழியிலே சம்பாதிக்கிறார்னு சொல்றீங்களே என்னவா இருக்கார்?
கிரிக்கெட் பிளேயரா இருக்கார்! ஆடினாலும் சம்பளம்! ஆடாவிட்டாலும் சம்பளம்!

7.   வெயிட்டான ரோல் வேணும்னு கேட்டீங்களே கிடைச்சிருக்கு பண்றீங்களா?
என்ன ரோல்!
கடோத்கஜன் வேசம் தான்!

8.   டாக்டர் பேஷண்டை மாத்தி ஆபரேஷன் பண்ணீட்டீங்களே!
அதனால என்ன ரூமை மாத்தி விட்டுரு!

9.    இப்ப என்ன குடி முழுகிப்போச்சுன்னு தலைவர் கட்சியை ஆந்திராவுக்கு  மாத்திடனும்னு சொல்லிக்கிட்டிருக்கார்!
தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கு வரப்போவுதாமே!

10.அந்த எழுத்தாளராலத்தான் இன்னும் போஸ்ட் ஆபிஸ் நஷ்டம் ஆகாம இருக்கா எப்படி?
அவர் எழுதற எல்லா படைப்பும் அப்பப்ப திரும்பி வந்துக்கிட்டே இருக்கே! அதனாலதான்!

11.தலைவருக்கு ஆங்கில அறிவு கொஞ்சம் கம்மின்னு எப்படி சொல்றே?
ஓட்டல்ல சாப்பிடப் போனப்ப ரெஸ்ட் ரூம்னு போட்டிருக்கே இங்க ரெஸ்ட் எடுத்துக்கவான்னு கேக்கறாரே!


12.மன்னா இளவரசர் உங்கள் பெருமையை நிலைநாட்டி விட்டார்!
எப்படி?
கோலி ஆட்டத்தில் தோற்றுவிட்டு முட்டி தேய்ந்து வந்திருக்கிறார்!

13.அந்த டாக்டர் கிண்டல் பேர்வழின்னு எப்படி சொல்றீங்க?
ஊசிப்போடுங்க டாக்டர்னு சொன்னா.. ஊசி “ஊசி” ப்போயிருச்சுன்னு சொல்றாரே!

14.மன்னா! என் வீட்டில் அடுப்பெரிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது!
  ஏன் நீங்களும் சிலிண்டர் வாங்கி விட்டீர்களா?

15. தலைவர் எதுக்கு சரக்கு கப்பலை தடை செய்யனும்னு சொல்லி அறிக்கை விட்டிருக்கார்!
அவர் அதை “ சரக்கு” கப்பல்னு தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கார்!

16.மந்திரியாரே! சமிபத்தில் மன்னர் போருக்கு ஏதும் செல்லவில்லையே அப்புறம் எப்படி இத்தனை தழும்புகள் முகத்தில்…!
அதெல்லாம் ராணியாரிடம் பெற்ற தழும்புகள் சும்மா இரும்!

17.என்னது மன்னர் குழியில் சிக்கி தோற்றுப்போய்விட்டாரா?
  ராணியாருடன் பல்லாங்குழி ஆடி தோற்றுப்போனதை சொன்னேன் ஐயா!

18.ஒரு தலைமுறையே இந்த படத்தால மாறிப்போயிருக்கு!
அவ்வளவு நல்லா இருக்கா படம்?
 நீ வேற அவ்வளவு மோசமா இருந்தததுனால படம் பாக்கிறதையே விட்டிருக்குன்னு சொல்ல வந்தேன்!

19. தலைவர் எதுக்கு கட்சி ஆபீஸ்ல நிறைய சோடியம் விளக்குகளை போடச் சொல்றார்!
கட்சியில் எந்த ஒளிவு மறைவும் இல்லேன்னு சொல்றாராம்!

20. சின்னதா இருந்த ஓரு ஓட்டைய  மறைக்க ஐம்பதாயிரம் செலவாச்சா எப்படி?
ஒண்ணுமில்லே என் வொய்ப் ஒரு டைமண்ட் மூக்குத்தி வாங்கிட்டா அதான்!

21 புலவர் ஏன் கோபமாக இருக்கிறார்?
 பஞ்சத்தில் அடிபட்டு வந்த புலவர் பாட ஆரம்பித்ததும் மன்னர் காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு விட்டாராம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


பவானித் தாயே! பாரங்களை நீக்குவாயே! பெரியபாளையம் பவானி அம்மன் தரிசனம்!

$
0
0

எத்தனையோ வடிவுகளில் உலகினை காத்து அருளாட்சி செய்துவருகின்றாள் அன்னை. புற்றிலே சுயம்பாகத் தோன்றி பவானி என்ற நாமம் தாங்கி பக்தர்களின் துயர் நீக்கி குலம் வளர பரிவுகாட்டுகின்றாள் பெரியபாளையம் பவானி அம்மன்.

   முன்னொரு காலத்தில் ஆந்திரத்தில் இருந்து வளையல் வியாபாரிகள் சென்னை வந்து வியாபாரம் செய்வது வழக்கம். அப்படி ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு வர பெரியபாளையம் வழியாக வருவது வழக்கம். அப்படி ஒரு வியாபாரி வளையல் மூட்டைகளுடன் இந்த வழியே வந்திருக்கிறார். கடும் வெயில் களைப்பு மேலிட ஆற்றங்கரையில் நீர் அருந்தி அங்கே இருந்த ஓர் வேப்ப மரத்தடியில் மூட்டையை வைத்துவிட்டு தலை சாய்த்து இருக்கிறார்.

  வெயில், களைப்பு, மேலும் இதமான வேப்பங்காற்று வீச அப்படியே கண்ணுறங்கிப் போய் இருக்கின்றார். பின்னர் விழித்தபோது அவரது அருகில் வைத்திருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. அதுதானே அவரது முதல். பதறிப்போய் சுற்றும் முற்றும் தேடியுள்ளார். அப்போது அருகில் இருந்த ஓர் புதரினில் இருந்த புற்றுக்குள் இந்த மூட்டை கிடந்துள்ளது. நல்ல பெரிய புற்று.

   பாம்பு புற்று என்பதால் பயந்து போய் குச்சி விட்டு மூட்டையை எடுக்க முயற்சித்துள்ளார் வியாபாரி. வளையல் மூட்டையை எடுக்க முடியவில்லை. நெடுநேரம் முயன்றும் முடியாததால் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று இரவு அவர் கனவில் அன்னை ரேணுகா தேவி தோன்றி, வியாபாரியே! புற்றினுள் வளையல் சிக்கிய அந்த இடத்தில் நான் குடிகொண்டுள்ளேன். எனக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடு! என்று உத்தரவிட்டுள்ளார்.

  மறுதினமே பெரியபாளையம் வந்து அங்குள்ள ஊர் மக்களிடம் கனவில் கண்ட காட்சியைக் கூறி உள்ளார். ஊர்மக்களும் அவருமாக திரண்டு புற்றை மண்வெட்டியில் சிதைத்து தோண்டியுள்ளனர். அப்போது “ணங்” என்ற ஓசை கேட்டதுடன் புற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. அனைவரும் பதறிப்போயினர். வளையல் வியாபாரி தன் கையில் இருந்த மஞ்சளால் சுயம்புவாக தோன்றிய அன்னையின் தலையில் அப்பினார். இரத்தம் நின்றது. அனைவரும் வணங்கினர்.

   அங்கேயே அன்னைக்கு ஆலயம் எழுப்பினர். அன்னை ரேணுகா தேவியை பவானி என்று அழைத்தனர். புற்றில் இருந்து சுயம்புவாக தோன்றியவளாதலால் விக்கிரகம் இல்லை. சுதை சிற்பம் உண்டு. சுயம்பு லிங்கத்தின் மீது வெள்ளிக்கவசம் தலை மட்டும் சார்த்தப்படுகின்றது. பவானி என்று அழைத்தாலும் ரேணுகா தேவியின் அம்சமாக மாரியம்மனாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள்.

  வேப்ப மரத்தடியில் தோன்றியதாலோ என்னவோ இங்கு வேப்பிலை ஆடை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் விஷேசமாக அமைந்துள்ளது. ஆரண்ய நதிக்கரையோரம் அழகுற அமைந்துள்ளது ஆலயம். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் ஞாயிறு தொடங்கி பத்து வாரங்கள் அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள். அப்போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

   முன்பு சிறிய கோயிலாக இருந்த ஆலயம், தற்போது புணருத்திரா தாரணம் செய்விக்கப்பட்டு பெரியதாக  வளர்த்திக் கட்டப்பட்டுள்ளது. பவானி அம்மன் தவிர விநாயகர், மாதங்கி அம்மன், பெருமாள் சன்னதிகள் சுற்றுப் பிராகாரத்தில் உண்டு.

   திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் இது. ஆடிமாதத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து பரிவு காட்டுகின்றாள் அன்னை பவானி.

 கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம்.  அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம்.  வெளிப் பிரஹாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கு ஒரு சந்நிதியும் காணப்படுகிறது.  பரசுராமர் இங்கே வந்திருப்பதன் காரணம் இவள் ரேணுகா தேவி என்பதால் இருக்கலாம்.  நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர்  என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள்.  மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர்.  

பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள்.


இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி, உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.

உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரியபாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் கணவன் நோய்வாய் பட்டிருந்தால் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

கோவிலுக்குள் நுழையும் பகுதி இரு பக்கமும் கடைகளால் நிறைந்துள்ளது. அதை கடந்து சென்றால் முதலில் விநாயகரை வணங்கலாம். பிறகு விநாயகர் சன்னதி பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும். அதில் இருந்து பிரகார மண்டபத்துக்கு வந்து விடலாம். முன் பக்க வாசல் வழியாக வந்தால் கருவறையில் பவானி அம்மனின் `பளீர்'தோற்றத்தை கண்டு மனம் உருகி தரிசிக்கலாம்.

இதையடுத்து உள்ள சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது. உற்சவரை வணங்கி விட்டு அருகில் உள்ள வாசல் வழியாக பெரிய பிரகாரத்துக்கு வரலாம். அந்த பிரகாரத்தை வலப்புறமாக சுற்றி வருதல் வேண்டும். அந்த பிரகாரப் பாதையில் வள்ளி-தெய்வானை சமேத முருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதி உள்ளன. இந்த சன்னதிகளுக்கும் சென்று தவறாது வழிபட வேண்டும்.

கோவில் வலது பக்கத்தில் சற்றுத் தொலைவில் புற்று மண்டபம் உள்ளது. அங்கு சென்றும் வழிபட வேண்டும். பிறகு கோவில் வளாகத்தில் அமர்ந்து வழிபாட்டை நிறைவு செய்யலாம். 

14 வாரம் ஆடிவிழா:


பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிக விமரிசையுடன் 14 வாரங்கள் நடைபெறுகிறது.

ஆடிமாதம் முதல்வாரம் -சூரியபிரபை

இரண்டாவது வாரம் -குதிரை வாகனம்

மூன்றாவது வாரம் -நாகவாகனம்

நான்காவது வாரம் -சிம்ம வாகனம்

ஆவணி மாதம் 5-வது வாரம் -அன்னவாகனம்

ஆறாவது வாரம் -சந்திரப்பிரபை

7-வது வாரம் முதல் 10-வது வாரம் வரை அன்னை பவனி வரும் ரதோற்சவம்.

இது வாண வேடிக்கைகளுடன், மேள வாத்தியங்களுடன் விமரிசையாக நடைபெறும். இவ்விழாவின் முடிவாக நான்கு வாரங்கள் தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

  பாளையம் என்றால் படைவீடு என்பது பொருளாகும். பெரிய பாளையம் என்றாள் பெரிய படைவீடு என்று பொருளாகின்றது. பெரிய படைவீட்டில் தாயார் ரேணுகா தேவி பவானியாக வீற்றிருந்து பக்தர்களின் குறைகளை பரிவுடன் கேட்டு போக்கி வருகின்றாள்.

இவ்வுலகில் எது பொய்த்தாலும், பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா போன்ற கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள். உயிர்ப்பலி இடுவது தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் இவ்வன்னைக்கு ஆடு, கோழி முதலியவற்றை உயிருடன் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.  ஒரு முறை பெரிய பாளையம் சென்றுவருவோம்! அன்னையின் கருணை மழையில் நனைவோம்!

ஆலய இருப்பிடம்: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் மார்க்கம்( வழி புத்தூர்) காரனோடை பாலத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரிய பாளையம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்தும் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தடம் எண் 592, 92, 514 ஆகிய பேருந்துகள் பெரியபாளையம் செல்லும்.

(படங்கள் இணையத்தில் இருந்து)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை  பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!

$
0
0
அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!


முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அறிவு மிகுந்த முனியன் என்பவன் அவனிடன் வேலைக்காரனாக இருந்தான். ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அரசன் களைப்புடன் அரண்மனைக்கு திரும்பிக் கொண்டு இருந்தான்.

   அரசன் வருவதை அறியாத முனியன் மற்ற வேலைக்காரர்களிடம்; என்னைப்போன்ற அறிவாளி இந்த நாட்டில் யாருமே இல்லை! ஏதோ என்நேரம் சரியில்லாததால் வேலைக்காரனாக இருக்கிறேன் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் நான் அமைச்சனாகி விடுவேன் என்று பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தான்.

    பகலில் பக்கம் பார்த்து பேசு! இரவில் அதைக்கூட பேசாதே என்பார்கள்! முனியன் அரசர் வருவதை கவனிக்காமல் பேசிய  இந்த பேச்சு அரசரின் காதில் விழுந்துவிட்டது. இவன் என்ன பெரிய புத்திசாலியா? இவனுக்கு ஒரு சோதனை வைப்போம் என்று கோபம் கொண்டான் அரசன். டேய்! முனியா! நீ என்ன அவ்வளவு பெரிய புத்திசாலியா? நீ அறிவாளியா இல்லையா என்பதை நான் கண்டுபிடிக்கிறேன். வீண் பெருமை பேசியதால் நீ உன் உயிரை இழக்கப் போகிறாய் என்றான்  மிகுந்த கோபத்துடன் அரசன்.

   இதைக்கேட்டு  கொஞ்சமும் பயப்படவில்லை முனியன், இனி நமக்கு நல்ல காலம்தான்! என்று நினைப்புடன் அரசே! என்ன சோதனை வைக்கப்போகிறீர்கள்? என்று பணிவுடன் கேட்டான்.

   “நீ கடலில் உள்ள அலைகளை எல்லாம் ஒரு வலையில் பிடித்துக் கொண்டு இங்கே வர வேண்டும் அப்படி முடியாவிட்டால் உன் உயிர் போகப்போவது உறுதி” என்று கோபத்துடன் சொன்னான் அரசன்.

    சிந்தனையில் ஆழ்ந்த முனியன், அரசே! நீங்கள் சொன்ன செயலை எளிதாக என்னால் செய்ய முடியும் அதற்கு நான் கேட்கும் பொருளை நீங்கள் எனக்கு தர வேண்டும் என்று கேட்டான்.

  யாராலும் செய்ய முடியாத இதை நீ செய்து விடுவாயா? அப்படி என்ன பொருட்கள் வேண்டும் கேள் உடனடியாக தருகிறேன்! என்றான் அரசன் இறுமாப்புடன்.

     அரசே! கடல் அலைகளை வலையில் பிடித்து இழுத்துவர கட்டளையிட்டு இருக்கிறீர்கள் அப்படி செய்ய எனக்கு கடல் மணலால் செய்யப்பட்ட வலை ஒன்று வேண்டும் எப்போது தருகிறீர்கள் என்று கேட்டான் முனியன்.

   இதை எதிர்பாராத அரசன்  அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தான். அரசே வலை கிடைத்ததும் சொல்லி அனுப்புங்கள் வருகிறேன் என்றான் முனியன்.

   அடேய்! முனியா வென்று விட்டதாக நினைக்காதே! நாளை நீ அரசவைக்கு வந்து சேர்! அங்கு உனக்குஇன்னொரு போட்டி காத்திருக்கிறது என்று அரசன் ஆத்திரத்துடன் கூறி சென்று விட்டான்.

   மறுநாள் அரசவையில் அரசன் அமர்ந்திருந்த போது முனியன் பணிவாக வந்து நின்றான். அரசன் அவனைப் பார்த்து, முனியா! நீ சமையலில் நிபுணனாமே! இதோ இந்த கோழியைக் கொண்டு நீ இருபது வகையான உணவுகளை சமையல் செய்யவேண்டும். அதைச் சாப்பிட நாங்கள் நூறு பேர் வருவோம். எங்களுக்கு வயிறார  நீ உணவு போட வேண்டும் என்றான்.

   இதைக்கேட்ட முனியன் தன் கையில் இருந்த ஒரு ஊசியை எடுத்து அரசனிடம் தந்தான். அதைப்பெற்றுக் கொண்ட அரசன் எதற்காக இந்த ஊசியை தருகிறாய்? என்று கேட்டான்.

  அரசே! ஒரு கோழியைக் கொண்டு நூறு வகையான சமையல் கூட நான் செய்யத் தயார்! அதைக் கொண்டு ஆயிரம் பேருக்கு வயிறார உணவிடவும் என்னால் முடியும். இந்த உலகில் முடியாதது என்பது கிடையவே கிடையாது. நான் கொடுத்த இந்த ஊசியை நீங்கள் யாரிடமாவது கொடுத்து அடுப்பு சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் செய்து தரச் சொல்லுங்கள் அடுப்பும் பாத்திரமும் வந்தவுடன் நீங்கள் சொன்னபடியே சமைக்கிறேன் என்றான் முனியன்.

   இந்த ஊசியில் எப்படி பாத்திரங்கள் செய்ய முடியும்? மன்னன் முனியனின் அறிவை மெச்சினான். முனியா நீ! பலே கில்லாடி!  இவ்வளவு அறிவுடைய நீ இன்று முதல் என் அமைச்சர்களில் ஒருவன்.  என்று முனியனை அமைச்சன் ஆக்கி கொண்டான்.

   தன்னுடைய அறிவு கூர்மையால் வேலைக்காரனாக இருந்து அமைச்சராக உயர்ந்த முனியனின் அறிவுத்திறமையை போற்றுவோம்!

(செவிவழிக் கதை தழுவல்)

( மீள்பதிவு)

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தித்திக்கும் தமிழ்! பகுதி 16 பலசரக்கு பை எடுத்தான்! கடுக வா! முத்துசாமி!

$
0
0
தித்திக்கும் தமிழ்!  பகுதி 16


பண்டைத் தமிழ் புலவர்களின் வார்த்தை விளையாட்டே தனி! அன்றாடம் உபயோகிக்கும் சில பொருட்களைக் கூட சேர்த்து எழுதி பொருள்பட கவிபாடி அசத்தி விடுவார்கள். தலைவன் வரக்காணோம் என்று தலைவி பிரிவுத்துயரில் இருக்கின்றாள். பிரிவுத்துயரம் எத்தனை சோகமானது.
 அத்தனை சோகம் கொண்ட தலைவி எப்படி பாடுகின்றாள் பாருங்கள்!

 பலசரக்குப் பைஎடுத்தான் வேள்; ராய புரியாள்
    பயந்தேன்என் றாள்; ‘அரிசி வசம்போ’ என்று அழுதாள்;
மலர்சூடன் சாம்பிராணி யானேன்என் றாள் நீ
    வரக்காணம் என்று அழுதுஇ துவரைஎதிர் பார்த்தாள்
அலைகடலை வைகின்றாள்; ‘என்னமாய், அக்கா
  யான்பிழைப்பேன்?” என்றாள் பேச் சுக்குமதி மதுர,
கலமுத்து சாமிசீர் அகம் இளகன் பாக்கு;
  கடுகவா! இதில்வெகு சகாயமுண்டு குணமே!

முதல் வாசிப்பில் ஒன்றும் புரியாது அல்லவா? பலசரக்கு அரிசி சூடம், சாம்பிராணி என்று ஏதோ மளிகைக் கடை வஸ்துக்களை பட்டியல் இட்டு இருக்கிறாரே என்று தோன்றும்.

   ஆனந்தம் என்ற படத்தில் மளிகைக்கடைகாரர் காதலிக்கு எழுதிய கடிதம்தான் முதலில் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் எழுதியது கவிதை அல்ல! நகைச்சுவை! இதோ இந்தப் புலவரும் அப்படி ஒரு கவிதை எழுதி இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை அல்ல கவிதை மிளிர்கின்றது.

  அழகிய சொக்கநாதம் பிள்ளை என்றொரு புலவர், இவரை ஆதரித்த வள்ளல்  முத்துசாமி வள்ளல். இந்த முத்துசாமி வள்ளலை வைத்து ஓர் தூது கவி இயற்றி இருக்கிறார் சொக்க நாதம் பிள்ளை.

   முத்துசாமி வள்ளலை நினைத்து பிரிவாற்றாமையால் வாடும் தலைவி எவ்வாறெல்லாம் வாடுகின்றாள்! அவளை வந்து விரைவில் பார்ப்பாயாக! என்று சொல்கின்றார் கவிஞர்.

  பல சரக்கு பை எடுத்தான்: மன்மதன் தன் பல அம்புகள் கொண்ட அம்புறாத் துணியை எடுத்தான்.

ராயபுரியாள் பயந்தேன் என்றாள்: ராயபுரி என்னும் ஊரில் வாழ்பவள் பயந்தேன் என்று சொன்னாள்.

அரிசி வசம்போ என்று அழுதாள்” : அரியே! சிவசம்போ எனச் சொல்லி அழுதாள்

மலர் சூடன் சாம்பிராணியானேன் என்றாள்: மலர் சூடமாட்டேன்! நான் இறக்கும் நிலையில் உள்ள பிராணியாக ஆனேன் என்றாள்.

வரக்காணோம் என்று அழுது இதுவரை எதிர்பார்த்தாள்: வள்ளல் வருவார் என்று இதுவரை எதிர்பார்த்து வராமையால்அழுகின்றாள்.

அலைகடலை வைகின்றாள்:  அலைஉடைய கடலை திட்டுகின்றாள்
என்னமாய் அக்கா யான் பிழைப்பேன்? என்றாள்:  தமக்கையே! நான் எவ்வாறு உயிர்வாழ்வேன் என்று கேட்கின்றாள்.

பேச்சுக்கு மதி மதுர கலமுத்து சாமி சீர் அகம் இளகன் பாக்கு; இனிக்க இனிக்க பேசும் அகன்ற மார்பினை உடைய முத்துசாமி வள்ளல்  உள்ளம் இளகி என்னுடன் அன்புடன் இருக்குமாறு செய் என்கிறாள்.

கடுகவா! இதில் வெகு சகாயமுண்டு குணமே!

  ஆகவே மன்னனே! நீ விரைவாக வந்து சேர்வாயாக! அது மிக்க உதவியாக இருக்கும் நன்மை ஏற்படும்.

  முத்துசாமி வள்ளலை நினைத்து ஏங்கும் ஓரு பெண்ணை தலைவியாக வைத்து இந்தப்பாடல் புனையப்பட்டுள்ளது.  இந்த பெண்ணின் மீது மன்மதன் தன் அம்புகளை வீசி விட அவள் அஞ்சிப்போய் “ அரியே! சிவ சம்போ! என்று அழுது கிடக்கின்றாள். மலர் சூடேன், என்றவள் சாகும் நிலையில் உள்ள பிராணி போல் வதங்கி  முத்துசாமி வள்ளலை எதிர்பார்த்து காத்திருந்தாள். அலைகடல் போல் அவள் உள்ளம் பொங்க, கடலை வசை பாடுகின்றாள். அலைகடலில் வாழும் லஷ்மிதேவியைப் பார்த்து அக்கா நான் எப்படி உயிர்வாழ்வேன் என்று கேட்கின்றாள். இனிக்க இனிக்க பேசி மகிழ்விக்கும் பரந்த மார்பினை உடைய முத்துசாமி வள்ளல் உள்ளம் இளகி வந்து என்னுடன் அன்புடன் இருக்குமாறு செய் என்று கேட்கின்றாள். ஆகவே மன்னனே! நீ விரைவாக வந்து இந்த பெண்ணின் சோகம் தீர்ப்பாயாக! அது மிக்க நன்மை பயக்கும் என்று சொல்கின்றார் புலவர்.

இதை அப்படியே வறுமையில் வாடிய புலவர் வள்ளலின் முகம் காணத் தவிப்பது போலக் கூட உணரலாம் அல்லவா?


மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் மீண்டுமொரு பாடலுடன் சந்திப்போம்! உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

தளிர் சென்ரியு கவிதைகள்!

$
0
0
தளிர் சென்ரியு கவிதைகள்!


முடி ஆட்சி ஒழிந்தும்
ஒழியவில்லை குடியாட்சி!
டாஸ்மாக்!

காதைத் திருகியதும்
கதறி அழுதது!
தண்ணீர் குழாய்!

கொஞ்சிப்பேசினாலும்
ரசிக்கவில்லை மனசு!
டிவி தொகுப்பாளினி!


வெளுத்ததெல்லாம் “பால்”
விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
சூதாட்டம்!

செயற்கை புன்னகையில்
சீரழிகின்றது உலகம்!
அன்னிய உணவுகள்!

கூட்டணி அமைக்க
கற்றுத்தந்தன மலர்கள்!
கதம்பம்!

விளைச்சல் மிகுந்ததும்
வீழ்ந்தது விலை!
வேதனையில் விவசாயி!

மறைத்து வைத்தாலும்
கேட்டுவாங்கப்படுகிறது கேடு!
குட்கா.

மணி அடித்து சோறு
போட்டார்கள்!
சிறையில் கடவுள்!


அடுக்குமாடிக்குள்
அடங்கிப்போயின
கிராமத்து வீடுகள்!

காய்ந்த வயல்களில்
பூத்தன கொடிகள்!
வீட்டுமனை விற்பனை!

நெரிசலில் சிக்கி
உயிரை இழந்தது
நிமிடங்கள்!

விடியும் வரை ஆட்டம்!
விடிகாலையில் தூக்கம்!
விதி ஆனது நகரம்!

நகரம் ஆனது நரகம்!
நகர மறுத்தது நீர்!
மழை!

அஸ்திவாரமில்லாத வீடுகள்!
இடிந்துவிழுந்தன!
ஏரியில் வீடுகள்!

பேசிகள் பெருகியது
அருகியது பறவை!
சிட்டுக்குருவி!

எல்லா ஊரையும்
இணைத்து வைத்தது
பேருந்துநிலையம்!


தட்டுப்பாடில்லை
சில்லறைக்கு!
பிச்சைக்காரன்!

வரம் கேட்டு வருபவனிடம்
காணிக்கை கேட்கிறார் கடவுள்!
உண்டியல்!

இழுத்தாலும் விட்டாலும்
ஈர்த்துக் கொள்கிறது மரணம்!
சிகரெட்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!


Viewing all 1537 articles
Browse latest View live