எத்தனையோ வடிவுகளில் உலகினை காத்து அருளாட்சி செய்துவருகின்றாள் அன்னை. புற்றிலே சுயம்பாகத் தோன்றி பவானி என்ற நாமம் தாங்கி பக்தர்களின் துயர் நீக்கி குலம் வளர பரிவுகாட்டுகின்றாள் பெரியபாளையம் பவானி அம்மன்.
முன்னொரு காலத்தில் ஆந்திரத்தில் இருந்து வளையல் வியாபாரிகள் சென்னை வந்து வியாபாரம் செய்வது வழக்கம். அப்படி ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு வர பெரியபாளையம் வழியாக வருவது வழக்கம். அப்படி ஒரு வியாபாரி வளையல் மூட்டைகளுடன் இந்த வழியே வந்திருக்கிறார். கடும் வெயில் களைப்பு மேலிட ஆற்றங்கரையில் நீர் அருந்தி அங்கே இருந்த ஓர் வேப்ப மரத்தடியில் மூட்டையை வைத்துவிட்டு தலை சாய்த்து இருக்கிறார்.
வெயில், களைப்பு, மேலும் இதமான வேப்பங்காற்று வீச அப்படியே கண்ணுறங்கிப் போய் இருக்கின்றார். பின்னர் விழித்தபோது அவரது அருகில் வைத்திருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. அதுதானே அவரது முதல். பதறிப்போய் சுற்றும் முற்றும் தேடியுள்ளார். அப்போது அருகில் இருந்த ஓர் புதரினில் இருந்த புற்றுக்குள் இந்த மூட்டை கிடந்துள்ளது. நல்ல பெரிய புற்று.
பாம்பு புற்று என்பதால் பயந்து போய் குச்சி விட்டு மூட்டையை எடுக்க முயற்சித்துள்ளார் வியாபாரி. வளையல் மூட்டையை எடுக்க முடியவில்லை. நெடுநேரம் முயன்றும் முடியாததால் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று இரவு அவர் கனவில் அன்னை ரேணுகா தேவி தோன்றி, வியாபாரியே! புற்றினுள் வளையல் சிக்கிய அந்த இடத்தில் நான் குடிகொண்டுள்ளேன். எனக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடு! என்று உத்தரவிட்டுள்ளார்.
மறுதினமே பெரியபாளையம் வந்து அங்குள்ள ஊர் மக்களிடம் கனவில் கண்ட காட்சியைக் கூறி உள்ளார். ஊர்மக்களும் அவருமாக திரண்டு புற்றை மண்வெட்டியில் சிதைத்து தோண்டியுள்ளனர். அப்போது “ணங்” என்ற ஓசை கேட்டதுடன் புற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. அனைவரும் பதறிப்போயினர். வளையல் வியாபாரி தன் கையில் இருந்த மஞ்சளால் சுயம்புவாக தோன்றிய அன்னையின் தலையில் அப்பினார். இரத்தம் நின்றது. அனைவரும் வணங்கினர்.
அங்கேயே அன்னைக்கு ஆலயம் எழுப்பினர். அன்னை ரேணுகா தேவியை பவானி என்று அழைத்தனர். புற்றில் இருந்து சுயம்புவாக தோன்றியவளாதலால் விக்கிரகம் இல்லை. சுதை சிற்பம் உண்டு. சுயம்பு லிங்கத்தின் மீது வெள்ளிக்கவசம் தலை மட்டும் சார்த்தப்படுகின்றது. பவானி என்று அழைத்தாலும் ரேணுகா தேவியின் அம்சமாக மாரியம்மனாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள்.
வேப்ப மரத்தடியில் தோன்றியதாலோ என்னவோ இங்கு வேப்பிலை ஆடை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் விஷேசமாக அமைந்துள்ளது. ஆரண்ய நதிக்கரையோரம் அழகுற அமைந்துள்ளது ஆலயம். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் ஞாயிறு தொடங்கி பத்து வாரங்கள் அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள். அப்போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
முன்பு சிறிய கோயிலாக இருந்த ஆலயம், தற்போது புணருத்திரா தாரணம் செய்விக்கப்பட்டு பெரியதாக வளர்த்திக் கட்டப்பட்டுள்ளது. பவானி அம்மன் தவிர விநாயகர், மாதங்கி அம்மன், பெருமாள் சன்னதிகள் சுற்றுப் பிராகாரத்தில் உண்டு.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் இது. ஆடிமாதத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து பரிவு காட்டுகின்றாள் அன்னை பவானி.
கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். வெளிப் பிரஹாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கு ஒரு சந்நிதியும் காணப்படுகிறது. பரசுராமர் இங்கே வந்திருப்பதன் காரணம் இவள் ரேணுகா தேவி என்பதால் இருக்கலாம். நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர்.
பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள்.
இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி, உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.
உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரியபாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் கணவன் நோய்வாய் பட்டிருந்தால் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
கோவிலுக்குள் நுழையும் பகுதி இரு பக்கமும் கடைகளால் நிறைந்துள்ளது. அதை கடந்து சென்றால் முதலில் விநாயகரை வணங்கலாம். பிறகு விநாயகர் சன்னதி பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும். அதில் இருந்து பிரகார மண்டபத்துக்கு வந்து விடலாம். முன் பக்க வாசல் வழியாக வந்தால் கருவறையில் பவானி அம்மனின் `பளீர்'தோற்றத்தை கண்டு மனம் உருகி தரிசிக்கலாம்.
இதையடுத்து உள்ள சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது. உற்சவரை வணங்கி விட்டு அருகில் உள்ள வாசல் வழியாக பெரிய பிரகாரத்துக்கு வரலாம். அந்த பிரகாரத்தை வலப்புறமாக சுற்றி வருதல் வேண்டும். அந்த பிரகாரப் பாதையில் வள்ளி-தெய்வானை சமேத முருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதி உள்ளன. இந்த சன்னதிகளுக்கும் சென்று தவறாது வழிபட வேண்டும்.
கோவில் வலது பக்கத்தில் சற்றுத் தொலைவில் புற்று மண்டபம் உள்ளது. அங்கு சென்றும் வழிபட வேண்டும். பிறகு கோவில் வளாகத்தில் அமர்ந்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
14 வாரம் ஆடிவிழா:
பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிக விமரிசையுடன் 14 வாரங்கள் நடைபெறுகிறது.
ஆடிமாதம் முதல்வாரம் -சூரியபிரபை
இரண்டாவது வாரம் -குதிரை வாகனம்
மூன்றாவது வாரம் -நாகவாகனம்
நான்காவது வாரம் -சிம்ம வாகனம்
ஆவணி மாதம் 5-வது வாரம் -அன்னவாகனம்
ஆறாவது வாரம் -சந்திரப்பிரபை
7-வது வாரம் முதல் 10-வது வாரம் வரை அன்னை பவனி வரும் ரதோற்சவம்.
இது வாண வேடிக்கைகளுடன், மேள வாத்தியங்களுடன் விமரிசையாக நடைபெறும். இவ்விழாவின் முடிவாக நான்கு வாரங்கள் தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
பாளையம் என்றால் படைவீடு என்பது பொருளாகும். பெரிய பாளையம் என்றாள் பெரிய படைவீடு என்று பொருளாகின்றது. பெரிய படைவீட்டில் தாயார் ரேணுகா தேவி பவானியாக வீற்றிருந்து பக்தர்களின் குறைகளை பரிவுடன் கேட்டு போக்கி வருகின்றாள்.
இவ்வுலகில் எது பொய்த்தாலும், பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா போன்ற கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள். உயிர்ப்பலி இடுவது தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் இவ்வன்னைக்கு ஆடு, கோழி முதலியவற்றை உயிருடன் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். ஒரு முறை பெரிய பாளையம் சென்றுவருவோம்! அன்னையின் கருணை மழையில் நனைவோம்!
ஆலய இருப்பிடம்: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் மார்க்கம்( வழி புத்தூர்) காரனோடை பாலத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரிய பாளையம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்தும் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தடம் எண் 592, 92, 514 ஆகிய பேருந்துகள் பெரியபாளையம் செல்லும்.
(படங்கள் இணையத்தில் இருந்து)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!