வலைப்பூவில் வாரம் தோறும் ஜோக்ஸ் எழுதி வந்தாலும் வார இதழ்களில் வெளிவரும்போது அதன் மகிழ்ச்சியே தனி. அதுவும் பல லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ள இதழ்களில் நமது படைப்புக்கள் வெளிவரும்போது உற்சாகம் ஊற்றெடுத்து நம்மை ஊக்குவிக்கும்.
கடந்தமாதத்தில் பாக்யா வார இதழில் எனது சில ஜோக்ஸ் வெளிவந்தும் என்னால் படிக்கவோ பார்க்க முடியவில்லை! எங்கள் பகுதியில் பாக்யாவார இதழ் கிடைக்க வில்லை. நண்பர் பூங்கதிர் அவர்கள் மூலம் வெளிவந்த விஷயம் மட்டுமே அறிய முடிந்தது.
இன்று எனது ஜோக் ஒன்று தினமலர்- வாரமலரில் பிரசுரம் ஆகியுள்ளது. கடந்தவருடம் ஒன்று வெளிவந்தபின்னர் நான் பத்திரிக்கைகளுக்கு சில ஜோக்ஸ் அனுப்பி வெளிவராமல் சோர்ந்திருந்தேன்.
ஒன் இண்டியா இணையத்தில் ராஜேஷ்குமார் தொடரை படித்தபோது முதலில் அவரது படைப்புக்களும் வெளிவராமல் திரும்பி வந்ததாகவும் குமுதத்திற்கு நிறைய அனுப்பி வெளிவராததால் சண்டையிட சென்றதாகவும் அவர்கள் குமுதத்திற்கு ஏற்றமாதிரியும் புதுமையாகவும் இருந்தால் கட்டாயம் வெளிவரும் என்றும் சொன்னார்கள். அதன்படி புதுமையாக மும்பையை வைத்து ஒரு கதை எழுதி பிரசுரம் ஆனதாக சொன்னார். ஆனால் அதற்கு முன் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கதைகள் பிரசுரம் ஆகவில்லை என்று சொன்னார். ஆனால் அவர் விடா முயற்சியினால் இன்று பெரிய எழுத்தாளராய் மிளிர்கின்றார்.
அந்த தொடரை படித்ததும் எனக்கும் உற்சாகம் ஊற்றெடுத்து நிறைய ஜோக்ஸ்களை குமுதம், பாக்யா, விகடன், வாரமலர் என்று பல்வேறு இதழ்களுக்கு மெயில் மூலம் அனுப்பினேன். ஒரு மாதமாக ஒன்றும் பிரசுரம் ஆகவில்லை! ஆனால் சோர்வடையவில்லை! கணிணி பழுதால் இந்த மாதம் கொஞ்சம் ஓய்வு கொடுத்து உள்ளேன்.
வாரமலரில் கட்டாயம் ஒரு ஜோக்காவது பிரசுரம் ஆகும் என்று எண்ணியிருந்தேன். கிட்டத்தட்ட வாரம் இருபது ஜோக்ஸ் என நூறு ஜோக்ஸ் அனுப்பி இருந்தேன். என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை! இன்றைய வாரமலரில்( சென்னைபதிப்பு) எனது ஜோக்ஸ் ஒன்று வாசகர் பம்பர் பரிசாக 1000 ரூபாய் பரிசுடன் பிரசுரம் ஆகியுள்ளது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
பிரசுரம் செய்த வாரமலருக்கும், ஊக்கமூட்டிய எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கும் ஆதரவளிக்கும் நட்புக்களுக்கும் எனது நன்றி! நன்றி! நன்றி!
படைப்பை வாசிக்க இங்கேhttp://www.dinamalar.com/supplementary_detail_story.asp…