Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தித்திக்கும் தமிழ்! பகுதி 27 கரந்தைப் பெண்களின் சிறப்பு!

$
0
0
தித்திக்கும் தமிழ்! பகுதி 27 கரந்தைப் பெண்களின் சிறப்பு!

   வணக்கம் அன்பர்களே! தித்திக்கும் தமிழ்ப் பாடல்களை அவ்வப்போது ரசித்து வருகிறோம். இன்று தனிப்பாடல் திரட்டு என்றொரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு பாடல் என்னை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது.

  கரந்தை என்ற ஊரில் உள்ள பெண்களது சிறப்பு என்ற தலைப்பில் அந்தப்பாடல் பதியப்பட்டு இருந்தது. உடனே எனக்கு நமது ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் நினைவு வந்தது. அவரது ஊராயிற்றே! அப்படி என்ன அவ்வூர் பெண்களது சிறப்பு என்று வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்ததும் வியப்பு மட்டுமல்ல புலவரின் கற்பனையை உயர்வு நவிற்சியை எண்ணி எண்ணி சிலாகித்தேன்!

இதோ அந்தப் பாடல்!

 பொன்னாகத் தார்மணி மாயோன் கரந்தைப் பொருப்பில்வரும்
 மின்னான் முகம்கண் டனஞ்சாயல் போல் பெற வேண்டியன்றோ
 அந்நாட் கமல மலர்கடல் மேரு அணிமயிலும்
 தன்னா லயனரி சங்கரன் வேலனைத் தாங்கியதே.

புரிகிறதா? தமிழாசிரியர்கள் ரசித்து மகிழ்வார்கள்! ஊமைக்கனவுகள் விஜி அய்யா மெல்ல புன்னகை சிந்துவார் என்று நினைக்கிறேன்!

   அந்த நாளில் தாமரை, பாற்கடல், மேருமலை அழகிய மயில் இவையெல்லாம் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன், முருகனை தாங்கி நின்றன. ஏன் தெரியுமா?

   பொன்னுலகம் என்று சொல்லப்படுகின்ற தேவலோகத்தில் வாழும் தேவாதி தேவர்கள் எல்லாம் வழிபாடு செய்யும் திருமால் அருள்பாலித்து வரும் கரந்தை என்னும் ஊரில் பிறந்த மின்னலைப் போன்ற இடையை உடைய பெண்களின் முகம், விழி, தனம், சாயல் இவற்றைப் பெறவே  தாமரையும் பாற்கடலும், மேருமலையும், அழகான மயிலும் பிரம்மாவையும் விஷ்ணுவையும் சிவனையும், முருகனையும் தாங்கி நின்றனவாம்.

 பொதுவாக பெண்களை வர்ணிக்கும் போது தாமரை போன்ற கண்கள், பாற்கடலில் உலாவும் மீன் போன்ற விழிகள், மேருவைப் போன்ற தனங்கள் மயிலை ஒத்த அழகு என்று கவிஞர்கள் வர்ணிப்பார்கள்.
ஆணால் உவமேயமே இங்கு உவமிக்கப்படும் பொருளாகி நின்று பாடலை அழகூட்டுவது வியப்பாக இருக்கிறதல்லவா?

  கரந்தைப் பெண்களின் சிறப்பை இதற்கும் மேல் சிறப்பிக்க முடியுமா? இப்படி அழகாக சிறப்பித்து பாடியிருப்பவர் பலபட்டடை சொக்கநாதப் புலவர்.

அவரின் கற்பனைத் திறனுக்கு ஒரு வணக்கம் தெரிவிப்போம்! கரந்தைப் பெண்களை வாழ்த்துவோம்!

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நல்லதொரு பாடலுடன் மீண்டும் சந்திப்போம்!
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!                                                                                      

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles