முத்து முத்தான வரிகளால் திரையுலகில்
முத்திரை பதித்தவனே!
சத்தில்லாமல் சவலையாக கிடந்த
தமிழ்த் திரைப்பாடல்களை தரம் உயர்த்தியவனே!
எத்தனையோ கனவுகளோடு இத்திரைக்குவந்து
இத்தனைநாள் துயரத்திலிருந்து விடுபடுகையில்
எங்களை துயரத்தில் ஆழ்த்திச் சென்றாயே!
பாமாலைகள் பல படைத்து தமிழ் திரை உலகிற்கு
மணிமாலை சூட்டி மகிழ்ந்தவனே!
காமாலை கண்டு மரித்து உன்னுடல்
பூமாலை சூடப் படுத்துக் கிடக்கின்றாயே!
ஆனந்தயாழை மீட்டி எங்கள் பிள்ளைகளுக்கெல்லாமோர்
தந்தையின் தாலாட்டை பாடியவனே!- இன்று
உந்தன் பிள்ளைகளை தாலாட்டாமல் தவிக்கவிட்டு சென்றனயே!
காலனுக்கென்ன அவசரமோ உன் கவிதைகளை படிக்க?
காத்திருக்க பொறுமையின்றி கவர்ந்து சென்றான் நாங்கள் தவிக்க!
காற்றிலே கலந்துவிட்ட உன் வரிகள் ஒலிக்கும்போதெல்லாம்
காற்றிலே கலந்துவிட்ட உன்னை நினைத்து
இதயத்திலே வலி பிறக்கும்!
கவிஞர்கள் இறக்கலாம்! கவிதைகள் இறப்பதில்லை!
மறைந்து நின்று கொன்ற மஞ்சள்காமாலை
மறைத்துவிடுமோ உன் புகழை!
காலங்கள் ஓடும்! காவியங்கள் நிற்கும்!
காற்றில் கலந்திட்ட எங்கள் காவியமே!
நீங்காத நினைவுகளுடன் மங்காத புகழொளியுடன்
மனம் நிறைய வலியுடன் உன்னை வழிஅனுப்புகிறோம்!
ஆழ்ந்த இரங்கல்களுடன் சக கவிஞன்!