விழாக்களில், முதல்வர் ஜெயலலிதா பேசினால், அதில் ஒரு குட்டிக்கதை, தவறாமல் இடம்பெற்று விடும். சட்டசபையில் பேசும்போதும், குட்டிக் கதைகளை கூறுவார். கதையின் மூலம், கருத்தை விளக்கினால், அது மக்களை கவரும் என்பதால், இந்த பாணியை, அவர் கடைபிடித்து வருகிறார்.
அவரது பாணியை, அப்படியே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், "பாலோ' பண்ணுகின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையை, அவிழ்த்து விட்டார். அவர் கூறியதாவது:
கதை கேட்டு சிரித்த முதல்வர் :
ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், தமிழகத்தில் இருந்து, டில்லி சென்று கொண்டிருக்கிறது. அதில் சென்ற, ஒரு குரூப், வழியில், ஒரு ஸ்டேஷனில், தவறி இறங்கிவிட்டது. "குரூப் கேப்டன்' நிதானம் இல்லாமல், கூட வந்தவர்களின் தலையை தட்டுகிறார்; நாக்கை துருத்தி, கடிக்கிறார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று, அடுத்த ரயில் எப்போது வரும் என கேட்க, "மாலை 6:00 மணிக்கு வரும்' என்கிறார்.
"அப்படியா' என கேட்டுவிட்டு, பக்கத்தில் ஒரு, "ரவுண்டு' போய் வருகிறார். இப்படியே, ஐந்து ரவுண்டு போகிறது. மீண்டும், ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்க, "இனிமே, இரவு 9:00 மணிக்கு, கூட்ஸ் ரயில் தான் வரும். ஆமாம்... நீங்க, எங்க தான் போகணும்?' என, ஸ்டேஷன் மாஸ்டர் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு, "தண்டவாளத்தை, கடக்க வேண்டும்' என, கேப்டன் கூற, "அட... கொடுமையே...' என, ஸ்டேஷன் மாஸ்டர் தலையில் அடித்துக் கொண்டார். இந்த களேபரத்தில், 29 பேரில், 4 பேரை காணாமல் தேட, அவர்களோ, எக்ஸ்பிரஸ் ரயிலில், புத்திசாலித்தனமாக பயணிப்பது, பின்னர் தெரிந்தது. நாக்கில் வந்ததை எல்லாம், மைக்கில் பேசி வரும் நாக்கு கடி நாராயணன், கோர்ட்டுகளுக்கு நடையாய் நடக்கிறார்.
நிருபர்கள், வாய் வழியே கேள்வி கேட்டால், கை வழியே பதில் சொல்லும் பழக்கத்தை கொண்ட, வைகை கரை வாத்து, முன் ஜாமினுக்கு, முண்டி அடிக்கிறது. என்னதான் முண்டி அடித்தாலும், அது போய் சேரும் இடம், செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது. அவரை நினைக்கும்போது, "உன்னைப் பார்த்து, இந்த உலகம் சிரிக்கிறது; உன்னைப் பார்த்து, உன் நிழலும் வெறுக்கிறது' என்ற எம்.ஜி.ஆர்., பாடல் தான், நினைவுக்கு வருகிறது,என,எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்தை நக்கலடித்துப்பேசி விஜயபாஸ்கர், கதை கூறினார். இந்த கதையை கேட்டு, முதல்வர் ஜெயலலிதா, சிரித்துக்கொண்டே இருந்தார். இதனால், மீதமுள்ள நாட்களிலும், பட்ஜெட் கூட்டத் தொடர்களிலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், பல குட்டிக் கதைகளுடன், சட்டசபைக்கு வருவர் என்பது உறுதியாகிவிட்டது நன்றி: தினமலர்