Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

நான்குதிருடர்கள் கதை (3) பாப்பாமலர்!

$
0
0

    நான்குதிருடர்கள் கதை பாப்பாமலர்!

முக்கால்திருடன் கதை!

முதல் இரு மகன்களின் திருட்டுத்தனத்தை பாராட்டிய பக்காத்திருடன் அன்றிரவு மூன்றாவது மகனான முக்கால் திருடனை அழைத்து உன் தம்பிகள் குந்தள நகரத்தில் திருடி வெற்றி பெற்று சாமார்த்தியத்தை நிருபணம் செய்து விட்டார்கள். நீ உன் சாமார்த்தியத்தை காட்ட இன்றிரவு குந்தள நகரம் சென்று திருடி வர வேண்டும் என்று கூறினான்.
   முக்கால் திருடனும் குந்தள நகரம் சென்று ஊர் நடப்பை விசாரித்தான். அப்போது திருடன் ஒருவன்வியாபாரியையும் தலையாரியையும் ஏமாற்றி திருடி சென்றதையும் இன்றிரவு அவனை மந்திரி தானே முன்னின்று பிடிக்க போவதாகவும் ஊர் மக்கள் பேசுவதை கேட்டான். அத்துடன் மந்திரிக்கு அந்த ஊரில் மீனாள் என்ற தாசியிடம் பழக்கம் உண்டு என்றும் அறிந்து கொண்டான்.
   உடனே அவன் கடைக்கு சென்று விலை உயர்ந்த ஆபரணங்களையும் அணிகலன்களையும் வாங்கி அணிந்து கொண்டு மாறுவேட காரர்கள் உபயோகிக்கும் மெழுகினால் தன் முகத்தோற்றத்தையும் மாற்றி மந்திரி போல மாற்றிக் கொண்டு அந்திப் பொழுது இருட்டியதும் தாசி மீனாள் வீட்டிற்கு சென்றான்.
   பின்னிரவில் வரும் மந்திரி முன்னிரவில் வந்து நிற்பதை கண்டு அதிசயித்த மீனாள் ஏன் வெகு சீக்கிரமே வந்து விட்டீர்கள் என்று வினவினாள். அதற்கு மந்திரி வேடத்தில் இருந்த திருடன், “கண்ணே! நம் நகரில் நேற்று பகலிலும் இரவிலும் ஒரு திருடன் அமர்க்களம் செய்து திருடிக் கொண்டு போன கதையை அறிந்திருப்பாய்! இன்றைய தினம் நான் அவனை பிடிக்க சபதம் செய்துள்ளேன். அவனோ என்னைப் போல வேடமிட்டு இங்கு வந்து உன்னிடம் உள்ள நகைகளை கவர்ந்து போக திட்டமிட்டுள்ளதாக ஒற்றர்கள் மூலம் தகவல் கிடைத்தது. வழக்கமாக நான் வரும் நேரத்தில் அவன் வரக்கூடும். அதனால் முன்னதாகவே நான் இங்கு வந்து அவனை பிடிக்க திட்டமிட்டுள்ளேன். ஒரு கனத்த தடியும் கயிறும் கொண்டுவா! திருடன் வந்ததும் கட்டி போட்டு உதைக்க வேண்டும் என்று கூறினான்.
   தாசியும் அவன் பேச்சை நம்பி அவன் கேட்ட கயிறையும் தடியையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவனோடு பேசிக் கொண்டு இருந்தாள். அதே சமயம் மந்திரி காவல் ஏற்பாடுகளை கவனித்து விட்டு எல்லாம் பலமாய் இருக்கிறது எப்படியும் திருடனைபிடித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு தாசி வீட்டுக்கு சென்று வர நேரம் ஆவதை உணர்ந்து வீரர்களிடம் காத்திருங்கள் இன்னும் ஒரு நாழிகையில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு தாசி வீட்டிற்கு சென்று கதவைத்தட்டினான். கதவு ஓசைப்படாமல் திறந்து மந்திரி  உள்ளே நுழைந்ததும் முக்கால் திருடன் தடியால் மந்திரியைத்தாக்கி வாயில் துணி அடைத்து கயிறால் கட்டினான். பின்னர் அவனை மயக்கமுற செய்து இழுத்து கொண்டு சென்று முன் வாசல் பந்தல் காலிலே கட்டி வைத்தான். பின் மந்திரியின் ஆபரணங்களை அவிழ்த்துக்கொண்டு மந்திரியின் இடுப்பில் ஒரு கந்தலாடையை மட்டும் கட்டிவிட்டு மீனாளிடம் வந்தான்.
   அன்பே மீனாள்! நான் திருடனை பிடித்துவிட்டேன்! அவன் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தும் விட்டேன்! விடிந்ததும் எனக்கு மன்னர் பெரிய பரிசு கொடுப்பார். உன் ஆபரணங்கள் அனைத்தும் பழையதாக சிறியதாக உள்ளது. அவற்றை கழற்றிக் கொடு! மன்னர் தரும் பரிசு பணத்தில் அவற்றை மாற்றி புதிய ஆபரணங்கள் வாங்கித்தருகிறேன் என்று ஆசையாக கூறினான்.
    தாசியும் அவன் பேச்சில் மயங்கி  நகைகளை கழற்றிக் கொடுத்தாள். அதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அவள் உறங்கும் வரை காத்திருந்த திருடன். மீனாள் உறங்கியதும் சத்தம் போடாமல் தன் ஊர் போய் சேர்ந்தான்.
    விடிந்ததும் தாசி வீட்டில் மந்திரி அரைகுறை ஆடையுடன் கட்டிக்கிடப்பதையும் தாசி நகைகளை பறிகொடுத்து நிற்பதையும் கேள்விப்பட்டு ஊரே கைகொட்டி சிரித்தது. அந்த திருடன் ஜகஜால கில்லாடியாக இருப்பான் போலிருக்கிறதே! அவனை யாரால் பிடிக்க முடியும் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.
   திருடனை மக்கள் புகழ்வது மன்னனுக்கு சகிக்கவில்லை! போயும் போயும் ஒரு திருடனைப்போய் மக்கள் கொண்டாடுகிறார்களே! எல்லாம் மதிகெட்ட மந்திரியால்தான் வந்தது! இன்றிரவு நானே அந்த திருடனை பிடிக்கிறேன் பார்! என்று சபதம் செய்தான்.
   முக்கால் திருடன் தந்தை பக்காத்திருடனிடம் தான் திருடியவற்றை காண்பித்து எப்படி திருடினேன் என்று விவரித்தான். அவனைபாராட்டிய பக்காத்திருடன் பலேபலே! மந்திரியை ஏமாற்றி உன் திறமையை நிரூபித்துவிட்டாய்! என்று புகழ்ந்தான்.
                                             வளரும்(3)

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles