Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்

$
0
0

பார்வை இழந்த ஒருவர், யாரும் செய்யாத உலகச் சாதனையை செய்துவிட்டு அந்தச் சாதனையைக்கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார்.அப்படிப்பட்ட சாதனையாளர்தான் கிரியோன் கார்த்திக்.

தற்போது தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருக்கும் "கருட பார்வை' என்ற திகில் படத்தின் இசை அமைப்பாளர்தான் இந்த கிரியோன் கார்த்திக்.

ஒரு பாட்டை "கம்போஸ்' செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு.,ஆனால் மவுனமாக திரையில் ஒடும் திரைப்படத்திற்கு "ரீரிக்கார்டிங்' எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய அவர்களில் யாரும் இல்லை.

காரணம் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும், மழை பெய்யும்,கார் ஒடும்,கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார்,பறவைகள் சத்தமிடும்,வாகனங்கள் அலறும் இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து பிறகே, ரீரிக்கார்டிங் செய்ய முடியும்.

அதிலும் திகில் படம் என்றால் இசைதான் பிரதானம்,ரசிகளை நாற்காலியின் நுனியில் உட்காரவைப்பதும்,பிடரியில் வியர்வையை சுரக்கவைப்பதும்,மயிர்கால்களை நிற்கச்செய்வதும்,சீலிர் என உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும்,மனதிற்குள் அடுத்து என்ன,அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்கவைப்பதும்,படபடவென கண் இமைகளை துடிக்கவைப்பதும் திகில் பட இசையின் இலக்கணமாகும்.

இந்த இலக்கணத்தை வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.

படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இதை எப்படி செய்தேன்,ஏன் செய்தேன் என்பதை அருகிலிருந்து அவர் விளக்கம் கொடுத்த போது படத்தின் இசையில் இன்னும் சுவராசியம் கூடியது.

இதெல்லாம் எப்படி சாத்தியம் என்ற உங்களது கேள்விக்கு பதில் தருவதற்கு முன் கொஞ்சம் கார்த்திக்கின் வலி மிகுந்த ஆரம்பகால வாழ்க்கையை பார்த்துவிடுவோம்.

கார்த்திக்கின் தந்தை பொன்ராம் ஒரு ராணுவ வீரர்.இந்தியா -பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர்,அதன் பிறகு கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார்.நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக்கொன்றனர்.இந்த சம்பவத்தால் நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாயார் சாவித்திரிதான்.

வெளி உலகம் தெரியாமல் இருந்தவர் கணவரின் இழப்பீட்டு தொகையைக்கொண்டு பிள்ளைகளை படிக்கவைத்தார்.

மூன்று வயதான போது இடது கண்ணில் ஒரு சின்ன பிரச்னைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்,பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால் இடது கண் பார்வையை இழந்தார்.,பிறகு மூத்த டாக்டர்கள் பார்த்துவிட்டு வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிச்சி தகவலையும் தந்தார்கள்.

யாராவது கன்னத்திலோ,தலையிலோ அடித்தால் வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.

இது நடந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்துவிட்டது.

அடித்த ஒரு மணி நேரத்தில் வலது கண் பார்வையும் போய்விட எதிரே இருந்தவை மட்டுமல்ல ,எதிர்காலமே இருண்டதைப் போல இவரது குடும்பத்தார் உணர்ந்தனர்.

இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில் இருந்த பணத்தையும் இழந்ததுதான் கண்ட பலனாக இருந்தது.

வறுமையும்,வாழ்க்கையும் துரத்த சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக்.

இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்து எடுத்தார்.,எதிலும் வேகத்துடனும்,விவேகத்துடனும் செயல்படும் இவரது திறமையால் சிறந்த பியானோ கலைஞரானார்., 1800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலவதாக வந்தார்.

இசை,இசை என்று எந்த நேரமும் இசைக்காக அலைந்தார்,நல்ல பாடல்கை பல ராகங்களில் இசைப்பதற்காக,தேடித்தேடி நிறைய கற்றார், ரத்ததானம் செய்தும், இசைக்கருவிகளை அடகு வைத்தும் கூட இசை பயின்றிருக்கிறார்.,சாப்பாடு இல்லாமல் கூட இருக்கமுடியும் ஆனால் இசை இல்லாமல் இவரால் இருக்கமுடியாது.

அதன் பிறகு மதுரையில் நல்லதொரு மியூசிக் ஸ்டூடியோவை அமைத்து நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வருகிறார்.சென்னையில் இவருக்கு பெரிதும்உதவுபவர் உறவினர் தில்லைநாயகன்.

இந்த நிலையில்தான் சினிமாவில் ரீரிக்கார்டிங் செய்வது என்பது நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற,ஏன் முடியாது நம்மால் முடியும், அதுவும் நானே இதை நிகழ்த்திக்காட்டுவேன் என்று சபதமும் செய்தார்.

சபதத்தின்படி ,முழுக்க மாற்றுத்திறனாளிகளால்,மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "மா' படத்திற்கு இசை அமைத்தார், பலராலும் பாராட்டப்பெற்றது.

என்னைப்பற்றி கேள்விப்பட்ட "கருட பார்வை' இயக்குனர் விவேகானந்தன்,"" நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன் இதற்கு இசை அமைக்கமுடியுமா?'' என்று கேட்டார்,அவருக்கு சில "நோட்ஸ்' போட்டுக்காண்பித்தேன்,நம்பிக்கையுடன் என்னை இசைஅமைப்பாளராக்கினார்.

சுமார் 48 நாட்கள் இரவு பகலாக உட்கார்ந்து படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்தேன்..,நான் ஒரு பார்வையுள்ள உதவியாளரை மட்டும் வைத்துக்கொண்டேன்,நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்துக்கொண்டு ,படத்தோடு எனது ரீரிக்கார்டிங் இசையை கலவை செய்தேன்,இயக்கனர் பார்த்துவிட்டு பாராட்டினார்,இப்போது வெகுஜனங்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள்.

சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், சென்றடைய வாழ்த்துங்கள், வளர்கிறேன் என்று கூறி விடைபெற்ற கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.                                                                                    

எல்.முருகராஜ்.                                                                                                                                                            
நன்றி: தினமலர்                                                                                                                                      


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles