Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

உலகநாயகனின் திருமண நாள்! பங்குனி உத்திரம்!

$
0
0

பார்வதி பரமேஸ்வர திருமண நாள்! பங்குனி உத்திரம்.
தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி அடுத்த பிறவியில் மலையரசன் இமயவான் மகளாக பார்வதியாக அவதரித்தாள். சிவனை நினைத்து கடும் தவம் இருந்தாள். அப்போது சிவன் தட்சணா மூர்த்தியாக
யோக நிலையில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர்.
      அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறினர். சிவன் தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு சூரர்களை வதம் செய்ய குமரன் ஒருவனை படைப்பதாகக் கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன் பங்குனி உத்திர தினத்தன்று காட்சியளித்து பார்வதியை திருமணம் செய்து  கொண்டார்.

   இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை திருமண விரதம் என்று அழைப்பர். இந்த நாளில் தம்பதியர் விரதம் இருந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்ட நாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணம் ஆகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
    மஹாலஷ்மி இந்த நாளில் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தார்.
   பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தை பெற்றார்.
   தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன் மீண்டும் அவளுடன் சேர்ந்த தினம் பங்குனி உத்திரம்.
  சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி முதலான இருபத்தேழு நட்சத்திரங்களை மனைவியாக அடைந்த தினமும் இதுவே.
  மஹிஷி என்னும் அரக்கியை வதம் செய்ய சிவனும் திருமாலும் இணைந்து பெற்ற பிள்ளையான சாஸ்தாவின் அவதார நாளும் பங்குனி உத்திரமே. காட்டுக்குள் வசித்ததால் சாஸ்தா என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. தென் மாவட்டங்களில் நிறைய சாஸ்தா கோயில்கள் உண்டு. பங்குனி உத்திரம் இந்த ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.


    பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினமே பங்குனி உத்திரம். சந்திரனுக்கு முக்கியத்துவம் உள்ள விரதம் இந்த நாள்.
   சாஸ்தாவின் அவதாரமான ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிமலையில் பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
   பெரம்பலூர் அருகில் உள்ள செட்டிக்குளம் என்னும் திருத்தலத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தில் ஐந்து, ஏழு, மற்றும் பங்குனி உத்திர நாளில் மூன்று முறை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமணத்தடை உள்ளோர் இந்த திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

  பொன்னேரி அருகில் உள்ள திருப்பாலைவனம் தலத்தில் எழுந்தருளியுள்ள லோகாம்பிகை சமேத ஸ்ரீபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று பங்குனி உத்திர நாளன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்று தெப்ப உற்சவம் நடைபெறும்.
    ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயத்திலும் பங்குனி உத்திரத்தன்று விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
   ஒரு குட்டிக்கதை:

       ஜைகீஷவ்யர் என்ற முனிவர் ஆசைகளை துறந்தவர். சிவபெருமானிடம் பக்தி கொண்டவர். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக கருதுபவர். சிவபெருமான் அவருக்கு தன்னை எந்த நேரமும் வந்து தரிசித்து போகும் வரத்தை அவருக்கு தந்திருந்தார்.
      ஒருசமயம் சிவனும் பார்வதியும் பொருள் என்றால் என்ன? என விவாதித்து கொண்டிருந்தனர். சிவன், இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருளிலும் நானே இருக்கிறேன். நான் அசைந்தால் உலகம் அசையும். நான் நின்றால் உலகம் நிற்கும். இவ்வுலகமே நான் என்று கூற பார்வதி கோபித்துக் கொண்டாள்.

     சிவனாகிய நீங்கள் ஜீவன் என்றால் சக்தியாகிய எனக்கு வேலை இல்லையா? நான் பொருள் இல்லையா? என்று கேட்டாள்.  சிவன் என்னுள் அடங்கிய பொருள்களுல் நீயும் ஒருத்தி என்று கூறினார். அப்போது ஒரு குரல் கேட்டது சிவன் சொல்வதே உண்மைதேவி! சக்தி என்பது சிவம் என்னும் பொருளில் அடங்கி இருக்கும் ஒரு வஸ்து. சிவத்தினாலேயே சக்திக்கு மதிப்பு. உயிரின்றி சக்தி செயல்படாது. என்ற குரல் கேட்டது.
   பார்வதியால் குரல் யாருடையது என்று அறிய முடியவில்லை! சிவனிடம் நம்மிடையே வந்த குரல் யாருடையது?  என்று கோபத்துடன் கேட்டார். சிவனும் தேவி! கோபம் கொள்ளாதே! அவன் என் பக்தன். ஆசையை துறந்தவன். சிறந்த தபஸ்வி! அவர் பெயர் ஜைகீஷ்வ்யர்! பதிலைக் கூறி விட்டு அவர் கிளம்பி விட்டார் என்றார்.
   அப்படியா! ஆசையை துறந்தவனா அந்த ரிஷி! வாருங்கள் அவரை சோதிப்போம்! என்று இருவரும் கிளம்பி பூலோகம் வந்தனர். அப்போது முனியவர் எளிய ஆடையுடன் இருந்தார். இன்னொரு ஆடை கந்தலாக இருந்தது. அதை தைக்க ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டிருந்தார் முனிவர்.
  அவர் முன் காட்சி தந்த சிவபெருமான் முனிவரே! உமக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

  ஐயனே நான் மிகுந்த திருப்தியுடன் இருக்கிறேன்! எதையெல்லாம் எனக்கு தேவையென நினைக்கிறேனோ அதையெல்லாம் தந்துவிட்டீர்! வேறு எதுவும் தேவை இல்லை என்றார் முனிவர்.
  தபஸ்வியே! நீ வேறு நான் வேறு அல்ல! நீ தயங்காமல் என்ன வேண்டுமானாலும்  கேள்! என்று ஆசையைத்தூண்டினார் சிவன். முனிவர் மயங்க வில்லை!
  சரி. இந்த ஊசியில்  நூலை கோர்த்து தந்துவிட்டு கிளம்புங்கள்! என்றார்.
ஆசையே இல்லாத அவரது திட மனதை பார்த்து வியந்த பார்வதி தேவி!, முனிவரே!, தங்களுக்கு எந்தவித ஆசையும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உங்களைப் போன்றவர்கள் தெய்வங்களுக்கும் அறிவுரை கூற தகுதியானவர்கள்தான்! சிவத்துக்குள் அடங்கிய பொருளே சக்தி என்பதை ஒத்துக் கொள்கிறேன்! என்று அவரை வாழ்த்தி விட்டு கிளம்பினார்.

பங்குனி உத்திர நாளில் சிவாலயங்களுக்கு சென்று வழிப்பட்டு ஆண்டவன் அருளை பெறுவோமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles