கண்ணதாசனுக்கு பிடித்த மதம்! கதம்ப சோறு!
உமாசங்கரின் பிதற்றல்கள்!
ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் இப்போது கிறித்துவ மதத்தில் சேர்ந்து விட்டாராம். மத போதகர் ஆகி பிரச்சாரம் செய்கிறார். அவரின் பிதற்றல்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது. ஏசு வந்து உத்தரகண்ட்டில் இப்படி வெள்ளம் வரும்! ஆயிரக் கணக்கானோர் இறப்பார்கள் என்று சொன்னாராம். மக்கள் மதிக்காமையால்தான் இப்படி உயிரை இழக்க வேண்டியது ஆகிவிட்டதாம். இப்படி ஒரு பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை எங்கோ உதிர்த்துவிட நமது பேஸ் புக் போராளிகள் கண்ணில் அந்த நியுஸ் பட்டு ஆளாளுக்கு வறுத்து எடுத்துவிட்டார்கள். இப்போது என் பங்கு. எந்த ஒரு மதத்தை பின்பற்றுவதும் அவர்களுடைய தனி விருப்பம். இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்பது எதுவும் இல்லை! சொல்லப்போனால் எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. இடையில் சிலர் தனது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக கருத்துக்களை திரித்து பரப்புவதால்தான் மதச்சண்டைகளே ஏற்படுகின்றன. இதே போன்று மதம் மாறும் ஆசாமிகள் இப்படி தாய் மதத்தை குறை கூறி பிதற்றுவதால் வீண் வம்பே விலையாக கிடைக்கும். கிறித்துவ மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட வியாபாரிகள் சிலர் இருக்கின்றனர். அதனால்தான் அந்தந்த மதத்தின் புனிதம் மாசுபடுகிறது. இதை எல்லோரும் புரிந்துகொண்டால் மதச் சண்டைகள் எழாது.
செய்னா நேவல் விலை 72 லட்சம்
இந்தியன் பிரிமியர் லீக்கின் வெற்றியை தொடர்ந்து ஹாக்கி லீக் ஆரம்பித்தது. இப்போது பேட்மிண்டன் லீக் ஆரம்பித்து வீரர்களை ஏலத்தில் விட்டனர். அதில் நமது இந்திய வீராங்கனை செய்னா நேவல் இரண்டாவது அதிகபட்ச விலைக்கு ரூ 72 லட்சத்திற்கு விலை போனார். கிரிக்கெட் போல கோடிகள் கொழிக்காவிட்டாலும் இந்த அளவுக்கு கிரிக்கெட்டை தவிர்த்த ஒரு விளையாட்டு வீராங்கனை ஏலம் போனது ஆறுதலான விசயம். இது மற்ற விளையாட்டுக்களை ஊக்கப்படுத்த உதவும். உலக அளவில் சாதனை படைத்த இந்த வீராங்கணை ஐபி எல் தொடரிலும் சாதிக்க நமது வாழ்த்துக்கள்.
வாலி- மஞ்சுளா மரணங்கள்!
இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு பெரிதும் இழப்பாக இருக்கிறது. லெஜண்ட்ஸ் எனப்படும் பி.பி சீனிவாசில் ஆரம்பித்து டி,எம்.எஸ், இப்போது வாலி என புகழ் பெற்றவர்கள் புகழுலகு எய்திவிட்டார்கள். எம்.ஜி. ஆருக்கு வாலி எழுதிய பாடல்கள் மிகப்பொருத்தமாக அமைந்து அவருக்கு அரசியல் வானில் பிரகாசிக்க பெரிதும் உதவியாக இருந்தது என்றால் மிகையாகாது. எம்.ஜி.ஆர் வாலியை ஆண்டவரே என்றுதான் அழைப்பாராம். தனது 82ம் வயதிலும் சுறுசுறுப்பாக இருந்த கவிஞர் வாலி வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவரப்போகும் படத்தில் தனது கடைசிப்பாடலை எழுதியுள்ளார். நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாட்டெழுதி அசத்திய வாலி இப்போது தனது பாடல்களை வானுலகில் எழுத கிளம்பிவிட்டார்.
எம்.ஜி,ஆரின் ரிக்சாக் காரன் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆன மஞ்சுளா, சிவாஜி உட்பட பல நடிகர்களுடன் நடித்தவர். விஜயகுமாரை மணந்து கொண்ட அவர் தனது மகள்கள், மகனையும் நடிக்க வைத்தார். நட்சத்திர குடும்பமாய் பல நடிகர்களுக்கு நட்புக் குடும்பமாய் திகழ்ந்தது மஞ்சுளா விஜயகுமார் குடும்பம். கட்டிலில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார். இது அந்த குடும்பத்திற்கு பெரிய இழப்புதான். ஆழ்ந்த இரங்கல்கள்!
சில வீட்டுக் குறிப்புக்கள்!
தரையில் ஈ எறும்பு வந்தால் உப்பு கலந்த நீரை தெளித்து துடைத்தால் இவை அண்டாது.
வீட்டில் குழந்தைகளுக்கு ஓட்ஸ் கஞ்சி போடும்போது அதில் துளி எடுத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவடையும்.
நரைமுடியை தவிர்க்க டை உபயோகிப்பவர்கள் பச்சைத்தேயிலையை தண்ணீரில் போட்டு சூடாக்கி அதோடு சியக்காய் கலந்து குளித்தால் தலைமுடி இயற்கையான பளபளப்புடன் இருக்கும்.
தலையணையின்றி கைகளை மடித்துக் கொண்டு தலைக்கு வைத்து சமதரையில் படுத்து ஓய்வு எடுப்பதால் இடுப்புவலி முதுகு வலி குறையும் சுறுசுறுப்பு ஏற்படும்.
காலை உணவுடன் மாவுச்சத்து நிறைந்த பழமோ பழச்சாறோ சாப்பிடுங்கள் இது நம் அன்றைய தினத்தை சுறுசுறுப்பாகவும் நம் உடலை சீராக வைக்கவும் உதவுகிறது.
நான்கு வெற்றிலையுடன் மூன்று மிளகு சேர்த்து மென்று விழுங்கினால் ஜலதோஷம் நீங்கும்.
கண்ணதாசனுக்கு பிடித்த மதம்!
சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவிஞர் கண்ணதாசனை அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்து வெகுநேரம் ஆகியும் கவிஞர் அவைக்கு வந்தபாடில்லை.
கூட்டம் பொறுமை இழந்து சலசலத்தது. நிகழ்ச்சி அமைப்பாளர் பாடு சங்கடமாயிற்று. அந்நிலையில் கவிஞர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார். “சிலருக்கு இந்துமதம் பிடிக்கும்,சிலருக்கு கிறிஸ்துவமதம் பிடிக்கும், எனக்கு தாமதம் பிடிக்கும் என்று சொல்லி நிறுத்தி அவையோரை பார்த்தார்.
சலசலத்த கூட்டம் அவரது வார்த்தை ஜாலத்தில் மயங்கி ரசித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. இப்படி சமயோசிதமாக பேசுவோரால் எந்த சமயத்திலும் தாக்குப்பிடிக்கமுடியும் அல்லவா?
பிடித்த வாசகம்!
முன்பெல்லாம் நிறைய நாவல்கள் வாசிப்பேன். பெரும்பாலும் க்ரைம் நாவல்கள், சுபா, சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்னிகாநாசர் என்று படித்து பொழுதை ஓட்டுவேன். இந்த நாவல்கள் எல்லாம் இப்போது காயலான் கடைக்கு போய் விட்டது. சுபா எழுதிய முரட்டுக் குதிரை என்ற நாவலில் வரும் வாசகம் என் மனதை அப்படியே பிடித்துக் கொண்டது. இதை என் கையெழுத்துப்பத்திரிக்கையிலும் எழுதி இருந்தேன். இப்போது உங்கள் பார்வைக்கு!
“ எந்த தருணத்தை கம்பளிப் பூச்சி உலகமே முடிந்துவிட்டதாக பார்க்கிறதோ அந்த தருணத்தை பட்டாம்பூச்சியின் ஆரம்பமாக பார்க்கக் கற்றுக் கொள்”
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!