எனது முதல் கணிணி அனுபவம்! தொடர்பதிவு!
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பார்கள்! நம்ம ப்ளாக்கே இப்ப சொந்த கதை சோக கதையிலேதான் ஓடிக்கிட்டு இருக்க அட இது ஓவராயிடுச்சே என்று கொஞ்சம் மாத்தி யோசிச்சிகிட்டு இருக்கற வேளையில அண்ணன் குட்டன் திடீர்னு இந்த தொடர் பதிவுல என்னை கோர்த்து விட்டுட்டாரு!
சரி! ஒரு காலத்துல இப்படி அழைப்புவருமான்னு ஏங்கி கிட்டு இருந்தோம்! இப்ப அழைப்பு வரும்போது தவிர்க்கலாமா? வேண்டாம்னுட்டுதான் இந்த பதிவு! இந்த பதிவுல வர்ற விசயங்களை ஏற்கனவே நான் ஒரு தனிபதிவுல சொல்லியிருக்கேன்! அதனால அந்த விசயத்தை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா இப்ப சொல்லப் போறேன்.
அது 1994ம் வருசம் நான் டிகிரி முதல் வருசம் கரஸ்ல முடிச்சிகிட்டு (ரெண்டு அரியர் வச்சிருந்தேன் அப்பத்தானே டிகிரிபடிக்கிறதுக்கு அழகு) வெட்டியா ஊரை சுத்திக்கிட்டு இருந்தேன். அப்பதான் எங்க அக்காவை (என் பெரியம்மா மகள்) சந்திச்சேன். என்ன பண்ணிகிட்டு இருக்கே? என்றார்கள். நான் நம்ம வெட்டி ஆபிசர் வேலையை சொன்னேன். அப்ப கேட்டுகிட்டு போயிட்டாங்க ஒரு வாரம் கழிச்சு பொன்னேரியில நாங்க ஒரு கடையில பேப்பர் வாங்குவோம். அந்த பேப்பர் கடை பாய் மூலம் ஒரு தகவல் சொல்லி அனுப்பிச்சாங்க!
அது லெட்டர்ல கொடுத்தாங்க அதுல ஒரு அட்ரஸ் கொடுத்து இங்க வந்து என்னை பாருன்னு இருந்தது. அது வரைக்கும் பொன்னேரி பஜாரை தவிர வேற எடம் எனக்கு தெரியாது. இது டி.வி புரம் அட்ரஸ். எப்படியோ என்னோட சைக்கிள்ள சுத்தி அந்த அட்ரஸை கண்டுபிடிக்கிறதுக்குள்ள மத்தியான வெயில்ல எனக்கு நாக்குத் தள்ளிருச்சு!
ஆனா அந்த அட்ரஸை கண்டுபிடிச்சு வீட்டு கதவை தட்டினதும் அவங்க ரொம்ப நல்லவங்க! என்னோட நிலையை பார்த்து சேரெல்லாம் போட்டு உக்காரவைச்சு தண்ணியெல்லாம் கொடுத்து உபசரிச்சாங்க! அவங்கதான் என் அக்காவோட ப்ரெண்ட் ரமா தேவி. அப்பதான் சொன்னாங்க பொன்னேரியில ஒரு கம்ப்யூட்டர் செண்டர் இருக்கு! அதுலதான் என்னோட அண்ணன் படிச்சான். இந்த வருசம் நான் படிக்க போறேன்! உனக்கும் ஒரு சீட் ( அது என்னமோ எம்.எல்.ஏ சீட்டு போல) உங்க அக்கா ஏற்பாடு பண்ணியிருக்காங்க! என்ன வந்து படிக்கிறியான்னு கேட்டாங்க!
நானும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டேன்! எனக்கு அப்படி ஒண்ணும் கம்ப்யூட்டர் மேல பெரிசா ஆர்வம் ஒண்ணும் கிடையாது. எங்க அக்காவை பார்க்கலாம் பேசலாம்னு ஒரு எண்ணத்துல அப்படி தலையாட்டிட்டேன்! ஏன்னா அந்த அக்கா என் அப்பாவோட முதல் தாரத்து பொண்ணு, அவங்க அம்மா இறந்ததும்தான் எங்க அம்மாவை கட்டிக்கிட்டாரு எங்கப்பா! குடும்ப சண்டையில அவங்க எங்க கூட இல்லாம தாய் வீட்டு பாட்டிகிட்டவே வளர்ந்தாங்க! சின்ன வயசிலேயே அவங்கள பத்தி அப்பா சொல்லியிருந்ததாலே அவங்க மேல எனக்கு பாசம் அதிகம்! அதனாலே அவங்க கூட நல்லா பழக முடியும்னு அந்த கோர்ஸில சேர ஒத்துகிட்டேன்.
இதுக்கு முன்னாடி நான் கம்ப்யூட்டர பார்த்தது கூட கிடையாது. எங்க சோழவரம் கவர்மெண்ட் ஸ்கூல்ல கம்ப்யூட்டர் ரூமுன்னு ஒண்ணு இருக்கும் அதுல நாலைஞ்சு கம்ப்யூட்டர் இருக்கறதா பசங்க சொல்லுவாங்க! எங்க மேத்ஸ் சார் சம்பத் சார் மட்டும் அந்த ரூமுக்குள்ள அடிக்கடி போய் வருவாரு! எங்களை யாரும் உள்ளே விட்டதே இல்லை! அதனாலே அவ்வளவோ பெரிய கம்ப்யூட்டர் கோர்ஸ் நாம படிக்க போறேன்னுதும் எனக்கு பெருமை பிடிபடலை!
அப்ப வறுமையின் பிடியில் இருந்து எங்க குடும்பம் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வர்ற காலமா இருந்துச்சு! பத்தாயிரம் ரூபா கோர்ஸ் பீஸ் ஒருவருசம் படிப்பு! அதுல 3500 ரூபா ட்ரைசெம் போக 6500 ரூபா மூணு தவணையில கட்டணும்னு சொன்னாங்க! அப்பட் ஒரு தவணைக்கு இரண்டாயிரம் ரூபாவாது வேணும் என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப எங்க தாத்தா என் பேர்ல போட்டிருந்த பிக்சட் டெபாசிட் ஒண்ணுமுடிஞ்சது. அதை எடுத்து அப்படியே எம் பேர்ல சேவிங்ஸ் அக்கவுண்ட் போட்டு அதுல 2000 ரூபா எடுத்துகிட்டு போய் கோர்ஸில சேர்ந்தேன்.
அந்த இன்ஸ்டியூட் பேரு பாரத் பிரில்லியண்ட் கம்ப்யூட்டர் செண்டர்! சுருக்கமா பிபிசின்னு சொல்லுவோம்! நாம என்னமோ பிபிசியிலே ஒர்க் பண்றா மாதிரி ஒரு நினைப்புதான்! மொத்தத்துல நாலு கம்ப்யூட்டர் அங்க இருந்தது. ஒண்ணு மட்டும் கலர் மத்த மூணும் ப்ளாக் அண்ட் ஒயிட்.
இந்த ஒருவருசம் கோர்ஸ்ல டாஸ், பேசிக், டி பேஸ், ஃபாக்ஸ் ப்ரோ, வேர்ட்ஸ் ஸ்டார், கோபால், என்று ஒரு ஏழெட்டு படிப்பு சொல்லித்தருவதாக கூறினார்கள். முதல் நாள் வகுப்புக்கு சென்ற போது ஒரு அக்கா எங்களோடு வகுப்பில் அமர்ந்து இருந்தது. புடவை எல்லாம் கட்டி குஷ்பு மாதிரி ரேஞ்சில் அந்த அக்கா இருந்ததை பார்த்து நாங்க அவங்கதான் எங்க மிஸ்ஸின்னு நினைச்சுட்டோம்! அப்புறம்தான் தெரிஞ்சது அவங்களும் எங்க கூட படிக்க வந்தவங்கன்னு! அவங்க கொண்டு வந்த தயிர் சாதத்தை என் கூட படிச்ச வெங்கட் குமார் அபேஸ் செய்து ஓரு கட்டு கட்டி முடித்தான்.
முதல் நாள் அறிமுகத்தோட முடிஞ்சது. அடுத்த நாள் கம்ப்யூட்டர் எப்படி செயல் படுதுன்னு கிளாஸ் எடுத்தாங்க! கிளாஸ் எடுக்க பவானின்னு ஒரு மேடம் வந்தாங்க! இஞ்சினியரிங் முடிச்சுட்டு வந்து சும்மா தஸ் புஸ்ஸுன்னு இங்கிலீஷ்ல பேசவும் ஒண்ணுமே புரியலை! கிளாஸ் முடிஞ்சதும் பார்த்து மேடம் நீங்க பீட்டர் உட்டா நாங்க கிளாசுக்கு ஜூட் விட்டுடுவோம்னு சொன்னோம். அவங்களும் சிரிச்சுட்டு எனக்கு தெரிஞ்ச தமிள்ல சொல்றேன்னுட்டாங்க! நம்ம நடிகைங்க பேசற தமிழ்ல அவங்க பேசினாலும் அந்த தமிழ் எங்களுக்கு இனிக்கத்தான் செஞ்சது. அவங்க தாய்மொழி தெலுங்கு!
ஒரு மூணு மாசம் எங்களை அந்த கம்ப்யூட்டர் பக்கம் நெருங்கவே விடவில்லை! டாஸ், நம்பர்சிஸ்டம், ஃப்ளோ சார்ட் என்று வகுப்பறையிலேயே கடத்தி விட்டு மூணுமாசம் கழிஞ்சதும் சிஸ்டம் முன்னாடி கொண்டு போய் உட்கார வைச்சாங்க! ஒரு சிஸ்டத்துக்கு நாலு பேரு! ஒரு ப்ளாப்பியை கொடுத்து அதை போட்டு ஆன் பண்ணி வொர்க் பண்ணனும் ஒரு மணி நேரம்தான் ஒரு குருப்புக்கு! அடிக்கடி சிஸ்டங்கள் பழுதாகி விடும்! வைரஸ் வந்துவிட்டது என்பார்கள்! அதெப்படி கம்ப்யூட்டருக்கு வைரஸ் வரும்? என்று யோசிப்பேன்! இந்த வைரஸை எப்படி கிளீன் பண்ணுவீங்க? என்றால் ஆண்ட்டி வைரஸ் போட்டு! என்பார்கள். ஒன்றுமே புரியாது.
இந்த நாலு கம்ப்யூட்டர்ல கலர் கம்ப்யூட்டர்ல உட்காறதுக்கு ஒரு அடிதடியே நடக்கும்! நான் ரொம்பவே கூச்ச சுபாவமா அப்ப இருந்ததாலே நீங்க வொர்க் பண்ணுங்க நான் பாத்து கத்துக்கறேன்! என்று விட்டுக் கொடுத்துவிடுவேன்! அதுக்கப்புறம் என் ப்ரெண்ட் கணேசன் தான் வற்புறுத்தி சிஸ்டத்தில் உட்கார வைத்தான். அதை உயிர்பித்து டாஸ் கமாண்ட் சில செய்து அது திரையில் ஒர்க் அவுட் ஆனபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
அதனாலே! நான் சிஸ்டத்துல அந்த ஒரு வருசத்துல மொத்தமா ஒரு நாள் உட்காந்திருந்தாவே அதிகம்! ஒருவருசம் படிச்சும் ஒண்ணுமே கத்துக்காமே சர்டிபிகேட் வாங்கிட்டோம்! ஆனா சும்மா சொல்லக்கூடாது! வாங்கின காசுக்கு வஞ்சனை இல்லாம ஒண்ணுக்கு ரெண்டாவே கொடுத்தாங்க சர்டிபிகேட்!
95ம் வருசம் கோர்ஸ் முடிஞ்சப்புறம் திரும்பவும் நான் கம்ப்யூட்டரை தொடவே இல்லை! அதுக்கப்புறம் தான்2005ல திரும்பவும் ஒரு கோர்ஸ் சேர்ந்தேன்! இதுவும் வெட்டியாத்தான் முடிஞ்சது! ஆனா கம்ப்யூட்டர் பத்தின ஒரு பயத்தை போக்கியது! அதற்கப்புறம் 2007ல கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன்! அப்ப இருபத்தையாயிரம் ரூபாய் ஆனது. இன்ஸ்டால் செய்து விட்டு சென்று விட்டார்கள். மறுநாள் ஆன் செய்தால் ஒர்க் ஆகவில்லை! ஏதோ ப்ராப்ளம்! திரும்பவும் இண்ஸ்டால் செய்தவருக்கு போன் செய்து திரும்ப இண்ஸ்டால் செய்தோம்! ஒரு வாரம் ஆவதற்குள் திரும்பவும் பழுது!
எனக்கு ரொம்பவும் வருத்தமாகிவிட்டது! அதற்கப்புறம் வேறு சிஸ்டம் கொடுத்து சென்றார் விற்பனையாளர்! அதன் பின் தான் நான் கம்ப்யூட்டரே பழக ஆரம்பித்தேன்! இதற்கு நான் கொடுத்த விலை கொஞ்சம் அதிகம்தான்! முதலில் ஒரு பத்தாயிரம்! அடுத்து ஒரு பத்தாயிரம்! இப்போது ஒரு இருபத்தி ஐயாயிரம்! என ஏறக்குறைய 50,ஆயிரம் செலவு செய்து இந்த கணிணியை இன்னும் கற்றுவருகிறேன்!
இது போதும்னு நினைக்கறேன்! இன்னும் நிறைய சொன்னா வளர்ந்துகிட்டே போவும்! அதனாலே இதோட வுடறேன் ஜூட்!
இந்த தொடர்பதிவை தொடர வேண்டி நான் கேட்டுக் கொள்ளும் பதிவர்கள்!
சீனிகவிதை சீனி
அம்பாளடியாள்
நாஞ்சில் மனோ
சங்கவி
ஹிஷாலி
நிகழ்காலம் எழில்
ஸ்ஸ்! அப்பாடா ஒரு வழியா கோர்த்து விட்டாச்சு! இனிமே அவங்க பாடு உங்கபாடு! வர்ட்டா!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!