Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 42

$
0
0
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 42


அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்! முதல் முறையாக இந்த தொடரின் 40 வது பகுதி 200 பக்க பார்வைகளை கடந்திருக்கிறது. அதற்கு காரணம் வலைச்சரத்தில் இதை அறிமுகப்படுத்திய நண்பர் மணிமாறனும் வலைச்சரமும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த ஊக்கம் இந்த தொடரை மேலும் செம்மையாக்க உதவும்.

 இந்த வாரம் பார்க்க போவது பகுபதமும் பகாபதமும்!
    அதென்ன? பகுபதம் பகாபதம்? என்று கேட்பது புரிகிறது. முதலில் பதம் என்பதில் ஆரம்பிப்போம்! பதம் என்றால் என்ன? பதம் என்றால் சொல் என்று பொருள்.  பதத்தின் வேறு பெயர்கள் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்! இதெற்கெல்லாம் தமிழ் அகராதியை புரட்ட வேண்டிய அவசியம் இல்லை!  பதம் என்பதின் வேறு பெயர்கள், சொல், மொழி, கிளவி என்பதாகும்.
      ஓர் எழுத்து தனித்து நின்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களுடன் தொடர்ந்து நின்றோ ஒரு பொருளை உணர்த்துமானால் அது சொல்( பதம்) எனப்படும்.
ஒரு பதத்தை பிரிக்கும் போது பகுபதமும் பகாபதமும் கிடைக்கிறது.
  பகுதி, விகுதி, இடைநிலை, என பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும். பகுபதம் என்றால் பிரிக்க இயலும் பதம் என்று பொருள். இந்த பகுபதம் இரண்டு வகைப்படும்.
பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என்பன அவை!


பெயர்ப் பகுபதம் : பொருள், இடம்,காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறு பெயர்களின் அடியாகத் தோன்றுவது பெயர்ப்பகுபதம் எனப்படும்.
உதாரணமாக:
பொன்னன்  = பொன்+ன்+ அன் பொன் என்னும் பொருட்பெயரை அடியாகக் கொண்டு பிறந்தது.
ஊரன்= ஊர்+ அன். ஊர் என்னும் இடப்பெயரை அடியாக கொண்டு பிறந்தது.
ஆதிரையான் = ஆதிரை+ ய்+ ஆன் ஆதிரை என்ற காலப்பெயரை அடியாகக்கொண்டு பிறந்தது.
கண்ணன் = கண்+ண்+ அன்  கண் என்னும் சினைப்பெயர் அடியாகக்கொண்டு பிறந்தது.
கரியன் = கருமை+ அன் கருமை என்னும் பண்புபெயர் அடியாகப் பிறந்தது.
நடிகன் = நடி+க்+ அன் நடித்தல் என்ற தொழிற்பெயர் அடியாகப்பிறந்தது.

வினைப்பகுபதம்: பகுதி, விகுதி, இடைநிலை, முதலியனவாக பகுப்படும் வினைமுற்று வினைபகுபதம் எனப்படும்.
உதாரணம்: செய்தான் என்பது ஓர் வினைமுற்று. செயலை செய்து முடித்தாக சொல்லும் சொல் வினைமுற்று. செய்தான் படித்தான், உறங்கினான், விளையாடினான் இப்படி வினை( செயல் முற்றுபெற்று வரும் வினை) வினைமுற்று ஆகும்.
    செய்தான் என்ற வினைமுற்றில் செய் என்னும் பகுதி தொழிலையும், த் என்ற இடைநிலை இறந்தகாலத்தையும், ஆன் என்ற விகுதி ஆண்பாலையும் குறிக்கிறது.

பகாப்பதம்: பிரித்தால் பொருள் தராத சொல் பகாப்பதம் எனப்படும், பெயர், வினை, இடை, உரி, ஆகியவற்றின் அடிப்படையில் பகாப்பதம் நான்குவகைப்படும்.

பெயர்ப்பகாப்பதம் – மரம், நாய், நீர்
வினைபகாப்பதம் – உண், காண், எடு
இடைப்பகாப்பதம் – தில், மன், பிற
உரிப்பகாப்பதம்  - சால, நனி, கடி, உறு

ஒரு முக்கிய குறிப்பு: இடைச்சொல்லும், உரிச்சொல்லும் பகாப்பதங்களாகவே இருக்கும்

புரிந்ததா? ஏதேனும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அடுத்த வாரம் பகுபத உறுப்புக்களை பார்ப்போம்! இதுவும் போட்டித்தேர்வுகளுக்கு மிகவும் உதவும். அதற்காகவாவது தமிழ் கற்போம்!

இனிக்கும் இலக்கியம்!


சாத்தந்தையார் என்பவர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்றினைக் காண்போம்! சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளியை புகழ்ந்து பாடியுள்ளார் புலவர். இதில் அம்மன்னனின் மற்போர் திறத்தை வீரத்தை புலவர் சிறப்பித்துள்ளார். வாகைத்திணையில் அரசவாகைத் துறையில் இந்த செய்யுள் அமைந்துள்ளது.

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றேனப்
பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

சாறுதலை கொண்டென- விழா ஊரில் தொடங்க,
பெண்ணீற் றுற்றேன- பிள்ளைப்பேறுக்கு தயாராக இருக்கும் மனைவிக்கு உதவப் போகவேண்டும்
பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக்-  சிறுதூறல் மழை பொழிந்து கொண்டிருக்கும் மாலைக்கதிரவன் மறையும் மாலைப் பொழுது.
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது – கட்டிலை பின்னிக்கொண்டிருக்கும் ஒருவனது கை
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ-  கயிறை கட்டிலில் பின்னும் ஒருவகை ஊசி விரையும்
ஊர்க்கொள வந்த பொருநனொடு-  போரில் ஊரை வெல்ல வந்த வீரனோடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே
 பேரொலியுடன் பெருநற்கிள்ளி நிகழ்த்திய போர் விரைவாக முடிந்தது.

விளக்கம்: ஊரில் விழா நடக்கும் சமயம், மனைவியின் பிரசவகாலம் வேறு, அதற்கு உதவியாக இருக்க போக வேண்டும் என்ற நினைவில் கட்டில் பின்னிக்கொண்டிருக்கும் ஒருவனது கை சூரியன் மறையும் வேளையில் மழைத்தூறல்கள் விழ இன்னும் வேகமாக ஊசியைச் செலுத்தும் அது போல ஊரை வென்றுவிட வேண்டும் என்று வந்த மல்லனுடன் சோழன் நற்கிள்ளி நடத்திய போர் பெருத்த ஒலியுடன் மிக வேகமாக நடந்து முடிந்தது. இதன் மூலம் நற்கிள்ளி போரை விரைவாக முடித்தான் என்று கூறுகிறார் புலவர்.

வேகமாக முடித்தலுக்கு புலவர் சொன்ன உவமைகளை ரசியுங்கள்! நிஜத்தில் நடக்க கூடிய ஒன்றை கற்பனையில் சிறப்பாக வடித்துள்ளார்.

அடிக்குறிப்பு: திரு சொக்கனின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று பாடல் விளக்கம் வரிக்கு வரி தரப்பட்டுள்ளது. ஓரளவுக்கு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்! இதே மாதிரி வரிக்கு வரி விளக்கம் கொடுக்க முடியும் செய்யுள்களுக்கு இது தொடரும்.

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள்! நன்றி!







Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!