Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

என்னது… பேயா?

$
0
0
என்னது… பேயா?


சின்னவயது முதலே பேய் பிசாசு காத்து கருப்பு என்று ஏதேதோ சொல்லி வளர்த்து விட்டார்கள் இதோ வளர்ந்து சென்னையில் நவநாகரீக உலகில் வசித்து வந்தாலும் இப்போதும் ராத்திரி என்றால் கொஞ்சம் உதறல்தான் எனக்கு! இங்கே வந்து நான்கைந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. இரவினையும் பகலாக்கும் விளக்குகள். கடலிரைச்சல் ஓய்ந்தாலும் ஓயாத வாகனங்களின் பேரிரைச்சல்! இந்த இரவு பழக்கப்பட்டு போனாலும் கிராமத்து அமைதியான இரவும் எங்கோ ஒலிக்கும் நரிகளின் ஊளையிடும் சத்தமும் நாய்களின் குரைச்சலும் என் நினைவில் நீங்காமல் இருந்ததால் மணி பத்து என்றாலே நான் வெளியே வரமாட்டேன்.
   அப்போது கிராமத்தில் எப்படி என்கிறீர்களா? எங்க கிராமத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் எல்லோரும் கதவை அடைத்துவிடுவார்கள். சாலையெல்லாம் பெரிதாக ஒன்றும் கிடையாது. இரண்டுகிலோமீட்டர் தள்ளித்தான் பேருந்து நிறுத்தம்! அதில் மணிக்கொருமுறை ஏதொ பேருந்து வந்து செல்லும். கடைசி வண்டி இரவு பதினோறு மணிக்கு என்று சொல்வார்கள். அந்த வண்டி பெரும்பாலும் காலியாகத்தான் வரும். யாரும் இரவில் வெளியே செல்லமாட்டார்கள். கம்பெனிக்கு நைட் ஷிப்ட் செல்பவர்கள் கூட இரவில் அங்கேயே தங்கிவிட்டு விடிகாலையில்தான் வந்து சேருவார்கள்.
  என்னடா இம்புட்டு பயம்? என்று கேட்டால் ராத்திரியிலே நம்ம  முனுசாமி உலாத்துமாம்! யாராவது தென்பட்டால் ஒரே அறைதானாம்! ரத்தம் கக்கி செத்துருவாங்களாம்! என்பார்கள். இன்னும் சிலர் பத்து மணி ஆயிட்டாலே பேய்ங்க உலாத்துற பூமிடா நம்மது! நிறைய பேரு ஆயுசு முடியாமலேயே தற்கொலை பண்ணிக்கிட்டாங்க இல்ல நம்ம ஊருல! அவங்க ஆசை நிறைவேறாம செத்ததாலே சுத்தி சுத்தி வருவாங்களாம்! என்பார்கள்.
     நீ பார்த்திருக்கியா? என்றால் அட இதெ வேற பாக்கணுமாக்கும்! எல்லாம் சொன்னக் கேள்விதான்! நீ வேணுமின்னா பாத்து சொல்லு! உனக்கு தைரியம் இருந்தா என்றார்கள்.
  நமக்கு அந்த தைரியம் கிடையாது! அப்படி உருவாகவும் விடவில்லை என் பெற்றோர்கள். அதனால் ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் குளோஸ் ஆகிவிடும். ஊர்க் காவலாளி ஒருத்தன் தான் ராத்திரி பதினோறு மணி வாக்குல கைல தடியையும் டார்ச்சையும் எடுத்துக்கிட்டு ஒரு ரவுண்ட் போய் வருவான். அதையும் நான் பார்த்தது இல்லை!
  சரி விசயத்துக்கு வருவோம்! ஊரை விட்டு வந்து வருசங்கள் ஆகிவிட்டது. இன்று ஊருக்கு வரும்படியும் நாளை குலதெய்வம் கோயிலில் பூஜை செய்யப்போவதாகவும் தகவல் வர மதியமே கிளம்ப முயற்சித்தேன். நம் கஷ்டம் டேமேஜருக்குத் தெரியுமா? என்ன மேன்? பூஜை புனஸ்காரமுன்னு சொல்லிக்கிட்டு! இன்னிக்கு ஹாப்டே எதுக்கு லீவ்! நாளைக்கு ஒரு நாள் மட்டும் எடுத்துக்கோ! இன்னிக்கு நைட் சர்வீஸ்ல போயிக்கோ என்று சொல்லிவிட்டார் பாதகன்.
     சென்னையில் இருந்து ஒரு ஐந்து மணிநேரம் பயணித்தால் ஊர் சென்றுவிடலாம் என்றாலும் நடுராத்திரியில் செல்லவேண்டுமே என்று அப்போதே எனக்குள் நடுக்கம்! இல்ல சார்! நைட் அந்த ஊருக்கு போக முடியாது!
  என்ன மேன்! பஸ் இல்லையா?
இருக்கு சார்?
அப்புறம் என்ன?
இல்ல பேய் உலாத்தும்னு சொல்லுவாங்க! அதனால..
இதைக்கேட்டதும் இடி இடியென சிரித்தார் அவர்! ஸ்டுபிட் மேன்! இன்னும் இதை நீ நம்பறியா? உனக்கு பயமா? என்றார்
அவர் முன் என் பயத்தை காட்டி குறைத்துக்கொள்ள முடியவில்லை!
  அதெல்லாம் இல்லை சார்! அப்புறம் என்ன? இன்னிக்கு நைட் கிளம்பு! அப்புறம் அந்த பேயை பார்த்தியான்னா நான் விசாரிச்சுதா சொல்லு! என்று மீண்டும் இடியென சிரித்தார் ஏதோ நகைச்சுவையை சொல்லிவிட்டது போல!
   கஷ்டம்டா சாமி! என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி நகர்ந்துவிட்டேன்!
  இரவு பதினோறு மணிவாக்கில் அந்த பேருந்து என்னை அங்கே இறக்கிவிட்டது. பஸ்ஸில் என்னைத்தவிர வேறு யாரும் இல்லை! என்னை வித்தியாசமாக பார்த்தபடி கண்டக்டர் விசில் ஊத அந்த பேருந்து இரைச்சலை விட்டபடி கிளம்பியது. அதன் புழுதி மறைந்த பிறகு எங்கள் ஊருக்கு செல்லும் சரளைக் கற்கள் நிறைந்த பாதையில் நடக்க ஆரம்பித்தேன்! என் இதயம் திக் திக் என்று அடித்துக் கொண்டது. முதுகில் மாட்டியிருந்த பையில் ஜிப்பை திறந்து அதில் மடித்து வைத்திருந்த குலதெய்வ சாமியின் விபூதியை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டேன். நடையை விரைவாக போடலாம் என்று எண்ணியபோது அடிவயிறு முட்டியது. இனிமேலும் தாங்காது என்று எண்ணி ஒரு மரத்தை செலக்ட் பண்ணி ஜிப்பை திறந்துவிட்டேன்.

    ஏதோ பாரம் குறைந்தார்ப் போன்ற ஓர் உணர்வு. செல்போனில் எப்.எம்மை ஆன் செய்து விட்டு நடக்கத்தொடங்கினேன். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்துவிட்டிருப்பேன். சாலையில் விளக்குகள் ஏதும் இல்லையென்றாலும் மறுநாள் பவுர்ணமி என்பதால் நிலா ஒளிவெள்ளம் பாய்ச்சிக் கொண்டிருந்தது. இதுவரை எந்த பேயும் தென்படவில்லை! எங்கள் ஊர் எல்லைக்கு வந்தாயிற்று. அப்பாடா இன்னும் கொஞ்ச நேரத்தில் ஊருக்கு போய்விடலாம் என்று செல்போனில் மணியைப் பார்த்தேன்.
   சரியாக பன்னிரண்டு! உடம்பில் திடீரென்று ஓர் உதறல்! சே! இப்போது எதற்கு மணிப்பார்த்தோம்? ஏதோ பயம் சூழ அந்த நேரம் பார்த்து ஜில்லென்று ஓர் காற்று வீசியது. அந்தக் காற்றில் எங்கிருந்தோ மல்லிகையின் வாசம்!
   மல்லிப்பூ வாசம் வந்தா பேய் வரும்னு சொல்லுவாங்களே! பேய் வருமா?  என்று நினைக்கும் போதே வியர்த்தது. அப்போதுதான் உறைத்தது சுற்றிலும் மல்லிகைத்தோட்டங்கள்! அடச்சே! இதற்குத்தானா பயப்பட்டோம்! சமாளித்துக்கொண்டு நடையை துரிதப்படுத்தினேன்.
   அப்போது! யாருப்பா அது? தூரத்தில் இருந்து குரல் ஒன்று ஒலித்தது. தலையில் கம்பளியால் முக்காடிட்டு அது உடலையும் போர்த்தியிருந்தது. கையில் தடி வேறு! வாயில் பீடியோ சுருட்டோ எதுவோ தெரியவில்லை! புகைந்து கொண்டிருந்தது! தூரத்தில் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை!
  ஒகோ! இதுதான் சுருட்டு முனியா இருக்குமோ! இன்னிக்கு நம்ம கதி! ஓட ஆரம்பித்தேன்! ஆனால் முடியவில்லை! கால்கள் இடறின.
   ஏம் தம்பி! ஏலே! நில்லுடே! ஏன் பயந்து ஓடற? நான் தான் காவக்காரன் மாணிக்கம்! என்றதும்தான் என் உதறல் கொஞ்சம் நின்றது.
  இதற்குள் அந்த உருவம் என்னை நெருங்கிவிட்டது. என் இதயம் துடிப்பதை என்னால் நன்றாக கேட்க முடிந்தது.அவர் சிரித்துக் கொண்டே என் முதுகில் தட்டி யாருப்பா நீ அடையாளம் தெரியலை! ராவுல இந்த பக்கம் யாரும் வரமாட்டாங்களே! என்றார்.
   நான் தான் சண்முகம் மகன்! சென்னையில வேலை செய்யறேன்! நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு பூஜை வெச்சிருக்காங்க! முதலாளி இப்பத்தான் லீவு கொடுத்தாரு! அதான் பயணப்பட்டு வர இவ்வளவு நேரம் ஆயிருச்சு! என்றேன்.
   ஓகோ அதான் விசயமா? யாருடா இந்த நேரத்துல வராங்களேன்னு குரல் கொடுத்தேன்! நீ நம்ம ஊரை மறக்கலை! அதான் பேயோ பிசாசோன்னு ஓட ஆரம்பிச்சிட்டே இல்ல?
  அசடு வழிந்தேன்! ஆமா! நீங்க பேயை பாத்திருக்கீங்களா?
  நான் எங்க பார்த்தேன்! எல்லாம் சொல்ல கேள்விதான்! கதை கதையா சொல்லி இருக்காங்க! எங்க பாட்டனும் அப்பனும்! ஆனா நான் காவலுக்கு வந்து ஒரு எழவையும் பாக்கலை!
 அப்ப அதெல்லாம் உண்மை இல்லையா?
  உண்மையோ பொய்யோ! ஏதோ பெரியவங்க சொல்லி வைச்சிருக்காங்க! இன்னும் நம்பிகிட்டு இருக்கோம்!
  நீங்களே பார்த்தது இல்லேன்னு சொல்றீங்க! இதை நம்ம ஊர்க்காரங்க கிட்ட சொல்ல வேண்டியதுதானே!
    நம்பிக்கையை அழிக்க கூடாது தம்பி! நல்லதோ கெட்டதோ! நம்பிக்கை வைச்சுட்டாங்க! அதை நாம ஏன் கெடுக்கணும்! இந்த பேய் பயம் இருக்கறதாலெ வெளியாளுங்க நடமாட்டம் நம்ம ஊருல குறைவு. திருட்டு பயமும் இல்லாம இருக்காங்க! நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்க வேண்டியதுதான்.
படிப்பறிவு இல்லாதவர் இவ்வளவு தெளிவாய் பேசுகிறாரே என்று வியப்பாக இருந்தது. ஆமா! என்ன விசேசத்துக்கு வந்தீங்கன்னு சொன்னீங்க!

  நாளைக்கு குலதெய்வம் கோயில் பூஜைக்கு வந்திருக்கேன்!
 தம்பி எனக்கென்னவோ அது நடக்காதுன்னு தோணுது!
  ஏன் அப்படி சொல்றீங்க! எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க! நானும் கூட லீவ் போட்டு வந்துட்டேன்! அப்புறம் எப்படி நிக்கும்!
   நிக்கறதும் நடக்கறதும் நம்ம கையில இல்ல தம்பி!  எல்லாம் ஆண்டவன் கையில!
  அந்த ஆண்டவனுக்குதானே பூஜை போடறோம்! அவர் தடுத்துப்பாறா?
  ஆண்டவன் எதையும் சொல்றது இல்லை! அவனை வேண்டறவன் சொல்றதுதான் எல்லாம்!
  நல்லா பேசுறீங்க!
பேசி பேசித்தான் நம்ம நாட்டை ரெண்டு கட்சிங்க மாத்தி மாத்தி ஆளுதுங்க! நான் பேசறது எல்லாம் ஒண்ணும் பெரிசில்லை! இது பட்டிக்காட்டான் பேச்சு!
   சரி தம்பி ஊர் வந்திருத்து! நான் என் வீட்டுக்கு போறேன்! நீங்க கிளம்புங்க!
  அவர் அந்த தெருவில் திரும்ப எங்கள் வீட்டு தெருவில் திரும்பி என் வீட்டை அடைந்து கதவைத் தட்டினேன்!
  நாலைந்து தட்டல்களுக்குப் பிறகு யாரது! என்று குரல் கேட்டது. நான் தாம்மா! மணி!
     என்னடா! அர்த்த ராத்திரியிலே வந்திருக்கே! விடிகாலையில வரமாதிரி வந்திருக்கலாம்ல! நம்ம குலசாமிதான் உன்னை காப்பாத்திருக்கு!
  அதெல்லாம் இருக்கட்டும்மா! முதல்ல கதவைத் திற!
  உள்ளே நுழைந்து கால்கள் கழுவி லுங்கி மாற்றித் தூங்கிப் போனேன்!
   விழித்தபோது சூரியன் முளைத்து நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தான். ஏழரை என சுவரில் இருந்த கடிகாரம் காட்டியது. இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன்! எழுந்து வெளியே வந்தேன். ஊரே பரபரப்பாக இருந்தது. நிறைய பேர் பரபரப்பாக சாலையில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
  அம்மா அப்போதுதான் உள்ளே நுழைந்தாள். என்னம்மா? ஏன் எல்லோரும் ஓடறாங்க!
     நம்ம காவல்காரன் மாணிக்கம் இருக்கானே! அவன் செத்துட்டான்! காவலுக்கு போகும் போது முனுசாமி அடிச்சிருச்சாம்! ஒரு மைல் தூரத்துல பிணமா கிடக்காணாம்!
   திகிலில் உறைந்து போனேன்!
 என்னது… அப்ப என் கூட பேசினது பேயா?!

டிஸ்கி: ஆளாளுக்கு பேய்க்கதை பேய் அனுபவம் என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள். பேய்கள் ஓய்வதில்லை எழுதிய நான் எழுதாவிட்டால் எப்படி? அதான் ! எழுதிட்டேன்! எப்படி இருக்கு! கமெண்ட்ல சொல்லிட்டு போங்க பாஸ்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!