உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 64
வணக்கம் அன்பர்களே! சென்றவாரம் வினா எழுத்துக்களின் இலக்கணம் குறித்து படித்தோம். இந்த வாரம் இலக்கணம் சம்பந்தப்பட்டிருப்பினும் ஒரு சுவையான கால மாற்றம் ஒரு சொல்லின் பொருளை எவ்வாறு எல்லாம் மாற்றிவிடுகிறது என்பதை பார்க்கப் போகிறோம்.
பழந்தமிழில் சிறப்பாய் இருந்த பொருள் தற்காலத்தமிழில் தாழ்ந்து போனதையும் அன்று தாழ்ந்த பொருள் இன்று உயர்ந்து இருப்பதையும் பார்க்கும் போது காலமாற்றம் மொழியையைக் கூட விட்டுவைக்கவில்லை என்று புலனாகின்றது.
தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் உண்டு. பொருள் இல்லா சொற்கள் சில உண்டு அவை அசைச்சொற்கள் எனப்படும். உதாரணமாக இன்றைய சினிமாப் பாடல்களில் முதலில் ஒலிக்கும் சில சொற்களை எடுத்துக்கொள்ளலாம் லாலாக்கு டோல் டப்பிம்மா! போன்று சில இசைக்கோர்வைக்காக வரும். இதே போல் பழந்தமிழில் ‘மியா’ ‘எல்லா’ என்ற சொற்கள் அசைச்சொற்கள் என்று வழங்கப்பட்டது. இன்று எல்லோரும் போனை எடுத்தவுடன் கூறும் “ஹலோ” என்ற சொல்லுக்கும் பொருள் கிடையாது. இதுவும் ஓர் அசைச் சொல்லே.
உயர்ந்ததும் தாழ்ந்ததும்!
அந்தகாலத்தில் காமம், நாற்றம்,தேவடியாள், கூத்தியார், சேரி, குப்பை முதலிய சொற்கள் உயர்ந்த பொருளைக் கொண்டு இருந்தன.
காமம் என்றால் காதல், நாற்றம் என்பது நறுமணம், தேவடியாள் என்றால் தேவருக்கு (இறைவருக்கு) தொண்டு செய்பவர், கூத்தியார் என்பது கூத்து ஆடுகின்ற மகளிர். சேரி என்பது சேர்ந்து வாழுமிடம் குப்பை என்பது குவியல் என்கின்ற பொருள்களை அன்று பெற்றிருந்தது.
இந்த சொற்கள் இன்று எவ்வாறு பொருள் கொள்ளப்படுகின்றன என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
நம்முடைய இலக்கியத்தில் காதலனும் காதலியும் பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு இடம் சென்று திருமணம் செய்து கொள்வது ‘உடன்போக்கு’ என்று மரியாதையாக சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ ‘ஓடிப்போதல்’ என்று சொல்லப்படுகிறது.
தாழ்ந்த சொற்கள் உயர்தல்!
கழகம் என்ற சொல் பழங்காலத்தில் சூதாடும் இடத்தை குறிக்கும். ஆனால் இன்று பல கட்சிகள் மன்றங்களை கழகங்கள் என்று அழைக்கிறோம். ஒரு வேளை மக்களோடு சூதாடுவதால் ஒருவிதத்தில் பெயர் பொருத்தமாக இருக்கிறதோ என்னவோ
களித்தல் என்ற சொல் அக்காலத்தே கள்ளுண்டு மகிழ்வதை குறிக்கும். ஆனால் இன்று பொதுவாக எல்லா மகிழ்வான செயல்களுக்கும் அச்சொல் பயன்படுகிறது.
மாறிப்போன நெய்!
நெய் என்பது வழவழப்பான நீர்ப் பொருளை குறிக்கும். பழங்காலத்தில் எல்லா நீர்ப்பொருளையும் குறிக்கும் பொதுப்பெயராக இருந்தது.
உதாரணமாக: எள்+ நெய் = எண்ணெய்
கடலை+ நெய் = கடலைநெய்
தேங்காய்+ நெய் = தேங்காய் நெய்
விளக்கு+ நெய் = விளக்கு நெய்
ஆமணக்கு+ நெய் = ஆமணக்கு நெய்
வேம்பு+ நெய் = வேம்பு நெய்
வெண்மை+ நெய் = வெண்ணெய்
இப்படித்தான் அழைக்கப்பட்டது பண்டைக்காலத்தில். பொதுவாக இன்று நாம் எண்ணெய் என்று அழைப்பது எல்லாம் அக்காலத்தில் நெய். எள்+ நெய் = எண்ணெய் என்பதே இன்று பொதுப்பெயராக வழங்கப்படுகிறது.
கடலெண்ணை என்று சொல்லுகிறோம் பிரித்தால் கடலை+ எள்+ நெய் ஆனால் அதில் எள் சேர்ந்து இருக்கிறதா? கடலையும் எள்ளையும் சேர்த்தா நெய் எடுக்கிறோம். இது தவறு. வழவழப்பான நீர்ப்பொருளுக்கு இப்படி தவறான எண்ணெய் என்ற பொதுப்பெயர் வந்துவிட்டது. அதனால் எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்யுக்கு கூடுதலாக ‘நல்ல’ என்ற சிறப்பு பெயரை தந்து நல்லெண்ணை என்று கூறுகின்றனர். இன்று நெய் என்றால் வெண்ணெயிலிருந்து உருக்கப்படுவது மட்டுமே நெய் என்று ஆகிவிட்டது.
அதே போல் பொன் என்பது உலோகங்களுக்கான பொதுப்பெயராக முன்பு இருந்தது. வெள்ளி, தங்கம், தாமிரம், இரும்பு, செம்பு, எல்லாமே முன்பு பொன் தான். இலக்கணத்தில் இருபெயராட்டு பண்புத்தொகையாகவும் இருந்தது.
ஆனால் இன்று ‘பொன்’ சிறப்புப் பெயராக மாறி தங்கத்தை மட்டுமே குறிக்கின்றது.
இப்படி கால மாற்றம் தமிழையும் கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளது. இன்னும் சிலவற்றை அடுத்த பகுதியில் படிப்போம்.
இனிக்கும் இலக்கியம்!
நற்றிணை
திணை: பாலை
பாடியவர்: காவன் முல்லை பூதனார்.
துறை: தலைவனை பிரிந்த தோழி காடு கடுமையானது என தலைவி வருந்தவும் தோழி அது மழையுடையது என தேற்றியது
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,
‘எம்மொடு வருதியொ, பொம்மல் ஓதி?’ எனக்
கூறின்றும் உடையரோ மற்றே – வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை,
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே?
விளக்கம்: பெரிய மலைப்பகுதியில் உள்ள சோலையில் பெரிய புலி சினங்கொண்டு திரியும். அப்பாலை நிலத்தைக் கடந்து சென்றார் காதலர். மலைப்பிளப்புக்களையுடைய குன்றத்தில் நெடிய மேகம் மின்னி சிறிய துளிகளாகத் தொடங்கிப் பெரிய மழையைப் பெய்தது. ஆண் மானோடு போந்த பெண்மான் குமிழ மரத்தில் உராய்ந்தது. கலன் அணிந்த பெண் ஒருத்தி பொன்னாற் செய்த காசுகளைப் பரப்பினாற் போல குமிழ மரம் ஒள்ளிய பழங்களை உதிர்த்தது. அக்குமிழ மரங்கள் நிரம்பிய குறிய பல வழிகளை உடைய சுரத்தில், “பொலிவு பெற்ற கூந்தலையுடையாய்! எம்மோடு வருகிறாயா?” எனக்கூறிய சொல்லையுடையவர் தலைவர்வருகின்றார் வருந்தாதே என்கிறாள் தோழி
தலைவன் தலைவியை பிரிந்து பொருளீட்ட சென்றதும் பாலைநிலமாகிய கொடும் வெப்பம் நிறைந்த நிலமாயிற்றே என்று தோழி வருந்தினாள். அப்போது தோழி தலைவியை தேற்றி தலைவர் வரும் வழி மழையை உடையது இப்போது பருவம் மாறிவிட்டது. ஆதலால் வருந்தவேண்டாம் என்றாள்.
மான் தீண்டியது குமிழ மரம் பழத்தை உதிர்க்கும் என்று சொல்லியது தலைவன் பொருள் ஈட்டியதும் உடன் திரும்புவான் என்று பொருளினை உணர்த்தும்.
அழகிய பாடலை மீண்டும் ரசித்துப் படியுங்கள்!
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! உங்கள் எண்ணங்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!மேலும் தொடர்புடைய இடுகைகள்!