உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 65
வணக்கம் வாசக அன்பர்களே! கால மாறுதலுக்கு ஏற்ப சொல்லின் பொருள் மாறுபட்டு, உயர்ந்தது தாழ்வதும் தாழ்ந்தது உயர்வதையும் பொதுப்பெயர் சிறப்புப்பெயர் ஆனதையும் சென்ற வாரம் படித்தோம்.
அதன் தொடர்ச்சியாக சிறப்புப் பெயர் பொதுப்பெயர் ஆவதை இந்த வாரம் படிப்போமா?
கன்று, குட்டி என்பவை இளமையைக் குறிக்கும் சொற்கள் ஆகும். இவை இவைக்கு கன்று, இவை இவைக்கு குட்டி என்று கூறவேண்டும் என்று தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார்.
யானை, குதிரை, மான், ஆகியவற்றின் இளமைப்பெயராக கன்று என்றும் நாய்,பன்றி, புலி, முயல் ஆகியவற்றின் இளமைப்பெயராக குட்டி என்றும் கூறவேண்டும் என இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.
யானைக்கன்று, குதிரைக்கன்று, கழுதைக் கன்று, மான் கன்று என்று கூறவேண்டும். ஆனால் பசுவின் கன்றை மட்டுமே இன்று கன்று என்கிறோம் அதைக்கூட கன்றுக்குட்டி என்று சொல்லுகின்றோம்.
நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, புலிக்குட்டி, முயல்குட்டி என்று கூற வேண்டும். ஆனால் இன்று எல்லா விலங்கினத்தின் குட்டிகளும் குட்டி என்றே சொல்லப்படுகிறது.
இதே போல மரம், புல் என்று இரண்டுவகை உண்டு. உதாரணமாக மூங்கிலை புல்லினம் என்று சொல்வது உண்டு. தெளிவாக கூறவேண்டும் என்றால் உள்ளே வயிரம் பாய்ந்த செவ்வேறியவை மரம் என்றும் அவ்வாறு இல்லாதவை புல் என்றும் சொல்லவேண்டும்.
ஆனால் இன்று எல்லாமே மரம்தான்.
மரங்கள்: ஆல், அரசு, தேக்கு, வேம்பு, பூவரசு, புளி, புங்கை, சந்தனம், போன்றவைகள்.
புல்கள்: தென்னை, பனை, கமுகு,வாழை, முருங்கை, மூங்கில் போன்றவை.
இதே போல அமங்கலமான நிகழ்வை மங்கலமாக மாற்றி கூறுவதும் உண்டு. இறந்து போனார் என்று சொல்வதை, இயற்கை எய்தினார், துஞ்சினார், அமரரானார், போன்ற சொற்களால் மாற்றி கூறுவதுண்டு. நாகப்பாம்பை நல்ல பாம்பு என்றும் அம்மை என்று ஒரு நோயையும் கூறுகின்றோம். அதே போல எமனுக்கு கூற்றுவன், நடுவன், தருமன் என்ற பெயர்களும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு மக்களின் சிந்தனை ஓட்டத்தில் காலமாற்றத்திற்கு ஏற்றவாறு சொற்களின் பொருள் மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றது. இது தமிழ் மொழியில் மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் உண்டு.
இலக்கிய சுவை!
ஐங்குறு நூறு
தோழிக்கூற்றுப்பத்து
துறை: வாயில்பெற்று புகுந்துபோய் புறத்தொழுக்கம் ஒழுகி பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்கு தோழி மறுத்தது.
பாடியவர்: மருதம் பாடிய ஓரம்போகியார்.
நீருறை கோழி நீலச்சேவல்
கூறுகிர்ப்பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத் தன்றுநின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே.
துறைவிளக்கம்: தலைவன் பரத்தையரிடம் தொடர்புற்று பின் திரும்பி தலைவியிடம் வரும்போது தோழி கூறியது.
பாடல் விளக்கம்: நீரில் வாழும் நீலநிறத்தையுடைய (சம்பங்கோழி) சேவற்கோழியைக் கூர்மையான நகங்களை உடைய அதன் பெட்டை எண்ணி வேட்கை கொண்டுவாழும் ஊரனே!
தலைவியின் வயா நோய்க்கு( தலைவன்மீதுகொண்ட வேட்கை) நின் பரந்த மார்பு புளியங்காய் வேட்கை தானும் விளைப்பதன்றி நினைக்கும் தோறும் புலவிக்கு காரணமாக உள்ளது என்று தோழி கூறுகின்றாள்.
நீரில்வாழும் நீலக்கோழி சேவலை அதன் பெட்டைக்கோழி நினைத்து தன்னுடைய வேட்கையை தணிக்கும். புளியங்காயை நினைத்தபோதே நாவில் நீர் ஊறி வேட்கையைத் தணிக்கும்.அதுபோல உன்னுடைய மார்பை நினைத்து இவள் தன் வேட்கையைத் தணித்துக் கொள்வாள். ஆனால் அந்த நினைவும் அவள் வேட்கையை தணிக்காது போகுமளவு நீ புறத்தொழுக்கம் விரும்புகின்றவனாய் ஆகிவிட்டாய்! என்று தோழி தலைவனை குறை கூறினாள்.
உவமைநயங்கள் சிறந்த இந்தபாடல் கருத்தை கவர்கிறது அல்லவா?
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!