ஒத்தாசை!
“காலையில இருந்து நான் ஒண்டியாளா அடுப்பங்கறையிலே வேகறேன்! என்னத்தான் வேலைக்கு போறவளா இருந்தாலும் கொஞ்சம் கூடமாட ஒத்தாசை செய்யறாளா பாரு உன் பொண்டாட்டி?”
டிபன் சாப்பிட அடுக்களைக்குள் நுழைந்த என்னிடம் அம்மா கேட்டபோது வருத்தமாகத்தான் இருந்தது. இந்த அறுபத்தைந்துவயதில் இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கிறாள். கணவன், மகன், பேரக்குழந்தைகள் எல்லோருமே அவளிடம்தான் எதிர்பார்க்கிறார்கள். அவள் எதிர்பார்ப்பை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
பதில் பேச முடியாமல் மவுனமாய் என் அறைக்குத் திரும்புகையில் “ என்ன காலையிலேயே குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிச்சுட்டாங்களா உங்க அம்மா?” என்றாள் மேகலா.
“ அவங்க கேக்கறதுல என்ன தப்பு இருக்கு?”
“நீங்க அம்மா பிள்ளையாச்சே! அவங்களுக்குத்தான் பேசுவீங்க! கட்டின பொண்டாட்டிக்கு ஒருநாளாவது பேசி இருக்கீங்களா?”
“பாவம்டீ! அவங்க! இத்தனை வயசுல இன்னும் ஓய்வே இல்லாம உழைச்சிண்டு இருக்காங்க! கொஞ்சம் கூடமாடத்தான் வேலை செய்யறது!”
“நான் மாட்டேன்னு சொல்லலையே! அவங்க கூப்பிட்டா நான் போய் செய்ய தயார்! ஆனா கூப்பிடவே மாட்டாங்க! அப்புறம் வந்து வேலை செய்தாளா பார்!னு ரிப்போர்ட் வேற!”
“இதெல்லாம் கூப்பிட்டு செய்யற வேலையா மேகா?” நாமலே எடுத்து போட்டுட்டு செய்யணும்!
ஆஹா.. எப்படி பண்றீங்க பாரு அம்மாவுக்கு சப்போர்ட்டு! என்னால ஆகாதுப்பா! முகத்தை நொடித்துக் கொண்டாள் மேகலா.
அன்று மாலை அலுவலகம் விட்டு வந்த மேகலா, “அம்மா காபி!” என்றாள்.
சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த நான், ‘அம்மா வீட்டில இல்லை மேகலா!” என்றேன்.
“எங்க கோயிலுக்கு போயிருக்காங்களா? இன்னிக்கு பிரதோஷமா?”
” இல்லை! அம்மா ஊருக்குப் போயிருக்காங்க! அவங்க பொண்ணு வீட்டுக்கு! பத்துநாள் இனி நம்ம ராஜ்யம்தான்!” என்றேன்.
“ என்னது….!”
“ஆமா மேகலா! அவங்களுக்கு திடீர்னு பொண்ணுக்கிட்ட இருந்து போன் வந்ததாம்! போய்வரவான்னு கேட்டாங்க! சரி போய் வாங்கன்னு சொல்லி இப்பத்தான் பஸ் ஏத்திவிட்டேன்!”
வேறு சேலை கூட மாற்றாமல் அடுக்களைக்குள் நுழைந்தாள் மேகலா. “என்னங்க! நைட்டுக்கு சமைக்கணுமா?”
“இது என்ன கேள்வி மேகலா?”
இல்லீங்க! ஒரே டயர்டா இருக்கு! கிச்சன் பூரா சாமானுங்க இறைஞ்சு கிடக்கு இத ஒழுங்கு படுத்தவே ஒருமணி நேரம் ஆகும் போல இருக்கு!”
“நிறைய டைம் இருக்கு! நிதானமா சமைச்சிட்டு அப்புறம் கிச்சனை ஒழுங்கு பண்ணு!”
“அம்மா அம்மா! இந்த ஹோம் ஒர்க் சொல்லித் தர்றியா?”
“அம்மா சமையல் செய்யணும்டா! அப்பாக்கிட்ட போய் கேளு!”
“ அப்பா கிரிக்கெட் பாத்துக்கிட்டு இருக்கார்! பாட்டி இருந்தா சமைச்சிக்கிட்டே சொல்லி கொடுப்பாங்க!”
மேகலாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது! வா இப்படி சொல்லித்தரேன்! அவனுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏதோ தீய்ந்த வாசனை வந்தது. அடடே! அடுப்பை நிறுத்த மறந்துட்டேன் போல இருக்கே! என்று தலையில் அடித்துக்கொண்டு ஓடினாள்.
என்ன மேகா! சாப்பாடு ரெடியா! நாளைக்கு பூரியும் குருமாவும் பண்ணிடறியா? என்றேன்.
“நான் ஒருத்தி இங்க கிடந்து அல்லாடிக்கிட்டு இருக்கேன்! கூட மாட ஒத்தாசை பண்ணாம பூரி குருமா கேக்கறீங்களே! பையனுக்கு ஒரு ஓம் வொர்க்காவது சொல்லித் தரலாம்! இல்லையா?”
“ என்ன மேகா இது! நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா? ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாது?”
“இதைக் கூடவா சொல்லணும்? தானா வரணுங்க!”
“இதைத்தான் எங்க அம்மாவும் தினமும் சொல்றாங்க!”
“என்னது?”
“ஒருநாள் எங்க அம்மா இல்லேன்னு ஆனதும் தனியாளா கிச்சன்ல ஒரு வேளை உன்னால சமாளிக்க முடியலையே! உடனே ஹெல்ப்புக்கு வரமாட்டியான்னு கேக்கறீயே! இத்தனை நாளா எங்க அம்மா தனியாளா எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க! கொஞ்சம் கூடமாட ஒத்தாசை பண்ணாமா கூப்பிடவே மாட்டறாங்கன்னு நொண்டி சாக்கு சொல்லிக்கிட்டு இருந்தியே!...
மத்தவங்க இடத்திலே நாம இருந்து பாத்தாதான் அந்த இடத்தோட கஷ்டம் தெரியுது இல்லே?”
மேகலா தலை குனிந்தாள். அவளுக்கு ஏதோ புரிந்து இருக்கவேண்டும். “சாரிங்க!” என்றாள்.
“ எல்லாத்தையும் அப்படியே போடு! விடிகாலையிலே எழுந்து பார்த்துக்கலாம்! இப்ப ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வாங்கி வந்திருக்கேன்! சாப்பிட்டுக்கலாம்!” என்றேன்
அவள் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். அடுத்த வாரம் முதல் மாமியாருடன் இணைந்து வேலைகளை பகிர்ந்துகொண்டாள் என்று சொல்லவும் வேண்டுமா?
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!