நண்பர் பரமு சிவசாமி அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி இந்த கவிதை எழுதி இருக்கிறேன்!
அன்பு நண்பர் பரமு சிவசாமி அவர்களுக்கு, சிலசமயம் புகழ்கிறீர்! சில சமயம் இகழ்கிறீர்! சில சமயம் பூச்சாண்டி காட்டுகிறீர்! நல்லது. இந்த வலைப்பூவில் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வருகிறேன்! யாரும் கட்டாயப்படுத்தி வருவதல்ல எழுத்து. என்னை பாதிக்கும் எந்த ஒரு விசயமும் எழுத்தாகும். அது கவிதையோ கட்டுரையோ, அல்லது கதையாகவோ உருவாகும்.
அதே போல தீவிரவாதத்தை நான் ஆதரிக்கவும் இல்லை! அது எந்த மதமானாலும் சரி! மேலும் நீங்கள் கூறியது போல நான் பணக்காரனும் அல்ல! அந்த திமிர் எனக்கு கிடையாது. கஷ்டப்பட்டு இன்று ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்தவன். அதனால் யாரையும் அலட்சியப்படுத்தவும் மாட்டேன். என்னுடைய பணிச்சூழல், எழுதும் சூழல் பொருத்து எனது பதிவுகள் இடைவெளி விட்டு வரும். சிலநாட்களாக(மாதங்களாகவே) எனக்கு பணிச்சுமை அதிகரித்து விட்டது. இதனால் படைப்புக்கள் குறைவாகவே வருகிறது. கட்டாயப்படுத்தி எழுதவைத்தால் அது எழுத்தாக இருக்காது.ஆகவே இதை எழுதுங்கள் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இதைத்தான் எழுத வேண்டும் என்று என்னை யாரும் கட்டுப்படுத்துவதை நான் விரும்புவது இல்லை. எந்த ஒரு எழுத்தாளனும் இத்தகைய கட்டுப்பாடுகளை விரும்ப மாட்டான். எந்த ஒரு நிகழ்வும் என்னுள் ஓர் உணர்வை ஏற்படுத்தினால் அது கட்டாயம் எழுத்தாகும். சில சமயம் என்னுடைய சூழல் காரணமாக அந்த உணர்வுகள் மறைந்தும் போகும்.அப்போது அதைப்பற்றி எழுதாமல் விட்டுவிடுவேன். அதற்காக அநியாயங்களை கண்டு பம்மி நிற்கிறேன் என்று நீங்களாகவே அர்த்தம் செய்துகொள்ளாதீர்கள். இதோ நீங்கள் குழந்தைகளுக்காக கேட்ட அஞ்சலிக்கவிதை. இடைவிடா பணிகள் ஊடே என்னால் முடிந்த அளவில் எழுதி இருக்கிறேன்! என் வழக்கமான பாணியில் எனது படைப்புக்கள் இனி தொடரும். பின் தொடர்வதும் விலகுவதும் உங்கள் இஷ்டம். புரிந்துகொண்டால் சரி! இல்லை உங்கள் வாதத்திலேயே நிற்பேன் என்றால் என்னால் என்ன சொல்ல முடியும்? உங்களின் விருப்பம். நீங்கள் என்னை தவறாகவே புரிந்துகொண்டாலும் என்னுடைய எழுத்துக்களை ரசிக்கும் தங்களை நான் நண்பராகவே கருதுகிறேன். மேலும் வலைப்பூ உலகில் அடையாளம் இன்றி( கணக்கு இன்றி பின்னுட்டம் இடுபவர்களை அனானிமஸ் சுருக்கமாக அனானி என்று விளிக்கும் வழக்கம் உண்டு. அந்தவகையிலேயே பதிவொன்றில் தங்களை அனானி என்று விளித்தேன். வேறு எந்த நோக்கமும் இல்லை. நன்றி. அன்புடன். தளிர் சுரேஷ்.
பாகிஸ்தான் பள்ளிச்சிறுவர்களுக்கு அஞ்சலி!
மொட்டுக்களாய் அரும்புகையிலே
சட்டென்று சிதைத்தானே தாலிபன்கள்!
மலர்களாய் இதழ் விரிக்கையிலே
புயலாய் புகுந்ததுவே தீவிரவாதம்!
பிஞ்சென்றால் நஞ்சும் இறங்குமாம் –இங்கே
நெஞ்சமொன்று இருந்ததா மூடர்களுக்கு!
மூடரையும் மன்னிக்கலாம்! மூர்க்கர்களுக்கேது மன்னிப்பு!
போர் நெறியும் மறந்தவர்கள்!
மதவெறிதான் வேட்கையானதால்
மூளைதனை இழந்தவர்கள்!
வீரத்தை நிலைநாட்டுகிறேன் என்று
ஈரத்தை தொலைத்தவர்கள்!
பாம்புக்கு பால்வார்த்து வளர்த்தது!
வீம்புக்கே வழிகொடுத்து விதைத்தது!
தாலிபன் அண்ட நிழல்கொடுத்து
அதன்பலனை அனுபவித்தது பாகிஸ்தான்!
பழமைவாதம் பேசியே பழிவாங்கியது தாலிபான்
பலியானது அனைத்தும் பிஞ்சுகள்!
கொஞ்சுமொழி பேசும் வயதில்
கொடுமை தேடிவந்ததுவே!
கல்விக்கூடமே களமாகுமா?
கேள்விக்கணைகள் விளையுமிடத்தில்
ஏவுகணைகள் முழங்கினவே!
பிள்ளைகள் வேதம் ஓதுமிடத்தில்
புகுந்தனவே சாத்தான்கள்!
பாடவொலி கேட்கவேண்டிய இடத்திலே
மரணஒலி எழுந்ததுவே!
ஈரங்கள் உலர்ந்த இராட்சதர்கள்
இரக்கமில்லாது இரத்தம் குடித்தனரே!
ஏதுமறியா பாலகர்கள்மீது ஏனிந்த தாக்குதல்!
சூதுவாதறியா பிள்ளைகள்தானா
கோழைகளே உங்கள் இலக்கு!
கள்ளமில்லா பிள்ளைகளை களவாடிக்கொண்டானே
காலன் அவன் உங்கள் மூலம்!
கடவுளும் கண்மூடி பார்த்திருக்க
உடன்பாடு செய்து கொண்டீரோ?
உணர்ச்சியில்லா ஜடங்களே!
உங்கள் கொள்கைகளை கொளுத்துங்கள்!
இல்லையேல் இந்நாளில் இல்லாவிடினும்
எந்நாளாவது எமனுக்கு இரையாவது நிச்சயம்!
இது உயிர்விட்ட குழந்தைகள் மீது சத்தியம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!