Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

“இருள்” சிறுகதை

$
0
0
 “இருள்”


 சென்னை மெரினா கடற்கரை! இருள் சூழ்ந்த வேளை! கடலலைகள் ஆக்ரோஷமாக மணலைக் கரைத்து எடுத்துச்சென்று கொண்டிருந்தன. நேரம் பத்துமணியை கடந்து கொண்டிருந்ததால் கூட்டம் கலைந்து ஆங்காங்கே ஓரிருவர் மட்டுமே இருந்தனர். அவர்களையும் விரட்டிக்கொண்டிருந்தனர் போலீசார்.
     அப்போது புத்தம் புதிய வாக்ஸ் வேகனில் வந்து இறங்கினாள் அவள். அந்த இருண்ட பிரதேசத்திலும் அவள் முகத்தில் ஒளிவீசியது. அவள் முகத்தில் சோகம் இழையோடினாலும் அதையும் மீறிய ஓர் நம்பிக்கைத் தெரிந்தது. பர்தா அணிந்திருந்த அவள் திரையை மூடினாள். கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
     இந்த நேரத்தில் தன்னந்தனியே நடக்கும் இவளை ஒன்றிரண்டு பேர் வித்தியாசமாக பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை! சென்னையின் சவுகர்யங்களில் இதுவும் ஒன்று. யார் எப்படி போனால் என்ன? என் வேலையை மட்டும் கவனி என்ற மனோபாவத்திற்கு மக்களை சென்னையின் பரபரப்பு மாற்றி அமைத்து விட்டிருந்தது.
     சரி பர்தா அணிந்த அவள் யார்? உங்களுக்குச் சொல்லாமலா? அவள் “சஞ்சனா” இன்றைய வெள்ளித்திரையின் இளைய தாரகை. தமிழ் திரையுலகிற்கு மலையாளக் கரை தந்த மற்றுமொரு காணிக்கை. தெலுங்கு படம் ஒன்றில் தலையை காட்டியவளை தமிழின் முன்னனி நடிகர் தனக்கு ஜோடியாக நடிக்க சிபாரிசு செய்ய அதிர்ஷ்டம் அவளை அள்ளிக் கொண்டது. அவளின் கர்வம் இல்லாத தயாரிப்பாளர்களுக்கு சிரமம் கொடுக்காத பண்பும் நேரத்திற்கு ஷுட்டிங் வரும் நேரக்கட்டுப்பாடும் எல்லோரையும் கவர்ந்து போக முன்னனி நடிகர்கள் முதல் இளைய நடிகர்கள் வரை அவளையே கதாநாயகியாக போட வேண்டும் என்று வற்புறுத்த ஒரே வருடத்தில் பிஸியான நடிகை ஆகிவிட்டாள். அத்துடன் அவள் நடித்த எல்லா படமும் ஹிட்டடிக்க ராசியான நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு இன்று கைவசம் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்கள்.
    எல்லாம் இருந்தும் என்ன பயன்? இன்று அவள் முகத்தில் நிம்மதி தெரியவில்லையே! எதையோ பறிகொடுத்தவள் போல சுதந்திரமாக உலாவக் கூட முடியாமல் இதோ பர்தா அணிந்து நிம்மதி தேடி கடற்கரையினில் நிற்கின்றாள். கடலின் சில்லென்ற காற்று சுகமளித்தாலும் ஓவென்ற இரைச்சல் அவள் மனதை போலவே அழுவதாய் தோன்றியது.
    காற்று அவள் முகத்திரையினை விளக்க ஒன்றிரண்டு பேர் அடையாளம் கண்டு அவளை நெருங்க தவிர்த்து வேகமாக நடந்து காருக்குள் அடைக்கலம் புகுந்தாள்.
  “ச்சே! இதென்ன வாழ்க்கை! நிம்மதியாக காற்றுக்கூட வாங்க முடியவில்லை!” அலுத்துக் கொண்டு முணுமுணுத்தவள் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள்.
    பரபரப்பான திரையுலக வாழ்க்கை வசதியைத் தந்தாலும் நிம்மதி இல்லாமல் இருந்தது அவளுக்கு. ஆனால் சமீப காலமாக அவளுக்கு ஒர் நிம்மதி கிடைத்தது. அந்த நிம்மதியை தந்தவன் யோகேஷ்.
   யோகேஷ் ஓர் புகைப்பட கலைஞன். முதல் முதலில் அவளை புகைப்படம் எடுத்தவன் அவன் தான். அந்தபடங்கள் சிறப்பாக அமைந்து ஹீரோயின் சான்ஸும் கிடைக்க, அவன் மேல் ஓர் நம்பிக்கை விழுந்துவிட்டது. அதிர்ஷ்டமானவன் என்று. தொழிலிலும் கெட்டிக்காரன்.  அந்த அதிர்ஷ்டம்தான் அவனை தொடர்ந்து புகைப்படம் எடுக்க அவள் அழைத்தாள். இயக்குனர்களுக்கு அறிமுகம் செய்து ஸ்டில்ஸ் எடுக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தாள்.

        அந்த பழக்கம் அவள் வீடுவரை வருவதில் ஆரம்பித்து அப்படியே ஓய்வு நேரங்களில் சந்திப்பதாக தொடர்ந்தது. யோகேஷ் புகைப்பட கலைஞன் மட்டுமல்ல! சுவையாக பேசுவான். அவன் இருக்குமிடத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை! கலகலப்பாக இருப்பான். இது சஞ்சனாவின் மனதில் அவனுக்கு ஒர் இடத்தை தந்துவிட்டது.
    சஞ்சனாவுக்கு என்று அவன் பார்த்து பார்த்து எதையாவது செய்வான். இவளே மறந்துவிட்ட ஒன்றை ஞாபகப்படுத்துவான். அவள் ஒருசமயம் உடல்நலக்குறைவால் படுத்துக்கிடந்தபோது கூடவே இருந்து கவனித்துக் கொண்டான். இதெல்லாம் அவன் அவள் மனதில் இடம்பிடிக்க போதுமானதாக இருந்தது.
   ஒருசமயம் அவள் நினைத்தாள் சினிமாவையே மறந்துவிட்டு யோகேஷை திருமணம் செய்து கொண்டு எங்காவது வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகிவிடவேண்டும் என்று. ஆனால் இதை எப்படி அவனிடம் கேட்பது?
    அதற்கும் ஒருநாள் வந்தது. ஒருநாள் சீக்கிரம் படப்பிடிப்பு முடிவடைய யோகேஷிற்கு போன் செய்து வரவழைத்தாள். காரில் ஏறிக்கொள்ளும் படி சொல்லிவிட்டாள். டிரைவரை அனுப்பிவிட்டு அவளே டிரைவ் செய்து அந்த நட்சத்திர ஹோட்டலை அடைந்தாள்.
    அங்கே புக் செய்திருந்த டேபிளில் அமர்ந்து வந்து நின்ற பேரருக்கு ஆர்டர் கொடுத்தபின் கேட்டாள். ”யோகேஷ் நீ என்னை பற்றி என்ன நினைக்கறே?”
    ”எதுக்கு?”
   “சும்மா சொல்லேன்!”
    “ம்ம்! நல்ல நடிகை! நல்லா பழகுறே! தலைக்கனம் இல்லே! மொத்தத்தில் ஒரு நல்ல பெண்!”
     “சரி! என்னால குடும்பம் நடத்த முடியும்னு ஒரு நல்ல மனைவியா இருப்பேன்னு நினைக்கறியா?”
    “ அதிலென்ன சந்தேகம்! நீ நல்ல குடும்பத் தலைவியாவும் இருப்பே!”
      “சரி அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா யோகேஷ்? நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்!”
      திடீரென்று இந்த கேள்வி வரும் என்று யோகேஷ் எதிர்பார்க்கவில்லை.
   “என்ன யோகேஷ் பதிலையே காணோம்! என்னை உனக்கு பிடிக்கலையா?”
     “இல்லே ஏன் இப்படி திடீர்னு கேக்கறே?”
  “எனக்கு இந்த வாழ்க்கை அலுத்துப்போச்சு! எனக்குன்னு யாரும் இல்லை! யாரும் என் வாழ்க்கையை பத்தி அக்கறைப்படலை! எல்லோரும் என்னை ஒரு பணம் காய்ச்சி மரமாத்தான் பாக்கிறாங்க! நான் நானா இருக்கணும்னு நினைக்கிறேன்! நீதான் அதுக்கு உதவனும்! செய்வியா?”
    “ சஞ்சனா! நீ எனக்கு கிடைக்கிறது பெரிய பாக்கியம்! சொல்லப்போனா எனக்கும் உன் மேல லவ் இருந்தது! ஆனா சொல்ல தைரியம் இல்லை!”
      “ஓ! அதனாலதான் அன்னிக்கு உடம்பு சரியில்லாதப்ப அப்படி விழுந்து விழுந்து பார்த்துக்கிட்டியா?”
      “ சரி சஞ்சனா! இதுக்கு உன் வீட்டுல சம்மதிக்கனுமே!”
  “அவங்க சம்மதம் எதுக்கு! நான் மேஜர் ஆயிட்டேன்! என்னை யாரும் தடை செய்ய முடியாது!”
   “அப்ப எப்ப கல்யாணம்?”
  “அய்ய! ஐயாவுக்கு அதுக்குள்ள ஆசையைப் பார்! கைவசம் நிறைய படங்க இருக்கு! அதெல்லாம் முடிச்சு கொடுக்கணும்! இல்லேன்னா புரடியூசர்ஸ் பாதிக்கப்படுவாங்க! அதனால ஒரு வருஷம் தள்ளிப் போடுவோம்! புதுப்படம் எதுவும் ஒத்துக்காம இருந்துடறேன்! அப்புறம் வருஷ கடைசியில பிரஸ் மீட் வைச்சு நம்ம கல்யாணத்தை அறிவிச்சுடுவோம்!”
    ”ஓகே சஞ்சனா! நீ சொல்றதுதான் சரி! ஒருவருசம் நிதானிப்போம்! ஆனா புதுப்படம் ஒத்துக்கலைன்னா சந்தேகம் வருமே!”
   “ அதை நான் பாத்துக்கறேன்!”
  இப்படித்தான் யோகேஷை மணப்பது என்று தீர்மானித்து அன்று பேசினார்கள். அப்புறமும் யோகேஷ் நல்லவனாகவே தெரிந்தான். ஒன்றிரண்டு பத்திரிக்கைகளில் கிசு கிசு கூட வந்தது. அவள் அதை பெரிது படுத்திக்கொள்ளவில்லை! ஆனால் யோகேஷோ பத்திரிக்கை காரர்களை பொரித்து எடுத்தான். விட்டு தள்ளு யோகேஷ் என்றபோதும் நம் அந்தரங்கத்தில் எட்டிப்பார்க்க இவர்கள் யார்? என்றான் அப்படிப்பட்டவன் இன்று என்ன பேச்சு பேசி விட்டான்?
     இன்று காலையில் படப்பிடிப்புக்கு வந்திருந்தாள் சஞ்சனா. டூயட் சீன்! ஹீரோவுடன் கொஞ்சம் நெருக்கமாகவே நடிக்க வேண்டி இருந்தது. கூட நடனமாடுபவர்கள் சில தவறுகளை செய்ய டேக் வாங்கிக் கொண்டு இருந்தது.

   அப்போதுதான் அங்கே யோகேஷ் வந்தான். சீன் முடியும் வரை பார்த்திருந்தவன் முடிந்ததும் கேரவனுக்குள் நுழைந்தான்.
   “பிடிக்கலை!” என்றான்
  “எது யோகேஷ்?” என்றாள் சஞ்சனா.
   “இப்படி அவன் கூட கட்டிப்பிடிச்சு கொஞ்சறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை!” என்றான்.
   “இதானே என் தொழில்!”
  “அப்ப விட்டுடு!”
  “ எதை விடச்சொல்றே?”
  “ ஒண்ணு தொழிலை விட்டுடு! இல்லே என்னை விட்டுடு!”
 அதிர்ந்தாள் சஞ்சனா! இந்த வார்த்தைகளை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை அவள்.
   “ இது நடிப்பு யோகேஷ்! நிஜமல்ல! நடிக்க வந்துட்டா நடிச்சுத்தான் ஆகனும்! இதை போய் பெரிசுபடுத்தாதே!”
  “ எனக்கே பாடம் சொல்றியா? நீ நெனச்சா இப்படி நடிக்க முடியாதுன்னு சொல்லி இருக்கலாம்!”
   “அது தப்பு யோகேஷ்! தொழிலுக்கு செய்யற துரோகம்!”
   “அப்ப எனக்கு துரோகம் பண்ணாலும் பண்ணுவே தொழிலுக்குத் துரோகம் பண்ணமாட்டே!”
   “புரிஞ்சுக்கோ யோகேஷ்! புரடியூசர் கிட்ட கை நீட்டி பணம் வாங்கி இருக்கேன்! டைரக்டர் சொல்றபடி நடிக்க வேண்டியது என் கடமை! இந்த சீன்ல ஆபாசம் இருந்ததா? இல்லையே! லவ்வர்ஸ் எப்படி தொடாம நடிக்க முடியும்? தூர தூர இருந்தா அது நல்லா அமையாது!”
   “நல்லா அமையாதுதான்! நீதான் அந்த ஹீரோ பயலோட  லயிச்சு போயிட்டியே!”
  “யோகேஷ்! ஸ்டாப் இட்! இப்படி பேசறதை முதல்ல நிறுத்து!”
   “உள்ளதை சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதா! பேப்பர்ல போட்டப்ப கூட எனக்கு ஆத்திரமா வந்தது! ஆனா இப்ப நேர்ல பாத்தப்பறம்தான் எல்லாம் புரியுது!”
    “ என்ன புரியுது?”
  “உனக்கும் அவனுக்கும் தொடர்புன்னு பேப்பர்ல எழுதனான்! நம்பலை! இப்ப நல்லாவே புரியுது!”
    “யோகேஷ்!  நீ அத்துமீறி பேசற!”
 “சர்தான் நிறுத்துடி! கட்டிக்கப்பொறவன் முன்னாடியே நீ அத்துமீறி நடந்துப்ப! நான் அத்துமீறீ பேசக்கூடாதா?”
   “இவ்ளோ நடந்ததுக்கப்பவும் உனக்கு இங்க மரியாதை இல்லை! கட்டிக்க போறவன்! அந்த பட்டம் வாபஸ் ஆகி அஞ்சு நிமிஷம் ஆயிருச்சு! உன்னை போர்த்தியிருந்த போர்வை விலகி இப்பத்தான் சுயரூபம் வெளிப்பட ஆரம்பிச்சிருக்கு! நீ வித்தியாசமானவன்னு நினைச்சேன்! சாதாரணமானவன் தான்னு நிருபிச்சிட்டே!”
     “ சஞ்சனா! இப்பவும் நான் உன்னை விரும்பறேன்! ஆனா இப்படி கண்டவன் கூட கட்டிப்பிடிச்சி நடிக்கறதை விட்டுடு!”
      “ஆனா நான் விரும்பலை மிஸ்டர் யோகேஷ்! என்னோட கணிப்பு இங்கேயும் தப்பிச்சிருச்சு! ஆனா நானும் தப்பிச்சுட்டேன்! அதுவரைக்கும் உங்க குணம் இப்பவாவது எனக்கு தெரிஞ்சுதே! அதுக்கு அந்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்!  இன்னிக்கு நடிப்புல ஹீரோ கூட டூயட் பாடினதையே சகிச்சுக்க முடியாத உங்களை கட்டிக்கிட்டிருந்தா நாளைக்கு இந்த மாதிரி சீன் வரப்ப எல்லாம் நீங்க என்ன சொல்லுவீங்கலோன்னு பயத்தோட இருக்கணும்!
    காலம் பூராவும் அவஸ்தை பட நான் தயாரா இல்லை! உங்களை மாதிரி சந்தேக மனுசங்களை கட்டிக்கிட்டா வாழ்க்கை சுடுகாடு ஆயிரும்! நல்ல வேளை நான் தப்பிச்சேன்! குட்பை யோகேஷ்!”
      கார் அவளது பங்களா வாசலில் வந்து நின்றது. நினைவுகளில் இருந்து மீண்டாள் சஞ்சனா. காரில் இருந்து இறங்கி வீட்டினுள் நுழைந்து தன் அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
     அவள் மனம் கனத்துப் போயிருந்தது. கண்களில் நீர் கோர்த்திருந்தது. இந்த யோகேஷை எவ்வளவு மதிப்பாக நடத்தினாள்? ஆனால்… அவனும் சராசரி மனிதனாக மாறிவிட்டானே!
    போகட்டும் இந்த உலகம் எப்பவும் இப்படித்தான்! யோகேஷும் உலகத்தில் ஒருவன் தானே? நாம் தான் அவசரப்பட்டுவிட்டோம். தப்பாக அவனை எடைபோட்டு அவமானப்பட்டுவிட்டோம்! நடிகை என்றாலே கேவலமாக அல்லவா பார்க்கிறார்கள்? பெண் என்றாலே இளக்காரமாகிவிடுகிறது! என்ன வெல்லாம் பேசுகிறார்கள்? இந்த காலம் எப்பொழுது மாறுமோ?
    சிந்தனைகளுடன் கட்டிலில் தூக்கம் வராமல் புரண்டாள் சஞ்சனா. ஜன்னல் வழியே பார்த்தாள். வெளியே வானமும் அவள் வாழ்க்கையை போல இருண்டு கிடந்தது.

டிஸ்கி} எனது கையெழுத்து பத்திரிக்கையில் எழுதிய சிறுகதை இது! சில மாற்றங்கள் செய்து இங்கே பதிவிடுகிறேன்! சினிமாத்துறை பற்றி சிறிய கேள்வி ஞானம் மட்டுமே! அதனால் முடிந்த அளவில் எழுதி இருக்கிறேன்.
   சினிமாக்காரர்களை இழிவு படுத்துகிறேன் என்று குற்றம் சாட்டிய அன்பர் ஒருவருக்கும் இதையே பதிலாக தருகிறேன்! நன்றி!


     தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles