ரத்ன மாலா! பாப்பா மலர்!
விஜயபுரி என்றொரு நாடு. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பிரதேசம். வளமான நாடு. அதன் இளவரசி ரத்னமாலா. பேரழகி.அழகி மட்டும் அல்ல அறிவிற் சிறந்தவள். நாட்டியம், பாடல், கவிதை என பன்முகத் திறமை கொண்டவள். விஜயபுரி வேந்தன் வெற்றி வீரனின் ஒரே புதல்வி.
அழகும் அறிவும் நிரம்பப் பெற்ற ரத்னமாலாவை மணக்க பல்வேறு நாட்டினரும் போட்டி போட்டனர். பெண் கேட்டு தூதுவிட்டனர். சிலர் மிரட்டியும் பார்த்தனர். ஆனால் அதற்கெல்லாம் செவிகொடுக்கவில்லை வெற்றிவீரன். என் மகள் யாரை விரும்புகிறாளோ அவரையே திருமணம் செய்து வைப்பேன் என்று உறுதியாக கூறினார்.
மந்திரிமார்கள் இந்த விசயத்தில் அரசனுக்கு ஆலோசனை கூறினர். “மன்னா! பக்கத்து நாட்டு மன்னர்களை பகைத்து கொள்ளுதல் நல்லதல்ல! இளவரசியை ஒருவருக்கு திருமணம் செய்ய மற்றவர்கள் கோபித்து படையெடுப்பர். வீணான உயிர்சேதம் மக்களுக்குத் துன்பம் என நஷ்டம் உண்டாகும்.அதனால் சுயம் வரம் ஒன்று நடத்தி ஏதாவது போட்டி வைப்போம். அதில் வெற்றி பெறுபவனுக்கு இளவரசியை மணம் செய்து கொடுப்போம்” என்றனர்
இளவரசி ரத்னமாலாவோ நான் என்ன ஜடப்பொருளா? போட்டியில் வெற்றிபெற்றவனுக்கு பரிசாக போக? அப்படி அவன் என்னை மணந்துகொண்டால் அவனுக்கு என் மீது அன்பிருக்குமா? போட்டியில் ஜெயித்துப் பெற்ற பரிசுதானே என்று அலட்சியம் செய்ய மாட்டானா? என் மீது உண்மையான அன்பு செலுத்துகிறவனை கண்டுபிடிக்குமாறு ஒரு போட்டி வையுங்கள்! அதில் அவன் வெல்லட்டும் அவரை நான் மணந்து கொள்ளுகிறேன்!” என்றாள்.
“ இளவரசியே! உண்மையான அன்புள்ளவனை எப்படி கண்டுபிடிப்பது?” என்றார் மந்திரி.
”அதற்கு ஒரு திட்டம் இருக்கிறது! நம் நாட்டில் உள்ள காட்டில் ஒரு பெரிய மலை இருக்கிறது அல்லவா? அந்த மலையின் உச்சியில் ஒரு பெரிய மாளிகை உள்ளது. அந்த மாளிகைக்கு செல்ல ஒரே வழிதான் உண்டு. கீழே இரண்டு பூதங்கள் அதை காவல் காக்கும். அங்கே என்னை கொண்டுசென்றுவிட்டுவிடுங்கள். இதை ரகசியமாகச் செய்ய வேண்டும். இளவரசியைக் காணவில்லை.கண்டுபிடித்துத் தருவோருக்கு இளவரசியை மணமுடித்து தருவதாக சொல்லுங்கள்.
என் மீது உண்மையான அன்புள்ளவனாக இருப்பின் நான் இருக்கும் இடம் அறிந்து அங்குள்ள ஆபத்துக்களை வென்று என் கரம் பிடிக்க வருவான்.” என்றாள்.
திட்டம் அரங்கேறியது! நாட்டில் உள்ள மலை உச்சி மாளிகைக்கு ரகசியமாக இளவரசி கொண்டுசெல்லப்பட்டாள்.அந்த மாளிகையின் உள்ளே நுழைய வேண்டுமானால் ஒரு சங்கேதக் குறியீடு வேண்டும். வெளியே இரண்டு பூதங்கள் காவல் காத்தன. அவை அந்த சங்கேத வார்த்தையை கேட்டவுடன் மேலே தூக்கிச்செல்லும். உள்ளே நுழைய பிரம்மாண்ட கதவுகள் இருக்கும். அதை திறப்பது அவ்வளவு சுலபம் அல்ல! மலையைச் சுற்றி பெரும் அகழி இருந்தது. அதில் ஆளைவிழுங்கும் முதலைகள் இருந்தன. அந்த நாட்டின் பொக்கிஷம் வைத்துள்ள மாளிகை அது. யாருக்கும் அது தென்படாத ஒரு மாய மாளிகை. தென்பட்டாலும் உள்ளே செல்லுவது சுலபம் அல்ல!
மறுநாள் முரசு அறிவிக்கப்பட்டது. இளவரசியை யாரோ கடத்திவிட்டார்கள். கண்டுபிடித்து தருபவர்களுக்கு இளவரசியை மணம் செய்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதே நாட்டில் விவேகன் என்ற வாலிபன் வசித்து வந்தான். விவேகன் வீரமானவனும் கூட. அவனுக்கு ஓர் வயதான பாட்டி மட்டுமே உறவு. சிறு வயதிலேயே தாய்-தந்தையரை இழந்த அவனை வளர்த்தது இந்த பாட்டிதான். பாட்டி அவனை பாடசாலைக்கு அனுப்பி படிக்க வைத்தாள். படிப்பு முடிந்ததும் அவன் வீடு திரும்பினான். தற்சமயம் பிழைப்புக்காக விறகு வெட்டி விற்று பிழைத்துவந்தான்.
அவ்வாறு அவன் விறகு வெட்டி விற்று வருகையில் ஒர் நாள் அரண்மனை நந்தவனத்தில் ரத்னமாலாவை பார்த்துவிட்டான். பார்த்ததில் இருந்து அவள் நினைவாகவே இருந்தான். பாட்டியிடம் தன் ஆசையை கூறினான். பாட்டியோ அவள் இளவரசி உனக்கு கிடைக்கமாட்டாள் வீணாக கனவு காணாதே! என்று சொன்னாள்.
கனவுகளை லட்சியமாக கொண்டால் ஒருநாள் கனவும் பலிக்கும்! அதற்கான முயற்சிகளையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் பாட்டி! நான் என் தகுதியை வளர்த்துகொள்கிறேன்! என் கனவு ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும்! என்றான் விவேகன்.
அப்போதுதான் இளவரசி காணமல்போன விஷயம் அவன் காதுக்கு எட்டியது. கண்டுபிடித்து தருவோருக்கு இளவரசியே பரிசு என்று கேள்விப்பட்டதும் மிகவும் மகிழ்ந்தான். எப்படியும் இளவரசியை மீட்டுவிடுவது என்று உறுதி பூண்டான். அதே நினைவாக காட்டிற்குள் விறகு வெட்ட சென்றான்.
அங்கு பட்டுப்போன ஒரு மரத்தை வெட்ட முயன்றபோது அங்கு மரத்தின் அடியில் கரையான் புற்று வைத்திருந்தது. இவன் புற்றைக் கலைக்க முயன்றபோது, அந்த கரையான்கள் கலைந்து ஓடின. அப்போது ஒரு கரையான் மெல்ல அவனருகில் வந்து பேசியது, அன்பு நண்பா! என்று அழைத்தது.
முதலில் யார் பேசுவது என்று தெரியாமல் ”யார் யார் பேசுவது?” என்று கேட்டான் விவேகன்.
” நான் தான் நண்பா! சற்று கீழே குனிந்து பார்!” என்றது கரையான்.
”அடடே நீ பேசக்கூட செய்வாயா?”
”நான் ஓர் கந்தர்வன்! ஓர் முனிவரின் சாபத்தால் இப்படி கரையானாக உள்ளேன்! இந்த இடத்தில் ஆயிரக்கணக்கான கரையான்கள் உள்ளோம்! எங்கள் இடத்தை கலைக்காதே! பல ஆண்டுகளாக நாங்கள் இங்கே இருக்கிறோம்! கரையான்கள்தானே என்று அலட்சியப்படுத்தாதே! எங்கள் வாழிடத்தினை அழிக்காமல் இருந்தால் கட்டாயம் உனக்கு உதவி செய்வேன்!” என்றது அந்த் கரையான்.
”நண்பா! என்று அழைத்துவிட்டாய்! நண்பனுக்கு துரோகம் செய்வது இல்லை நான்! உங்கள் வாழிடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்! நான் வேறிடத்தில் விறகு பார்த்துக் கொள்கிறேன்!” என்று விவேகன் புற்றை கலைக்காமல் விட்டுவிட்டு அகன்றான்.
”நண்பா! உனக்கொரு உதவி தேவைப்படுகையில் கரையான் நண்பா என்று அழை! நான் கட்டாயம் வந்து உதவி செய்வேன். இன்னொரு அற்புத சக்தியும் உனக்குத் தருகிறேன்! இது பூதங்களை வசியப்படுத்துவது ஆகும். இந்த மந்திரத்தை உச்சரித்தால் பூதங்கள் உன் சொல்லைக் கேட்கும்” என்று ஒரு மந்திரத்தை கற்றுத் தந்தது அந்த கரையான்.
நன்றி சொல்லி புறப்பட்டான் விவேகன். வேறொரு இடத்தில் விறகுகளை வெட்டி கட்டிக் கொண்டு புறப்படுகையில் மிகவும் பசி எடுக்கவே அருகில் இருந்த ஓடையின் அருகில் விறகை வைத்துவிட்டு ஓடையில் இறங்கி முகம் கை கால் கழுவி சாப்பிட தான் கொண்டு வந்திருந்த கட்டு சோற்று மூட்டையை அவிழ்த்தான்.
அப்போது தம்பி! என்று ஒரு குரல் அழைத்தது. அங்கே ஓர் முதியவர் நின்றிருந்தார்.
” ஐயா! வாருங்கள்! பசியாறுகிறீர்களா? என்னிடம் பழைய சோறுதான் இருக்கிறது! பரவாயில்லையா? ”என்றான் விவேகன்.
”பரவாயில்லை தம்பி! நான் மிகுந்த பசியோடு இருக்கிறேன்! கொடு!” என்று கைகளை நீட்டினார் அந்த முதியவர்.
விவேகன் பிசைந்து பிசைந்து தர மொத்த உணவையும் அவரே உண்டுவிட்டார்.
“அடடா! மொத்த உணவையும் நானே உண்டுவிட்டேனே! உன் பசிக்கு என்ன செய்வாய் பாவம்!” அவர் வருத்தப்பட்டார்.
“எனக்கொன்றும் அப்படி பசியில்லை ஐயா! உங்கள் பசி தீர்ந்ததா? தீரவில்லை எனில் அருகில் ஏதாவது மரங்களில் பழங்கள் இருக்கிறதா? என்று பார்க்கட்டுமா?”
”தேவையில்லை தம்பி! உன் பசியை மறைத்து என் பசியை போக்கினாய்! உன் இரக்க குணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது! நான் ஒரு மந்திரவாதி! பல கொடுமைகள் செய்தமையால் என்னை காட்டில் விரட்டி விட்டார்கள்! என்னை பற்றி அறிந்தவர்கள் எனக்கு உதவுவது கிடையாது. நானும் உதவ மறுப்பவர்களை சபித்துவிடுவேன். நீ என் பசியை போக்கி மகிழ்வைத் தந்தாய்! உனக்கொரு மந்திர உபதேசம் செய்கிறேன்! இது உனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நீ இந்த நாட்டு இளவரசி மீது ஆசை வைத்துள்ளாய். அவள் இந்த காட்டில் நடுவில் இருக்கும் மாய மாளிகையில் உள்ளாள். அந்த மாளிகையைச்சுற்றி மந்திரக் காவல், பூதங்களின் காவலோடு மனிதர்கள் கண்ணில் படாத மாளிகையாக அது அமைந்துள்ளது. இந்த மந்திரத்தை ஜெபித்தால் அந்த மாளிகை உன் கண்ணுக்குத் தெரியும். அதே சமயம் பிறர் கண்ணுக்கு நீ தெரிய மாட்டாய். பூதங்கள் கண்ணுக்கு மட்டும் தென்படுவாய் அதை நீ சமாளித்து வெற்றி பெறுவாய்!” என்று மந்திர உபதேசம் செய்தார்.
”இப்போதே நடுக் காட்டிற்கு செல்! இந்த மந்திரத்தை சொல்! அந்த மாளிகை உன் கண்ணுக்கு புலப்படும். அங்கே காவலிருக்கும் விலங்குகள், மனிதர்கள் கண்ணில் நீ தென்பட மாட்டாய். அதே சமயம் பூதங்கள் கண்ணில் தென்படுவாய் உஷாராக இரு!” என்றார்.
விவேகன் அவரிடம் விடைபெற்று நடுக்காட்டிற்கு வந்தான். மந்திரவாதி சொன்ன மந்திரத்தை உச்சரித்தான். மறுகணம் அந்தமலையும் மாய மாளிகையும் கண்ணில் பட்டது. அதோ அதன் உப்பரிகையில் இளவரசி!
மலையில் எப்படி ஏறி மாளிகையை அடைவது? யோசிக்கையில் பூதங்கள் இரண்டு அவன் முன் கோரமாக சிரித்தபடி வந்தன. உடனே விவேகன் கரையான் சொல்லிய மந்திரத்தை உச்சரித்தான். இப்போது அந்த பூதங்கள் அவனை வணங்கி நின்றன.
”என்னை மலை மீது ஏற்றிவிடு!” என்றான் விவேகன். பூதம் அவனை மலைமீது விட்டது. உருவம் இல்லாத அவன் எளிதாக மாளிகை காவலைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டான். இளவரசி இருந்த அறையை பார்த்தான். மரத்தால் ஆன பெருங்கதவு பொருத்தப்பட்டு இருந்தது. சன்னல்கள் அனைத்தும் கண்ணாடிக் கதவுகள் காற்றுக்கூட நுழைய முடியாத வகையில் சார்த்தப்பட்டு இருந்தது. சன்னல் வழியாக பார்க்கையில் இளவரசி மஞ்சத்தில் படுத்திருப்பதை காண முடிந்தது.
”கரையான் நண்பா!” என்று மனதிற்குள் நினைத்தான். மறுகணம் கரையான் அவன் முன் தோன்றியது. ”நண்பா! இளவரசியை இங்கிருந்து மீட்டுச்செல்ல வேண்டும். உள்ளே நுழைய நீங்கள் தான் வழி ஏற்படுத்த வேண்டும்.”
அடுத்த நொடியில் பல்லாயிரக் கணக்கான கரையான்கள் அந்த கதவை சூழ்ந்தன. சில மணி நேரத்தில் கதவை அரித்து பெரிய ஓட்டையை ஏற்படுத்தின. கரையான்களுக்கு நன்றி சொல்லிய விவேகன் அதனுள் நுழைந்தான் விவேகன். சுய உருவம் பெற்றான்.
”இளவரசி!” என்று அழைத்தான்.
விவேகனின் அழகும் திறமையும் ரத்னமாலாவை கவர்ந்தது. ”நீ.. நீங்கள் யார்? எப்படி? இங்கு வந்தீர்கள்?”
விவேகன் நடந்த அத்தனையும் கூறினான். இளவரசி மீது தனக்கிருக்கும் அன்பையும் கூறினான். பின்னர் முனிவர் கூறிய மந்திரத்தை உச்சரித்து இளவரசியையும் மறையச்செய்து இருவரும் ஓட்டை வழியாக வெளியே வந்தனர். பூதத்தினை அழைத்து நாட்டில் கொண்டு விடச்சொன்னான்.
இருவரும் அரண்மனையை அடைந்ததும் மீண்டும் சுய உருவம் பெற்றனர். அரசன் வெற்றி வீரன் நடந்த அத்தனையும் கேட்டார். இளவரசிக்கு ஏற்ற கணவன் கிடைத்துவிட்டதில் மகிழ்ந்தார்.
அப்புறம் என்ன? விவேகன் இளவரசியை மணந்துகொண்டு பன்னெடுங்காலம் சிறப்பாக வாழ்ந்தான். அரசனின் மறைவுக்குப்பின் அந்த நாட்டின் அரசனாகவும் சிறப்பாக ஆட்சி செய்தான்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!