நாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்!
எனது எண்ணங்கள் தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் அவர்கள் வீட்டு நாய்க்குட்டி ஜாக்கி இறந்தது குறித்தும் அதன் நினைவாக தெரு நாய்களுக்கு உணவிட்டு வருவதாக ஓர் பதிவு இட்டிருந்தார். இணைப்பு: தெரு நாய்களும் நானும்அதையொட்டி எனக்கும் எங்கள் வீட்டு நாய்க்குட்டிகள் நினைவு வந்துவிட்டது.
நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் தான் நாய்க்குட்டி வளர்ப்பு துவங்கியது. அதற்கு முன்பே சில பூனைக்குட்டிகள் வீட்டில் வளர்ந்துவந்தன. அதைப்பற்றி பசுமை நிறைந்த நினைவுகள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயம், ஓர் மழை நாளில் வெள்ளை நாய் ஒன்று எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டது. பெண் நாய். எங்கிருந்தோ தப்பி வந்துவிட்டது. எங்கள் வீட்டில் மீதமான உணவைப் போட அது தங்கி விட்டது. அந்த பெண் நாய் முடி எல்லாம் புசுபுசுவென அழகாகவே இருக்கும்.
சுமார் ஒருவருட காலம் இருந்த அது இரண்டு தடவை குட்டிகள் போட்டது. அந்த குட்டிகளும் அதுவும் என எங்கள் வீட்டருகே யாரும் அண்டவிடாது. அத்தனை அட்டகாசம் செய்யும். இப்படி இருந்த அது திடீரென ஒருநாள் இறந்து போனது. எப்படி என்றே தெரியவில்லை! வீட்டருகே புதரில் இறந்து கிடந்தது. எடுத்து அடக்கம் செய்துவிட்டோம். அதனுடைய குட்டிகள் இரண்டு இருந்தது. அதற்கு பெயரெல்லாம் நாங்கள் வைக்கவில்லை! ஒன்று வெள்ளை நிறம் இன்னொன்று செம்மண் கலர். அவை நீண்டநாட்கள் எங்கள் வீட்டில் வசித்தன.
மிகுந்த உணவை போடுவோம்! பெரிதாக பராமரிப்பு எல்லாம் கிடையாது. அவைகளும் காலப்போக்கில் இறந்து போக ஒரு பெண் நாய் மீண்டும் வந்தது. அது வரும் போதே உடலெல்லாம் புண்களோடு இன்றோ நாளையோ என்ற நிலையில் வந்தது. என் தங்கைக்கு இரக்க குணம் அதிகம். அதற்கு மருந்திட்டு உணவு வைக்க அது நிரந்தரமாக தங்கிவிட்டது. மருந்து தொடர்ந்து போட்டதால் புண்களும் குணமாகி ஆரோக்கியமாக மாறிவிட்டது. அது தன் வேலையை காட்டத்துவங்கியது.
அப்புறம் என்ன? அது பாட்டுக்கு வருஷத்துக்கு மூன்று தடவைகள் குட்டிப் போட்டு இனப்பெருக்கம் செய்து கொண்டிருந்தது. ஒன்று மூன்று நான்கு என குட்டிகள் போட்டாலும் ஆறு மாதம் ஒருவருடம் வரைதான் அதன் குட்டிகள் வாழ்ந்தன. எப்படியோ இறந்து போகும். அது மட்டும் நன்றாக இருக்கும் மறுபடியும் குட்டிகள் போடும்.
என் அப்பாவிற்கு இந்த நாயைக் கண்டாலே கோபம் வரும்! எங்கிருந்தோ வந்து இங்கு தங்கிவிட்டதே! என்று துரத்தி துரத்தி அடிப்பார்! ஆனால் அது திரும்பவும் வந்துவிடும். கடைசியாக அது மூன்று குட்டிகள் போட்டது. அதில் ஆண் நாய் இரண்டு பெண் ஒன்று. அதில் ஓர் ஆண் நாய் மட்டும் தாயைப்போலவே இருந்தது. ரொம்பவும் சுறுசுறுப்பு! யாரையும் அண்டவிடாது. துரத்தி துரத்தி அடிக்கும். இந்த தாயும் குட்டியும் சேர்ந்துவிட்டால் அப்புறம் எதுவுமே வரமுடியாது அவ்வளவு ஆக்ரோஷம்.
பன்றி மேய்ப்பவர்கள் எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கழனியில் பன்றிகளுடன் வந்த போது இந்த நாய் அவர்களை துரத்தி அடித்து உள்ளது. அவர்கள் ஒரு மண்ணாங்கட்டியை எடுத்து இதன் வயிற்றில் வீசி விட்டார்கள் பயங்கரமாக அழுதபடி வந்து எங்கள் வீட்டில் படுத்துக் கொண்டது. உணவே எடுக்கவில்லை! அப்பாவுக்கு கூட கொஞ்சம் வருத்தமாக போய்விட்டது. பன்றி மேய்ப்பர்கள் மந்திரம் மூலம் நாயின் வாயைக் கட்டிவிடுவார்களாம்! இரை எடுக்காமல் இறந்து போய்விடுமாம். எங்கள் அப்பாவிற்கும் இந்த விஷயமும் மாற்று மந்திரமும் தெரியும் என்பதனால் மாற்று மந்திரம் செய்தார். மறுநாள் முதல் உணவு எடுக்கத் துவங்கியது. ஆனால் பழையபடி ஆக்ரோஷம் கிடையாது.
இந்த ஆண் நாய் ஒரு பெண் கருப்பு நாயை ஒரு சமயம் அழைத்துவந்துவிட்டது. இரண்டும் தங்கிவிட்டது. இவைகள் இரண்டும் சேர்ந்து குட்டிகள் போட மீண்டும் நாய்கள் பெருகிவிட்டது. ஊரில் எல்லோரும் உங்கள் வீட்டு நாய்க்குட்டி கோழியை கவ்வி வந்துவிட்டது. ஆட்டை கடித்துவிட்டது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இதன் நடுவில் ஊரில் நாய்த்தொல்லை அதிகம் ஆகிவிட்டது என்று பஞ்சாயத்தில் நாய்களை சுட்டுத் தள்ள குறவன் ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஊர் முழுக்க நாய்கள் நிறைய சுட்டு தள்ளினார்கள். பரிதாபமாக இருந்தது. எங்க வீட்டு நாய் தப்பித்ததா? அதை அப்புறமா சொல்றேன்!
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!