நாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்! பாகம் 2
எங்கிருந்தோ வந்து சேர்ந்த நாய்க்குட்டி ஒன்று எங்கள் வீட்டில் தங்கி இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்ததை சொன்னேன். அப்போது ஊரில் நாய்கள் தொல்லை என்று குறவர்களை கூப்பிட்டு சுட்டுத் தள்ள பஞ்சாயத்தில் முடிவு செய்து சுட்டும் தள்ள ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் வீட்டில் இருந்த பெண் நாய் மற்றும் ஆண் நாய் அதன் குட்டிகள் என மொத்தம் நான்கு இருந்தது. இதையெல்லாம் எப்படி பாதுகாப்பது என்று எங்களுக்கு யோசனை.
என் தங்கை அழுதே விட்டார். இந்த நாய்களை சுட்டுவிடுவார்களோ? என்று அவர் கண்ணீர் வடித்தது அப்பாவிற்கும் ஏதோ செய்திருக்க வேண்டும். இதற்கிடையில் குட்டிநாய் வழக்கம் போல வெளியே சுற்றுலா சென்றுவிட்டது.
எங்கள் ஊரில் துணிவெளுக்கும் பெண்மணி ஒருவர் நாய் ஒன்று வளர்த்தார். அந்த நாய் நன்கு பெரிதாக வளர்ந்து இருக்கும். ஆக்ரோஷமான நாய். யாரையும் அவர் வீட்டுப்பக்கம் அண்டவிடாது. கடித்து குதறிவிடும். அந்த நாயிடம் கடிபட்டவர்கள் ஊரில் அதிகம். அன்று முதல் வேளையாக அந்தப் பெண்மணி தம் நாயை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தார்.
அந்த நாயைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஊரில் எல்லோரும் சொன்னார்கள். ஆனால் வீட்டில் போய் சுட முடியாது அல்லவா? அவர் வீட்டில் நாயை அடைத்து வைத்திருக்கும் செய்தி எங்களுக்குத் தெரியவந்தது. எங்கள் வீட்டின் பக்கமே கோயில் அதன் காம்பவுண்ட் மதில் சுவராய் நான்கு புறமும் வளர்ந்திருக்க கிழக்கே வாசல்! அதற்கு இரண்டு பெரிய கதவுகளும். ஒரு சிறு திட்டி வாசலும் உண்டு. ( என் வலைப்பூவின் முகப்பில் என் பெண்கள் அமர்ந்து இருக்கிறார்களே அந்த வாசல்) எங்கள் வீட்டில் வளர்த்து வந்த நான்கு நாய்களில் மூன்றினை இந்த கோயில் பிரகாரத்தில் விட்டுவிட்டு கதவை தாழிட்டுவிட்டு வந்துவிட்டோம். அப்போது கோயில் அவ்வளவு பிரபலம் இல்லை.
காலையில் பூஜைக்குத் திறந்து பின் மூடிவிட்டால் அப்புறம் மாலையில் தான் திறப்போம் யாரும் வர மாட்டார்கள். அவ்வளவு பெரிய பிரகாரத்தில் நாய்களால் சுற்றிவர முடியவில்லை! ஊளையிட்டுக் கொண்டே இருந்தன. வெளியே சென்ற குட்டி நாய் ஒன்று மட்டும் வீடு திரும்பவில்லை! குறவனிடம் மாட்டிக் கொண்டுவிட்டது போலும். இந்த மூன்று நாய்களை எப்படியோ கடவுள் காப்பாற்றிவிட்டார்.
இதற்கப்புறம் கிராமதேவதை கோயில் குடமுழுக்கு ஒன்று செய்கையில் என் தந்தை கலசம் எடுக்கையில் அவர் காதில் நாய் அழும் ஓசை கேட்கிறது! நாய்களை சுட்டு கொன்றுவிட்டீர்களே! அதன் பாவம் கிராமத்தை வதைக்கிறது என்று சொன்னார். ஆனாலும் கிராமத்தினர் அதை லட்சியம் செய்யவில்லை.
துணி வெளுக்கும் பெண்மணியின் நாயும் கட்டுக்காவலை மீறி வெளியே வந்து இருக்கிறது. அவ்வளவுதான் போட்டுத் தள்ளிவிட்டார்கள். அந்த பெண்மணி பெரிய சண்டையே போட்டார். ஆனால் துரத்திவிட்டார்கள். அதற்கப்புறம் ஊரில் நாய்களே குறைந்து போய்விட்டது. பாதிக்கும் மேல் ஓடிப்போய்விட்டன.
துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பி பிழைத்த நாய்கள் சிலநாட்கள் வாழ்ந்தன. அப்புறம் வயல் வெளியில் பாம்பு தீண்டி இறந்தன. அந்த தாய் நாயை வெறிபிடித்த ஓர் நாய் கடித்துப் போட்டுவிட்டது. அதைக் காப்பாற்றச் சென்ற ஓர் நாயும் செத்துப் போனது. பன்றி மேய்ப்பவர்கள் கல்லால் அடித்ததாக சொன்னேனே அந்த நாய் மட்டும் ரொம்ப நாள் வாழ்ந்தது. அது ஒரு பெண் நாயைக் கூட்டிவந்தது என்றேன் அல்லவா? அந்த நாய் வருடம் மூன்று முறை குட்டிகள் போடும். அந்த குட்டிகள் என்ன பாவம் செய்தனவோ? வளரும் முன்னரேயே இறந்து போய்விடும். சில குட்டிகள் நன்கு வளர்ந்து இருக்கும் பார்த்தால் ஏதாவது விபத்து அல்லது பாம்பு தீண்டி இறந்து கிடக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் எல்லாம் இந்த நாய்களுக்கு பிஸ்கெட் முதலானவற்றை போடுவார்கள். சென்ற வருடம் ஒருநாள் திடீரென அந்த ஆண் நாயைக் காணவில்லை! இரண்டு நாட்களாக தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை. எங்காவது சென்றிருக்கும் வந்துவிடும் என்று பார்த்தோம். ஆனால் வரவில்லை. அப்புறம் பார்த்தால் எங்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள ஓர் வயல்வெளியில் இறந்து கிடந்தது. அங்கு ஏதோ பாம்பு தீண்டி இறந்து போனது போலும். மனது மிகவும் கனத்து போனது. பின்னர் பெண் நாயும் அதன் குட்டிகளும் மட்டும் இருந்தன.
இந்த பெண் நாய் பல முறை குட்டிகள் போடும். சில சமயம் மழைக்காலங்களில் அதன் குட்டிகள் தவிக்கும். அந்த சமயங்களில் மழையில் நனையாதவாறு சிறு பந்தல் தடுப்புக்கள் அமைத்து கோணிகள் போட்டு விடுவோம். அதன் குட்டிகள் வளர்ந்து எங்கள் குழந்தைகளோடு விளையாடும்.
சென்ற மாதத்தில் ஒருநாள் பெண் நாயைக் காணவில்லை! அதன் குட்டியும் இல்லை. சரி எங்காவது சென்றிருக்கும் வந்துவிடும் என்று பார்த்தோம். ஆனால் மறுநாள் எங்கள் வீட்டருகே இருந்த வயல் புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. சென்று பார்த்தபோது நாய் இறந்து கிடந்தது. அன்றே குட்டி நாயும் சாலையில் அடிபட்டு இறந்து போனதாய் தகவல் கிடைக்க எனக்கு வருத்தமாக போய்விட்டது. என் அப்பாவிற்கு வருத்தம் இருந்தாலும் ஒருவிதத்தில் மகிழ்ச்சி! இந்த பெண் நாய் அடிக்கடி குட்டி போட்டுவிட்டு அந்த குட்டிகள் கோயிலில் அசுத்தம் செய்து பாழ் செய்துவிடும். அந்த தொல்லையில் இருந்து விடுதலை என்று சொன்னார். அந்த நாயை அவரே எடுத்துச் சென்று தொலைவில் புதைத்துவிட்டார்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக எங்களோடு வசித்த நாய்க் குடும்பம் முற்றிலும் அழிந்துவிட்டது. இதே போல்தான் பூனைக்குடும்பமும் முற்றிலும் அழிந்து போனது. எதுவும் நிலையில்லை! என்பதை இது சொல்கிறதோ என்னவோ?
இப்போது வேறு சில நாய்கள் வீட்டை சுற்றி வருகின்றன. ஆனால் எதுவும் தங்குவது இல்லை! நல்லதொரு நாய்க்குட்டியை பிடித்துவந்து வளர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பைரவர் அருள் கிடைக்கிறதா பார்ப்போம்!
( இந்த நாய்க்குட்டிகள் சிலவற்றை என் மொபைலில் சிலமுறை படம் எடுத்து இருக்கிறேன்! இப்பொழுது தேடுகையில் எதுவும் சிக்கவில்லை! அதுவும் எனக்கு வருத்தமே!)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!