மதுவிலக்கும் என் மனப்போக்கும்!
தற்போது தமிழகமே மதுவிலக்கு பற்றி பேசுகின்றது. எல்லா நாளேடுகள் டீவிகள்,மீடியாக்கள் எல்லாவற்றிலும் மதுவிலக்கு பற்றிய செய்திகள், தலைவர்களின் அறிக்கைகள், மாணவர்களின் போராட்டங்கள் என்று ஒரே அல்லோகலப் படுகிறது.
மது ஓரு தீமையான அரக்கன். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இத்தனை நாள் அவனை நாட்டில் நடமாடவிட்டு இனத்தைப் பெருக்கி பள்ளி பிள்ளைகள் வரை அவனுக்கு அடிமையாக்கி விட்டபின் திடீரென தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஞானோதயம் உருவாகி மதுவிலக்கு செய்ய வேண்டும் என்று போராடத் துவங்கியுள்ளதுதான் வேடிக்கை ஆக இருக்கிறது.
பாவம் தமிழக அரசியல் கட்சிகளுக்காவது இதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது. பெண்களின் வாக்குகளை அள்ளி அடுத்த ஆட்சியை பிடித்துவிடலாம் முதல்வர் ஆகிவிடலாம் என்று கனவில் மிதக்கின்றனர். இத்தனை நாள் இவர்களுக்கு இந்த மதுவின் தீமை கொடூரம் எல்லாம் தெரியவில்லை. இப்போது திடீரென யாரோ அவர்கள் முன் தோன்றி மது கெட்டது என்று உபதேசித்துவிட்டனர் போல. உடனே நிறுத்து! என்று முழக்கமிட ஆரம்பித்து விட்டனர்.
பாவம் சசிபெருமாள். காந்தியவாதி! இந்தகாலத்தில் அஹிம்சாவாதிகளுக்கும் அஹிம்சைப் போராட்டங்களுக்குக் கூட விளம்பரமும் ஆள்பலமும் தேவை என்று உணராதவர். டிராபிக் ராமசாமியிடம் இவர் ஆலோசனை பெற்று இருந்தால் ஒன்றிரண்டு உதிரிக் கட்சிகளாவது இவரது போராட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கும். ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பி இருக்கும். இதெல்லாம் தெரியாமல் தன் குடும்பத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல் செல்போன் டவரில் ஏறி உயிரை இழந்துவிட்டார்.
அவர் இறந்துவிட்டார் என்று குடிமகன்கள் யாராவது குடியை நிறுத்திவிட்டார்களா என்ன? அன்று கூடுதலாக குடித்து மகிழ்ந்திருப்பார்கள் எதிரி ஒருவன் ஒழிந்துவிட்டான் என்று. கல்லூரிமாணவர்கள் உடனே டாஸ்மாக் கடைகள் முன் ஆர்பாட்டம் செய்ய முழு பாதுகாப்புடன் சரக்கு விற்கிறது தமிழக அரசு. அது பொதுச் சொத்து என்று சேதம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.
அரசே ஓர் போதைப்பொருளை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளை விற்பனை செய்து, அதை எதிர்ப்பவர்களை கைது செய்து பாதுகாப்புடன் மது விற்பனை செய்வது போன்ற வினோதமான நடைமுறைகள் நம் தமிழகத்தில் தான் நடக்கும்.
இந்த மதுவிலக்கு இப்படி ஆர்பாட்டங்கள் செய்வதால் வந்துவிடுமா? அப்படியே அரசு பயந்துபோய் டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் மூடிவிட்டால் மட்டும் குடிப்பழக்கம் குறைந்து போய் குடிமகன்கள் திருந்திவிடுவார்களா?
பக்கத்து மாநிலங்களுக்குத் தாவுவார்கள், கள்ளசாராயம் காய்ச்சுவார்கள், அதில் பலர் உயிர் இழப்பார்கள், போலீஸ் ரெய்டு வரும், மாமூல் குவியும் கண்டு கொள்ள மாட்டார்கள். இந்தியா முழுவதும் மதுவை தடை செய்ய முடியுமா? அப்படியே தடை செய்தாலும் கள்ளச்சாரயத்தை தடை செய்ய முடியுமா?
மது என்பது இன்று நேற்றல்ல! சங்ககாலம் தொட்டே வாழ்வியலில் கலந்து வந்துள்ளது. அன்றும் குடித்தார்கள், இன்றும் குடிக்கிறார்கள், அன்று குறைவாக குடித்தார்கள் அன்று அரசு விற்கவில்லை! இன்று அரசே விற்கிறது இதுதான் வித்தியாசம்.
மது அரக்கனை ஒழிக்க போராட்டம் நடத்திய அரசியல் கட்சி தொண்டர்களில் எத்தனை பேர் மது குடிக்காதவர்கள்? இன்று போராட்டம் செய்த கல்லூரி மாணவர்கள் எத்தனை பேர் குடிக்காதவர்கள்? அவர்கள் வீட்டில் பெற்றோர்கள் எத்தனை பேர் குடிக்காதவர்கள்? எல்லோரும் குடிப்பவர்களாகவே இருப்பார்கள்? அல்லது குடிக்காதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
ஒரு பொருளை தடை செய்ய வேண்டுமெனில் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். இல்லை அதன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும். மதுவை பொருத்தவரை உற்பத்தியை தடை செய்வது என்பது பெரும் கஷ்டம். எனவே பயன் பாட்டை தடை செய்தால் மதுவிலக்கில் வெற்றி பெறலாம்.
இத்தனை மாணவர்கள் மதுக்கடைகளை முற்றுகை இட்டனர் அல்லவா மூட வேண்டும் என்று. அவர்கள் முதலில் தங்கள் போராட்டத்தை தங்கள் இல்லங்களில் தொடர வேண்டும். குடிக்கும் தந்தை, அண்ணன், நண்பன் இவர்களை குடிக்காதீர்கள் என்று அறிவுறுத்த வேண்டும்
.
மறுப்பவர்களுடன் உறவை துண்டிக்க வேண்டும். இதற்கு முதலில் மாணவர்கள் அவர்கள் குடிக்காமல் இருக்க வேண்டும். அந்த துணிச்சல் இருந்தால், ஒரு வீட்டில் ஆரம்பிக்கும் மாற்றம் அப்படியே தெரு, ஊர், நகரம் என விரிவடையும். சில மாதங்களில் ஓரு மாநிலமே திருந்த வாய்ப்பு இருக்கிறது.
புறக்கணிப்பு என்பது தான் தண்டணைகளில் கொடுமையான தண்டணை! நான் டியுசன் எடுக்கையில் தவறு செய்யும் மாணவர்களை கண்டித்தும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களுடன் முகம் கொடுத்து பேசமாட்டேன். வகுப்புக்கு செல்வேன், பாடம் எடுப்பேன். ஆனால் பேசமாட்டேன். அவர்களுக்கு தம் தவறு புரியும். பின்னர் வலிய வந்து தவறை ஒப்புக்கொண்டு திருந்திவிடுவார்கள்.
அது போல தவறு செய்யும் ஒவ்வொருவருக்கும் அது தவறு என்று தெரிந்தும் தட்டிக்கேட்க பயப்படும் குடும்ப உறுப்பினர்களாலும் அல்லது அவர்களும் இப்படி குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாலும் தைரியமாக குடிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் எனில் ஒவ்வொரு வீட்டிலும் புரட்சி வெடிக்க வேண்டும். குடிக்கும் கணவருடன் மனைவியும், அவர்களின் பிள்ளைகளும் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும். இது நல்ல பலன் தரும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இப்படி செய்யாமல் எத்தனை சசி பெருமாள் வந்தாலும் மதுவை ஒழிக்க முடியாது என்று தோன்றுகிறது.
அரசியல் கட்சிகளும் குடிப்பவர்களுக்கு சீட் தர முடியாது என்று தைரியமாக அறிவிக்க வேண்டும். வாக்காளர்களும் குடிப்பவர்களுக்கு வாக்களிக்க மறுக்க வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால் மது ஒழியும் என்று என் மனம் சொல்கிறது. இதெல்லாம் தமிழகத்தில் நடக்குமா? கனவு காண்போம்! மெய்ப்படும் என்று நம்புவோம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!