ஊடகங்களே ஏன் இந்த அவசரம்?
அம்மாவின் ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு வரும் முன்னரே அவசரப்பட்டு நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டது என்று தவறான செய்தியைக் கொளுத்திப் போட்டுவிட்டன ஊடகங்கள். மதியம் இரண்டு மணி வாக்கில் 2.30க்கு வழக்கு ஒத்தி வைப்பதாக தகவல். மூன்று மணிக்கு அம்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டது என்று தினமலர், தி இந்து முதலியவற்றில் செய்திகள் பரவ பேஸ் புக் போராளிகள் வெளுத்துக் கட்டினார்கள்.
ஆளாளுக்கு விதவிதமாய் ஸ்டேட்டஸ்! சிலர் சரியென்றும் சிலர் தவறென்றும், சிலர் பவானி சிங்கின் நேர்மையை கிண்டல் செய்தும் இன்னிக்கே தீபாவளி ஸ்டார்ட் ஆயிருச்சு! என்றும் விதவிதமான நிலைத்தகவல்கள்!
இவர்கள் அத்தனை பேரையும் நிலைகுலையவைத்தது உயர்நீதிமன்ற தீர்ப்பு. ஜாமீன் நிராகரிப்பு என்பதுதான் அது. அவசர அவசரமாக ஊடகங்கள் தங்கள் தகவல்களை மாற்றி அமைத்தன.
நான் கேட்பது எல்லாம் ஏன் இந்த அவசரம்? சரியான செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்களே இப்படி தவறான செய்திகளை பரப்பினால் அப்புறம் யாரை நம்புவது?
இப்போதே நம்மிடையே இருக்கும் ஒவ்வொரு ஊடகமும் ஓர் கட்சியை சார்ந்துதான் இருக்கிறது. பொதுவான தூர் தர்ஷன் கூட ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் நிலைமை. இந்தநிலையில் கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சி இல்லாமல் அவசரப்பட்டு அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியம் என்ன?
அன்று வழக்கில் தண்டனை கொடுத்தபோது கூட விடுதலை என்று சில ஊடகங்கள் தவறான தகவல்களை தந்தன. இன்று மீண்டும் அப்படி ஒரு தவறான பரப்புரை. தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் ஊடகங்களே இப்படி அதிக விற்பனைக்கும் ஹிட்ஸுக்கும் ஆசைப்பட்டு, அதுவும் இல்லாமல் செய்திகளை முந்தி தருவதில் சிறப்பானவர்கள் என்பதை காட்டிக்கொள்வதிலும் நம்பர் ஒன் என்று போட்டுக் கொள்ளவும் ஆசைப்பட்டு இப்படி பொய்யான தகவல்களை தருகின்றன என்பது வேதனைப்படவைக்கும் செய்தி.
தன் வீட்டில் பெண்டாட்டியை நம்பாதவன் கூட தான் தொடர்ந்து படிக்கும் நியுஸ்பேப்பரை வேதமாய் நம்புவான். அதில் செய்தி வந்துவிட்டால் அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொள்வான். இந்த பேப்பர்ல போட்டிருந்துச்சு! அது உண்மையாகத்தான் இருக்கும் என்பான். பல சரித்திர சம்பவங்கள் ஊடகங்கள் எப்படி நாட்டில் ஆட்சியையே மாற்றி அமைத்தன என்பதை சொல்லுகின்றன. அப்படி இருக்கையில் ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டாமா? கொஞ்சமாவது சமூக அக்கறை வேண்டாமா?
ஏற்கனவே கொலை கொள்ளை கற்பழிப்பு செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து அதை விதவிதமாய் வர்ணித்து விற்பனையை அதிகரிக்க என்னவெல்லாமோ இழித்தனங்கள் செய்யும் ஊடகங்களின் போக்கு கவலைப்பட வைக்கிறது. முன்னனி நாளிதழ் ஒன்று வைக்கும் தலைப்புக்கள் இதற்கு ஓர் உதாரணம்.
யாரோ ஓர் வக்கீல் சொன்னதை செய்தியாக்கி தப்பான செய்தியை பரப்ப வேண்டியதன் அவசியம்தான் என்ன? அவசரம்தான் என்ன? அதிமுக காரனை விட அதிக ஆவலாக இருந்த ஊடகங்களே உங்கள் முகத்தில் நீங்களே கரியிட்டுக் கொண்டீர்களே!
ஊடகங்களே! உங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம் என்றால் வேறு ஏதாவது தொழில் செய்து கொள்ளுங்கள்! செய்தித்துறை என்பது நாலாவது தூணாக பார்க்கப்படுகிறது. அந்த தூணே அரித்துப் போனால் அப்புறம் மக்கள் யாரை நம்புவார்கள்!
உங்கள் விற்பனைக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் அப்பாவி மக்களை ஏமாற்றாதீர்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!